வைகை எக்ஸ்பிரஸ் / விமர்சனம்

0

ஆணானப்பட்ட ஹரியையே அண்ணாந்து பார்க்க வச்சுருவாங்க போலிருக்கே! போலீஸ் படத்தில் ஜீப் இருக்கும். துரத்தல் இருக்கும். ஆனால் திரைக்கதையில் ஜீப் வேகத் துரத்தல் இருந்தால்தான் அது ஹிட்! அந்த விஷயத்தில் அதிகம் மெனக்கெடும் டைரக்டர் ஹரியே, ‘பிரமாதம்யா…’ என்று பாராட்டுவது போல ஒரு திரைக்கதை துரத்தல்தான் இந்த ‘வைகை எக்ஸ்பிரஸ்’. முதல் ஷாட், முதல் வசனம் என்று எடுத்த எடுப்பிலேயே கதை ஓட ஆரம்பித்து விடுகிறதே… அதற்காகவே ஒரு சரணம் அண்ணாத்தே!

ஒரு ரயிலில் பயணம் செய்யும் மூன்று இளம்பெண்கள் வெவ்வேறு விதங்களில் கொல்லப்படுகிறார்கள். அவர்களை யார் கொன்றது? அதே ரயிலில் பயணம் செய்யும் தீவிரவாதி ஆர்.கே.செல்வமணி கொன்றாரா? அல்லது வேறு யாராவதா? அயர்ன் பண்ணிய கோட், ஆடிக்காற்றில் பறந்தபடி அங்கும் இங்குமாய் கையில் துப்பாக்கியுடன் விரட்டியபடி என்ட்ரி கொடுக்கும் ஹீரோ ஆர்கே, பி அண்டு சி ஏரியாவில் பிக்சட் டெபாசிட் பண்ணும் நோக்கத்துடனேயே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் போலிருக்கிறது. மனுஷன் சீறியிருக்கிறார் சீறி.

ஒரே ஒரு ரயில். அதற்குள் என்னவெல்லாம் பண்ண முடியும்? ஒரு சாதாரண டீ மாஸ்டருக்கே நாலு வடை, ஒரு வாட்டர் பாட்டில் விற்பதற்குள் நாக்கு தள்ளுமல்லவா? ஆனால் இந்த ரயிலுக்குள் ஒரு மாயா ஜாலமே நடத்துகிறார்கள் ஷாஜி கைலாஷும், ஒளிப்பதிவாளர் சஞ்சீவ் சங்கரும். அசர வைக்கும் லைட்டிங்ஸ். அற்புதமான கோணங்கள் என்று மிரட்டலோ மிரட்டல்!

கொலையான பெண்கள் மூவரில், நீது சந்திராவுக்கு மட்டும் டபுள் ரோல். யாரும் எதிபாராத திருப்பம்தான் அது. அவரும் முடிந்தளவுக்கு இரண்டு கேரக்டர்களுக்கும் பெரிய வித்தியாசம் காட்டுகிறார். நடிகையாகவே வரும் இனியா, பிரஸ் ரிப்போர்ட்டராக வரும் கோமல் ஷர்மா, சுஜா வாரூணி என்று அவ்வளவு க்ரைம்களுக்கு நடுவிலும் வண்ண வண்ண பூக்களாக ஜொலிக்கிறார்கள். இனியாவுக்கு அக்காவாக நடித்திருக்கும் சின்னத்திரை புகழ் அர்ச்சனா ஓ.கே. அவருக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பவர் மறைந்த கல்பனா போலிருக்கிறது. பொருந்தலையே தாயீ…

டிடிஆர் வேடத்தில் வரும் எம்.எஸ்.பாஸ்கர் லொட லொடவென பேசிக் கொண்டேயிருக்கிறார். இந்த படத்தை பார்க்கும் டிடிஆர்கள் யாரும், “இந்த வேலை பார்ப்பியா, பார்ப்பியா?” என்று தலையிலடித்துக் கொள்வது நிச்சயம்.

ஆர்.கே.செல்வமணிக்கு பெரிய பில்டப் கொடுத்திருக்கிறார் ஷாஜி கைலாஷ். செல்வமணி இனி தொடர்ந்து நடிக்கவும் செய்யலாம். அந்தளவுக்கு இருக்கிறது ஸ்கிரீன் பிரசன்ட்டேஷன்.

ஒரு க்ரைம் திரில்லர் படத்தில் கொலையாளி அவராக இருக்கும்… இவராக இருக்கும் என்று யூகிக்க வைத்து, நெற்றியில் நாமத்தை போடுவார்கள். திடுக்கிடும் திருப்பமாக இந்த படத்தின் கொலையாளியை யாரும் யூகிக்கவே முடியாமலிருப்பது சிறப்பு.

எஸ்.எஸ்.தமனின் மியூசிக் பின்னணி, பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மூச்சிரைத்திருக்கிறது. மனோ பாலா, சிங்கமுத்து, மதன்பாபு, ரமேஷ்கண்ணா உள்ளிட்ட பலரும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள். சில காட்சிகளில் வெற்றி. சில காட்சிகளில் வெட்டி!

காதல் படங்களும், ஆவிப் படங்களும், பிளாக் காமெடி படங்களும் சுற்றி சுற்றியடிக்கும் இந்த தருணத்தில், சற்றே வித்தியாசம் கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்கேவுக்கு ஒரு சலாம்! இவரது நம்பிக்கையை பொய்யாக்காத இயக்குனர் ஷாஜி கைலாஷுக்கும் ஒரு செகன்ட் சலாம்!

வைகை எக்ஸ்பிரஸ்- தண்டவாளம் தள்ளாடலே!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.