அலைக்கற்றை போஸ்டரில் விஜய்! ஆத்திரப்பட்ட எஸ்.ஏ.சி?

0

தேரை இழுத்து தெருவுல விட்றது என்பது இதுதானோ? கடந்த சில மாதங்களாகவே தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார் விஜய். வேலாயுதம் பட காலத்திலிருந்தே அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் ஏதோவொரு அரசியல் இடர்பாடுகள் அவரை சூழ்ந்து கொள்ள, சே… தூ… போதும்டா அரசியல் என்கிற அளவுக்கு வெறுத்துப் போயிருக்கிறார் அவர். ஆனால் அவரை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்று நினைக்கிறார் அவரது அப்பா எஸ்.ஏ.சி. இந்த எண்ணமும் ஆசையும் நோக்கமும் நிறைவேறுமா, அல்லது கானல் நீராகுமா என்பதெல்லாம் வருங்காலத்தை பொறுத்த வரவு செலவு பஞ்சாயத்து. ஆனால் இப்போது நமக்கெதுக்குப்பா அரசியல்? என்பதுதான் விஜய் அண்டு பேமிலியின் முடிவாக இருக்கக்கூடும்.

இந்த நேரத்தில் சென்னையில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருக்கும் அந்த போஸ்டர், விஜய்யையும் அவரது அப்பா எஸ்.ஏ.சியையும் எரிச்சலுக்குள்ளாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஏனிந்த எரிச்சல்? அந்த போஸ்டரில் சொல்லப்பட்டிருக்கும் வாசகம் என்ன?

2ஜின்னா என்னய்யா? அலைக்காற்று. அலைக்காற்றுயா. வெறும் காற்றை மட்டுமே வித்து கோடி கோடியா ஊழல் பண்ற ஊருய்யா இந்த ஊரு. திமுக காங்கிரஸ் 2ஜி ஊழல் சிந்திப்பீர் என்று போடப்பட்டுள்ளது அந்த போஸ்டரில். இது கத்தி படத்தில் விஜய் பேசும் வசனம் என்பது பலருக்கு தெரிந்திருக்கப் போவதில்லை. ஆனால் அதையே சாக்காக வைத்துக் கொண்டு பக்கத்தில் பெரிய விஜய் படத்தையும் அச்சிட்டு விட்டார்கள் அந்த விஷமிகள்.

போஸ்டர் முளைத்த அடுத்த சில நிமிஷங்களில் சம்பந்தப்பட்டவர்களை போனில் அழைத்து கடிந்து கொண்டாராம் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி.

தெறி படத்திற்காக மொட்டை கெட்டப்பில் இருக்கும் விஜய், நேரடியாக பிரஸ்சை சந்தித்து இந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்ல முடியாமலிருக்கிறார். கெட்டப் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதால்தான் இப்படி. ஆனால் இது தொடர்பாக ஏதேனும் அறிக்கைகள் அவரிடமிருந்து வரலாம். அல்லது வராமலும் இருக்கலாம்!

Leave A Reply

Your email address will not be published.