விஜய்க்கு ஜோதிகா ஜோடியாகும் புதுப்படம்? நல்லா கிளப்புறாங்கப்பா பீதிகள…
“நானே தேர்ந்தெடுத்திருந்தால் கூட சூர்யாவுக்கு இப்படியொரு மனைவி கிடைத்திருக்க மாட்டார். அவர் மருமகள் அல்ல. என் மகள்” என்று சிவகுமாரால் பொது மேடையில் நெகிழ்ச்சியோடு பாராட்டப்பட்டவர் ஜோதிகா. முதலில் இந்த திருமணத்திற்கு குறுக்கே நின்றவர் அவர்தான் என்பது பழைய பஞ்சாங்கத்தின் கிழித்து போன தாள். இப்படி புகுந்த வீட்டின் நிறைந்த மகராசியான ஜோதிகாவுக்கு, நடிப்பின் மீதிருந்த தீராத காதல்தான் திரும்பவும் நடிக்க வைத்தது. கண்ணியமான கேரக்டர்கள் என்றால் மட்டுமே ஜோதிகாவின் கால்ஷீட் கிடைக்கும் என்பதை சொல்லாமல் சொன்னது அவரது ரீ என்ட்ரி. ‘36 வயதினிலே’ படம், ஜோதிகாவின் பெருமையை சொன்ன மிக முக்கியமான படம் கூட!
தற்போது தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா வின் இயக்கத்தில் மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறார் அவர். இந்த படத்திற்கு பின் அவர் விஜய்யுடன் ஜோடி சேரப் போவதாக நேற்றெல்லாம் சமூக வலைதளங்களில் ஒரே கூவல்! அட்லீ இயக்கவிருக்கும் அந்த புதிய படத்தில் மூன்று ஹீரோயின்கள் என்றும், அதில் ஒருவர் ஜோதிகா என்றும் கூவியது அந்த செய்தி.
ஆனால் சம்பந்தப்பட்ட ஜோதிகா தரப்பிலிருந்து துளி சப்தம் இல்லை. இந்த நிலையில்தான் இன்று அந்த செய்தியை ஒரேயடியாக மறுத்திருக்கிறது அட்லீ வட்டாரம். இப்படியொரு செய்தி எப்படி கசிந்ததுன்னு தெரியல. மேடம் அந்த படத்தில் நடிக்கல… என்று கூறியிருக்கிறார்கள்.
ஜோடி சேரணும்னு சொல்லல… சேர்ந்தா நல்லாயிருக்கும்னுதான் சொன்னோம் என்று கமல் பாணியில் குழப்புவார்களோ என்னவோ?