வேலையில்லா பட்டதாரி விமர்சனம்

ஒரு தண்ட சோறு, தடபுடல் விருந்தாவதுதான் கதை! கடந்த சில படங்களாகவே ரசிகர்களை ‘களி’ தின்ன வைத்த தனுஷ், இந்த படத்தில் முனியாண்டி, அஞ்சப்பர், சரவணபவன், வசந்தபவன், கையேந்திபவன்களின் கிச்சனையே ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார். ரசனை இருப்பவர்கள் தின்னக்கடவது….!

அதிலும் முதல் பாதி முழுக்க தன் இமேஜை கூட பார்க்காமல் தனுஷ் அடிக்கும் ரகளைகள் இருக்கிறதே… ‘கதைக்காக முதுகும் வளைவேன், சிரிப்புக்காக விளக்குமார் அடியும் வாங்குவேன்’ என்பதுதான் அது! பல காட்சிகளில் ‘டவுன் டூ எர்த்’ ஆகி ஈகோ முட்டிக் கொண்டு திரியும் ஹீரோக்களுக்கெல்லாம் ‘நான்தாண்டா நடிகன்’ என்று மார் தட்டுகிறார். (அந்த சின்ன மார்புக்குள்தான் எத்தனையெத்தனை சில்வர் ஸ்டார் ஸ்டோலோன்கள்!) செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி மாதிரி படங்கள் வந்து எத்தனை நாளாச்சு என்கிற ஏக்கத்தை அவரது தம்பியான தனுஷே போக்கியிருப்பது ஆறுதல் மட்டுமல்ல, தமிழ்சினிமாவின் அதிர்ஷ்டமும் கூட!

ஒரு சராசரி குடும்பம் எப்படியிருக்கும்? அப்படியே ஜன்னலை திறந்து காட்டுகிறார் அறிமுக இயக்குனர் வேல்ராஜ். (நெசமா நீங்கதான் டைரக்ட் பண்ணீங்களா பாஸ்?) என்ஜினியரிங் படித்துவிட்டு ‘பில்டர்களிடம் மட்டும்தான் வேலைக்கு போவேன், வேறு வேலை எதுவும் ஆகவே ஆகாது’ என்று அடம் பிடிக்கும் ஒரு மகனை, கண்டிப்பான அப்பா எப்படி மொத்துவார்? அன்பான அம்மா எப்படி பொத்துவார்? அருமையான சகோதரன் எப்படி நழுவுவான்? காட்சிக்கு காட்சி கைதட்டல் வாங்கியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சீன் பிடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு சீனும் தியேட்டர்களில் டிக்கெட்டுக்களாக பெருகும் என்பதில் சந்தேகமேயில்லை.

‘ஏய்…தண்டசோறு, எந்திரிடா… ’ என்றுதான் துவங்குகிறது முதல் வசனமே. அப்பா சமுத்திரக்கனி அதிகம் கத்தவில்லை. ஆனால் அந்த முகத்தில் தெரியும் கண்டிப்பு மகன்களை எப்படியெல்லாம் சுட்டெரிக்கும்? ‘உனக்கு அப்புறம்தான் பொறந்தான் கார்த்தி. அவன் எப்படி பொறுப்பா வேலைக்கு போறான்? கைநிறைய சம்பாதிக்கிறான். நீயும் இருக்கியே தண்டசோறு’ இப்படி தனுஷையும் அவரது தம்பியையும் ஒப்புமை படுத்தியே பேசிக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனியை ஒரு கட்டத்தில் ‘இப்ப என்னாங்கிறீங்க?’ என்று கை உயர்த்தி பேச ஆரம்பிக்கிறார் தனுஷ். கதை நிமிர்வதும் அங்கேதான். அதைவிடுங்கள்… தனுஷ் அமலாபால் லவ் ஏரியா எப்படி?

