வீர சிவாஜி விமர்சனம்

0

ஊர் ஊராக திருடும் கூட்டத்தை, ஒண்டி ஆளாக தட்டிக் கேட்பவனே வீர சிவாஜி! கதையும் திரைக்கதையும் தராத பலத்தை, விக்ரம் பிரபுவும், மொட்டை ராஜேந்திரனும், யோகிபாபுவும், ரோபோ சங்கரும் தந்திருக்கிறார்கள். அந்த வகையில் சிவாஜி… சின்ன சின்ன சிராய்ப்புகளோடு தப்பியிருக்கிறார்.

“ஒருத்திய பார்த்தா மனசுக்குள்ள இளையராஜா பாட்டு கேட்கணும்… அவதான் காதலி” என்று விக்ரம் பிரபு சொல்லிக் கொண்டிருக்கும் போதே ‘கிராஸ்’ ஆகிற ஷாம்லியோடு பொழுதெல்லாம் டூயட் பாட விடாதளவுக்கு ஒரு பிரச்சனை. அதுதான் இந்த படத்தின் மெயின் மற்றும் சைட் முடிச்சு! ஜான் விஜய்யும், மொட்டை ராஜேந்திரனும் கோட் சூட் சகிதம் என்ட்ரியாகிறார்கள். ஐந்து லட்சம் ஒரிஜனல் பணம் கொடுத்தா, 20 லட்சம் கள்ளப்பணம் தருவதாக சொல்கிறார்கள். நோட்டு அவ்வளவு கச்சிதம் என்றும் நம்ப வைக்கிறார்கள். ஆனால் முன் பணம் வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். இப்படி ஊர் ஊராக மொட்டையடிக்கும் கும்பல், அக்கா மகளின் சிகிச்சைக்காக வைத்திருந்த ஐந்து லட்சத்தையும் சுருட்டிக் கொண்டு கிளம்புகிறது. விடுவாரா விக்ரம் பிரபு. பின்னாலேயே புலனாய்வு செய்தபடி கிளம்புகிறார். (அவர்களை கண்டுபிடிக்கிற அந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தன் மூளைக்கு வேலை கொடுத்திருக்கிறார் டைரக்டர் கணேஷ் விநாயக். அப்புறம்… தேவையில்லாம கசக்குவானேன்? என்று முடங்கிவிடுகிறது அது)

திருடர்களிடமிருந்து அவர்கள் வைத்திருக்கும் அவ்வளவு பணத்தையும் அடித்துக் கொண்டு ரிட்டர்ன் ஆகும் விக்ரம் பிரபுவுக்கு ஆக்சிடென்ட்.! விழித்தெழுகிற அவருக்கு பழசெல்லாம் மறந்து போகிறது. குறிப்பாக ஹீரோயினே மறந்து போக… அம்னீஷியாவிலிருந்து எப்படி மீண்டார் அவர்? அக்கா மகளுக்கு ஆபரேஷன் நடந்ததா? இதெல்லாம்தான் கிளைமாக்ஸ்!

அரை மணி நேரத்திற்கொரு டூயட், பகுதிக்கு ஒரு பைட் சீன், என்று ஃபார்முலா மாறாமல் உழைத்திருக்கிறார் விக்ரம் பிரபு. ஷாம்லியை காதலிப்பதற்காக தீயாக வேலை பார்க்கும் அவர், அம்னீஷியாவுக்குப்பின் அவரை சட்டை செய்யாமலிருக்கிற காட்சிகள் இன்ட்ரஸ்டிங்! முக்கியமாக ஷாம்லியின் அப்பா என்றே தெரியாமல் ஏரியா இன்ஸ்பெக்டரிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிற காட்சியெல்லாம், இளசுகளுக்கான லவ் டிப்ஸ். ஆனால் சிவாஜியின் பேரனுக்கு இது போதுமா? என்பதுதான் வீரசிவாஜி ஏற்படுத்தும் கோணி ஊசிக் கேள்வி!

வீர சிவாஜியின் கலெக்ஷனில் பாதியை கொட்டியாவது ஷாம்லிக்கு மாப்பிள்ளை பார்த்து அனுப்பி விடுவது தமிழ்சினிமாவுக்கு நல்லது. அழகும் இல்லை. நடிப்பும்…. (ம்க்கூம். அதுவே இல்லை. அப்புறம் இது எதற்காம்?)

ரமேஷ்… என்று இவரும், சுரேஷ்… என்று அவரும் மாறி மாறி சொல்லிக் கொண்டே வருகிறார்கள் யோகி பாபுவும், ரோபோ ஷங்கரும். இவர்கள் அப்படி அழைத்துக் கொள்வதே தியேட்டரில் சிரிப்பலைகளை ஏற்படுத்த, கூடுதலாக அவர்கள் செய்யும் சேஷ்டைகள் எக்ஸ்ட்ரா இனிப்பு.

மின்வெட்டு நாளில் மின்சாரம் போல வந்தாயே… என்று ஃபாரின் பிகருடன் மொட்டை ராஜேந்திரன் ஆடும் அந்த டூயட், தெறிக்க விடுகிறது தியேட்டரை.

முதல் பாதியில் வருகிற ‘சொப்பன சுந்தரி’ பாடலை பல்லவியோடு கட் பண்ணியிருக்கிறார்கள். அட… நல்ல பாட்டு இப்படி நாசமா போச்சே… என்று கவலை கொள்கிற அத்தனை பேருக்கும் ஆறுதலாக இடைவேளைக்கு பின் நுழைக்கிறார்கள் அதே பாடலை. மனசு சாந்தமாகிவிடுகிறது. பொருத்தமான இடத்தில் கதையோடு முடிச்சு போட்டு இணைத்த எடிட்டருக்கு தனி சபாஷ்.

தாறுமாரு தக்காளி சோறு… பாடலும், சொப்பன சுந்தரி… பாடலும், இமானின் ரசிகர் கூட்டத்தை இன்னும் பெரிய கூட்டமாக்கும்!

வீர சிவாஜி கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், செவாலியே சிவாஜியாக கூட ஆகியிருக்கும். என்ன செய்வது? பொறுப்பின்மை…!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

Leave A Reply

Your email address will not be published.