விஜய் ஆன்ட்டனியின் புது முடிவால் கோடம்பாக்கம் குளுகுளு!

0

சமீபத்தில் வந்த ஒரு பட ஹீரோவின் லட்சணம் இது. இப்படத்திற்காக குறைந்தது நாற்பது லட்சமாவது சம்பளம் வாங்கியிருப்பார் என்பது நமது யூகம். ஆனால் அவருக்கு குளோஸ் அப் வைக்கும் போதெல்லாம் கரையேறிய பல் ‘காவு’ வாங்கியது நம்மை. “ஏன்யா… இவ்ளோ சம்பளம் வாங்குறான். நானூர்ரூவா கொடுத்து அந்த பல்லை க்ளீன் பண்ணித் தொலையக் கூடாது” என்று பக்கத்து சீட் ஆசாமி கமென்ட் அடிப்பதையும் காது கொடுத்து கேட்க முடிந்தது.

இப்படிதான் இருக்கிறது பல ஹீரோக்களின் லட்சணம். நமது தொழில் இதுதான் என்று தெரிந்தும், அதைக் காட்டிதான் இவ்வளவு பெரும் தொகையை சம்பளமாக வாங்குகிறோம் என்று தெரிந்தும், இமேஜ் சேதாரம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். மேற்படி ஹீரோவுக்கு அடுத்த படம் கிடைக்குமா என்பதே டவுட்.

காலத்திலேயே கண் விழித்துக் கொள்கிறவர்கள் மட்டுமே இங்கு சறுக்கினாலும், இறுக்கிப்பிடித்துக் கொண்டு மேலே வருகிறார்கள். அப்படியொரு பெரும் சறுக்கல் இல்லை என்றாலும், விமர்சனங்களும், விநியோகஸ்தர்களின் முணுமுணுப்புகளும் கேட்டிருக்கும் அல்லவா? எமன் படத்திற்கு பின், சில அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறார் விஜய் ஆன்ட்டனி.

உடனே துவங்கவிருந்த தனது படத்தின் ஷுட்டிங்கை சில வாரங்கள் தள்ளிப் போட்டுவிட்டார். தற்போது கதை சொல்லி ஷுட்டிங் கிளம்ப தயாராக இருந்த அந்த புது இயக்குனரிடம், துருவி துருவி மீண்டும் கதை கேட்க ஆரம்பித்துவிட்டார். இந்த முறை கதை கேட்பது அவர் மட்டுமல்ல… அனுபவம் வாய்ந்த மேலும் பலர்.

கதை இலாகா என்று சுமார் 15 பேரை நியமித்து அவர்களுக்கு மாத சம்பளம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறாராம். இவர்கள் கேட்டு கேட்டு பில்டர் செய்யும் கதைகளில் ஒன்றை கடைசியாக இவர் கேட்டு முடிவு செய்வாராம். நல்ல விஷயம். இதை மற்றவர்களும் கடை பிடித்தால், ‘கோவிந்தா கோவிந்தா…’ சப்தங்கள் கொஞ்சமாவது குறையும்!

Leave A Reply

Your email address will not be published.