‘பக்கத்துவீட்டுக்கு ஒரு பொண்ணு வந்திருக்கா, நடிகை மாதிரி அழகா இருக்காடா’ என்று அம்மா உசுப்பிவிட, பூனை கருவாட்டை பார்த்துவிட துடியாய் துடிக்கிறது. அன்றிரவே லேசாக சரக்கடித்துவிட்டு வரும்போது அதே அமலாபாலின் கார் இடித்துவிட கீழே விழுந்துகிடக்கும் தனுஷ் அடிக்கிற ரகளைகள் இருக்கே, பிரமாதம். அதிலும் அமலாவிடமே ‘அந்த வீட்ல ஒரு பொண்ணு இருக்காம். நடிகை மாதிரியே இருப்பாளாம்’ என்று ஆச்சர்யப்படுவதும், கொஞ்சம் கொஞ்சமாக அமலாபால் தனுஷின் அப்பாவித்தனத்திற்கு அடிமையாகிவிடுவதுமாக ரகளை போர்ஷன் அது. சரி. அமலாபால் எப்படி? ஐயோ பொண்ணு… அதுக்குள்ளே ரிட்டையர் ஆகணுமா?

வழக்கம் போல இந்த படத்திலும் சரண்யா பொன்வண்ணனின் ராஜ்ஜியம்தான். இவர்தான் தனுஷின் அம்மா. இரவில் குடித்துவிட்டு வந்த தனுஷ் மீது கடும் கோபம் இருந்தாலும் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு சமுத்திரக்கனி வெளியே கிளம்பியதும் விளக்குமாறை எடுத்து தனுஷை பின்னி எடுக்கிறார். ஒரு பைட் சீனில் ‘பூந்தொட்டி போச்சே’ என்று பதறுவதும், ‘டேய் பின்னாடி ஒருத்தன் வர்றான் அடி..’ என்று குதிப்பதுமாக சாராசரி அம்மாவாகிறார். கணவரிடம் கை நீட்டி பேசும் மகனை எச்சரிக்கையில் பொறுப்பான அம்மாவாகிறார். படத்தில் அவரது முடிவுதான் கதையை இன்னும் வேகமாக நகர்த்துகிறது என்றாலும், மனசை பிழிய வைக்கும் முடிவாகிவிடுகிறதே!

செகன்ட் ஆஃபில் ராஜாதிராஜ ராஜமார்த்தான்ட தனுஷ்! அதற்காக ஸ்கிரீனை பார்த்து பஞ்ச் விடுகிற ‘பொறுமை சோதிப்பெல்லாம்’ இல்லை. ஆனால் அடிக்கிற ஒவ்வொரு டயலாக்கும் டக்கர்! தன்னை நம்பி ஒப்படைக்கப்படும் கவர்மென்ட் குவார்ட்டஸ் பிளான் ஒன்றை அவர் கட்டி முடிப்பதுதான் அந்த நீண்ண்ண்…ட செகன்ட் ஆஃப். டென்ட்டர் கை நழுவிப் போன கோபத்தில் எதிரணி செய்யும் டார்ச்சரை வெல்வதும், புராஜக்டை முடிப்பதுதான் க்ளைமாக்ஸ் என்றாலும், தனுஷ் நின்று நிதானமாக வெல்வதை ரொம்பவே எஞ்ஜாய் செய்கிறார்கள் ரசிகர்கள். ஒரு காட்சியில் ஐந்து நிமிடத்திற்கு முற்றுப்புள்ளியே இல்லாமல் வசனம் பேசுகிறார். கைத்தட்டல்களால் கிழிகிறது தியேட்டர்.

