வல்லதேசம் – விமர்சனம்

0

சண்டைக்கு சேவலைதான் பயன்படுத்துவார்கள். பெட்டைக்கோழி துப்பாக்கி எடுத்தால் எவ்வளவு இன்ட்ரட்ஸ்ட்? அதுதான் இந்தப்படத்திலும். அழகுக்கு மயிலு ஸ்ரீதேவியையும், ஆக்ஷனுக்கு விஜயசாந்தியையும் உதாரணம் காட்டி வந்த சினிமா, இனி ஆக்ஷனுக்கு அனுஹாசனை காட்டினால், ‘ஆமாம்யா ஆமாம்’ என்று ஒப்புக் கொள்ளதான் வேண்டும். அப்படி பாய்ந்திருக்கிறார் அனு. (வாம்மா மின்னலு)

முழு கதையும் லண்டனில்தான் நடக்கிறது. ஏற்கனவே அங்கே குழந்தை குட்டியோடு செட்டில் ஆகிவிட்ட அனுஹசனையே இப்படத்தில் நடிக்க வைத்தால், பிளைட் செலவு மிச்சம். போக்குவரத்து நேரம் மிச்சம் என்றெல்லாம் கூட நினைத்திருக்கலாம். ஆனால், அனு கரெக்ட் சாய்ஸ்.

இந்தியாவிலிருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கு ஒரு ரகசிய தகவல் வருகிறது. லண்டனில் இருக்கும் டேவிட் என்ற தீவிரவாதியால் இந்தியாவுக்கு ஆபத்து என்பதுதான் அந்த தகவல். குற்றவாளியை ஸ்பாட்டிலேயே மடக்கிவிடக் கிளம்புகிறார் இராணுவ கமாண்டர் அனுஹாசன். ஆனால் வந்திருக்கும் ராணுவ அதிகாரி இவர்தான் என்று தவறாக நினைக்கும் வில்லன் கும்பல், அனுவின் கணவரை கொல்வதுடன் குழந்தையையும் கடத்துகிறது.

நாட்டை காப்பாற்றுகிற வேலையை மட்டுமல்ல, குழந்தையை கண்டுபிடிக்கிற வேலையையும் எடுத்துக் கொள்கிற அனு, தன் ஆயுளுக்கும் காட்டியிராத அதிவேக பாய்ச்சலை காட்டி, குழந்தையை எப்படி மீட்கிறார் என்பதுதான் வல்லதேசம்.

அனுஹாசன் மிக சரியான தேர்வு என்பதை அவரது ஆஜானுபாகுவான உடல்வாகே சொல்லிவிடுகிறது. அப்புறம் மின்னல் போய் பாய்ந்து இடி போல உதை கொடுக்கும் அந்த வேகத்திற்கே தனி கைத்தட்டல் தருகிறது தியேட்டர். மற்றபடி லண்டன் பகுதியில் நடித்திருக்கும் எல்லாருமே இலங்கை தமிழர்கள் என்பது பளிச்சென தெரிகிறது. உருவ ஒற்றுமையும் லேசாக குழப்ப… யார் வில்லன் கோஷ்டி. யார் போலீஸ் அதிகாரி என்பதிலெல்லாம் படுபயங்கர குழப்பம்.

இந்தியாவிலிருக்கும் ஒரு ரூமிற்குள் நடந்து நடந்து கட்டளை போடுகிற நாசர் ஒரு கட்டத்தில் கொட்டாவி விட வைக்கிறார்.

இயக்குனரான நந்தாவே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இவருக்கு லண்டனே இருப்பிடம் என்பதால், அந்த நாட்டின் சந்து பொந்தெல்லாம் புறப்பட்டு புலனாய்கிறது கேமிரா. ஓடுகிற ஓட்டத்தில் காட்டப்படும் லண்டன், இலவச விசிட்டாகவே இருக்கும் ரசிகர்களுக்கு.

எஸ்.வி.முத்துக்குமரசாமியின் பின்னணி இசைக்கும் சேர்த்து மனசை லயிக்கக் கொடுக்கலாம்.

ஆங்கிலப்படம் போல ஒரு தமிழ்ப்படம்! அடடே… அதிலேயும் ஒரு தமிழ் லேடி என்பதோடு மனநிறைவு கொள்ளலாம்.

வல்ல தேசம்… அனுவுக்காகவே தரப்பட்ட நல்ல வேசம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.