வடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு?

0

அகில உலக அடங்கா சித்தர்கள் சங்கம் தன் நெற்றிக்கண்ணை திறந்து திறந்து கவனித்தாலும், இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட நகர்வை கணிக்கவே முடியாதளவுக்கு ஆகிவிட்டது சுச்சுவேஷன். “எப்ப கூப்பிட்டாலும் கால்ஷீட் ரெடி” என்று கமல் பச்சைக்கொடி காட்டியிருக்கிறாராம். ஆனால் லைகாவின் ‘போர்டு’ மீட்டிங்கில் ஒரு ‘சாக்பீசாக’ எழுத வேண்டிய ஷங்கர், அந்த ஆபிஸ் பக்கமே தலைவைக்க தயங்குகிறாராம். ஏன்?

வடிவேலுதான் காரணம்! இதென்னய்யா காட்டுப்புலிக்கும், சட்டிப்புளிக்குமான தொடர்பு? சும்மா பினாத்தாதேள்… என்றெல்லாம் இதை படிப்பவர்கள் கடுப்பானாலும் நிஜம் அதுதான்.

இம்சை அரசன் 24 ம் புலிகேசி விவகாரத்தை ஸ்மூத்தாக டீல் பண்ணாமல் சுமார் ஆறரை கோடி பணத்தை அதில் வேஸ்ட் செய்துவிட்டதாக ஷங்கர் மீது கோபமாகி கிடக்கிறதாம் லைகா. இப்பவும் ஷங்கர் மனசு வைத்தால், வடிவேலுவை கைக்குள் கொண்டு வந்துவிடலாம். ஆனால் இரும்பு மனசோடு இந்த விவகாரத்தை அவர் அணுகுகிறார் என்றும் கருதுகிறதாம். அந்த கோபத்தோடுதான் அவரை மீட்டிங்கில் கலந்து கொள்ளவும் அழைக்கிறார்களாம்.

வந்தால் இந்தியன் 2 பற்றியும் ஒரு முடிவுக்கு வரலாம் என்று கருதுகிற லைகாவுக்கு, ஷங்கரிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை என்பதுதான் ஆத்திரமூட்டி வருகிறதாம்.

இதற்கிடையில் நாலாபுறமும் வலை விரித்திருக்கும் ஷங்கர், நல்ல நிறுவனம் ஏதாவது சிக்கினால் லைகாவுக்கு தன்னால் முடிந்தளவுக்கு பலமிக்க டாட்டா ஒன்றை காட்டிவிட்டு, “வடிவேலுவை நீங்களே டீல் பண்ணுங்க” என்று ஒதுங்கிக் கொள்வதாகவும் திட்டம் வைத்திருக்கிறாராம்.

சண்டையில கிழிஞ்ச சட்டையை சந்தையில விற்கிறது கஷ்டம்தான்!

Leave A Reply

Your email address will not be published.