‘அவனுக்கு கார்த்திக்குன்னு ஹீரோவோட பேரை வச்சுருக்காரு. எனக்கு ரகுவரன்னு வில்லனோட பேரைதான் வச்சுருக்காரு’ என்று அமலாவிடம் தனுஷ் புலம்புகிற காட்சியில் குலுங்கும் தியேட்டர், ‘எங்கம்மாவுக்கு சிகரெட் பிடிச்சா பிடிக்காதுங்க. நீங்க சிகரெட் பிடிக்காம இருங்க ப்ளீஸ்’ என்று தன் அம்மாவின் லங்ஸ் பொறுத்தப்பட்ட சுரபியிடம் கூறிவிட்டு நகரும் போது கலங்குகிறது. இப்படி சில காட்சிகளில் மட்டுமல்ல, படத்தில் வரும் பல காட்சிகளில் ‘எம்ப்பயர் ஆஃப் த எக்ஸ்பிரஷன்’ ஆகியிருக்கிறார் தனுஷ்.

இந்த படத்தில் ஏன் விவேக் என்பது புரியவில்லை. இருந்தாலும் கிடைத்த கொஞ்ச கேப்பில் கிடா வெட்டுகிறார். இவ்ளோ பெரிய கேரி பேக்குக்குள்ளே குடியிருக்கீங்க என்று விவேக் தனுஷின் பாலித்தீன் குடிசையை நக்கலடிக்கிற ஒரு காட்சி போதாதா, அவரது நையாண்டியின் புகழை சொல்ல?

படத்தில் எல்லா கேரக்டர்களையும் பார்த்து பார்த்து உருவாக்கிய டீம், எப்படி தனுஷின் தம்பி கேரக்டரை மட்டும் கோட்டை விட்டது? அந்த தம்பி அக்மார்க் வெண்ணையில் கிண்டப்பட்ட எருமைப்பால் தயிர்சாதம் போலவே இருக்கிறார்.

இசை அனிருத். அடின்னா அடி… அப்படியொரு அடி! அதுவும் ‘வாட் எ கருவாடு…’ பாடல் பக்கா லோக்கல் என்றாலும், இன்டர்நேஷனல் இடியாக இருக்கும்! சில பாடல்களை தனுஷே எழுதியிருக்கிறார். தனுஷே பாடியிருக்கிறார். படத்தோடும் கதையோடும் பார்க்கும் போது ஒட்டிக் கொள்கிறது. தனியாக கேட்டால்தான்…?

டைரக்டஷன் மட்டுமல்ல, ஒளிப்பதிவும் வேல்ராஜ்தான். வழக்கம்போல அருமை. அதுவும் இரவு காட்சிகளில் வைக்கப்பட்டிருக்கும் லைட்டிங்குகளில் அப்படி ஒரு லைவ்! மிக முக்கியமாக பாராட்டப்பட வேண்டியவர் ஸ்டன்ட் மாஸ்டர் ஹரி தினேஷ். தனுஷ் ஐம்பது பேரை சாய்த்தால் கூட நம்பும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது ஒவ்வொரு அடியும்.

ஆங்… சொல்ல மறந்தாச்சே, படத்தில் தனுஷ் ஓட்டி வரும் அந்த குட்டி பைக்கை எந்த மியூசியத்திலிருந்து கொண்டு வந்தார்களோ? அந்த பைக்குக்கும் ஒரு சபாஷ். அதில் அவர் விவேக்கையும் அமலாபாலையும் கூட வைத்து டபுள்ஸ் அடிக்கிறார். க்ளைமாக்சில் அதே பைக்குக்கும் முக்கிய வேலை இருக்கிறது. அண்ணாமலை சைக்கிள் மாதிரி, வி.ஐ.பி பைக் என்று எதிர்காலத்தில் கொண்டாடப்படலாம்!

வேலையிருந்தால் கூட தள்ளி வைத்துவிட்டு வரலாம்… இந்த வேலையில்லாதவனை கண்டு களிக்க!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இவர் காதலை அவர் கெடுத்தார் அவர் காதலை இவர் கெடுத்தார்

‘ இஞ்சி மரபா ஜுஸ் இருக்கு, எடுத்துக்குறீங்களா ப்ளீஸ் ’ என்றாகிவிட்டது கடந்த வார சினிமா நிலவரம். அவ்வளவு ஹாட்! ஒரு நடிகை பேசவில்லை என்பதற்காக சூசைட்...

Close