போட்டோவ கொண்டாங்க பூப் போட்டு வணங்குறேன்… ஷார்ட் ரூட்டில் விஜய்

0

தனது அபிமான ஹீரோவின் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்கிற அளவுக்கு வெறி பிடித்த ரசிகர்கள் வாழ்கிற நாடுதான் இது. அப்படிப்ட்ட ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று அவர்களது வீட்டிற்கு செல்வதோ, அல்லது அவர்களது குடும்பத்திற்கு பண உதவி செய்வதோ, இதுபோன்ற செயல்களை மேலும் ஊக்குவிக்கும் அல்லவா? அதனால்தான் விஜய் அஜீத் போன்ற டாப் ஹீரோக்கள் இவர்களை என்கரேஜ் செய்வதில்லை. இருந்தாலும், மறைமுக உதவிகளை செய்துவிட்டு அதோடு அந்தந்த குடும்பங்களை கை கழுவிவிடுகிற வழக்கம் இருந்து வருகிறது. ஒருவகையில் இது பாராட்டப்பட வேண்டிய அம்சம்தான்.

இது ஒரு புறமிருக்க, அஜீத் தன் ரசிகர் மன்ற கதவுக்கு நிரந்தர பூட்டு போட்டுவிட்டார். அப்படியும் கிளம்பி வந்து டார்ச்சர் தரும் ரசிகர்களுக்கு தனது தரப்பிலிருந்து பெரிய நம்பிக்கைகள் எதையும் அளிப்பதில்லை. இருந்தாலும் தினந்தோறும் அவரது வீட்டை வெளியில் நின்றே தரிசித்துவிட்டு போகிறார்கள் அவர்கள். விஜய் அப்படியல்ல. கடந்த சில மாதங்களாக ரசிகர் மன்றத்தினர் எவரையும் சந்திக்காமலிருந்தவர், அண்டை மாநிலங்களில் படப்பிடிப்பில் இருந்தால் மட்டும், தனது விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை வரச்சொல்லி கருத்துக்களை கேட்டு வருகிறார்.

தற்போது இந்த வழக்கத்தை சென்னையிலும் ஆரம்பித்திருக்கிறாராம். பெங்களூரை சேர்ந்த ரசிகர்களை சில வாரங்களுக்கு முன் சந்தித்தாராம். நெல்லையிலிருந்து கிளம்பி கூட்டமாக வந்த பொறுப்பாளர்கள், அங்கிருந்து கிளம்பும்போதே ஒரு தகவலை சொன்னார்களாம் விஜய்யிடம். ‘நமது இயக்கத்தை சேர்ந்த ஒரு தொண்டர் சில தினங்களுக்கு முன் இறந்துவிட்டார். அவரது வீட்டிற்கு நீங்கள் வர வேண்டும்’ என்று. ‘என்னால் அங்கு வர இயலாது. அவரது படத்தை இங்கே கொண்டு வாருங்கள். பூப் போட்டு வணங்குகிறேன்’ என்றாராம் விஜய். அவர்கள் வரும்போது அந்த படத்தையும் கொண்டு வர, சொன்னபடியே பூ போட்டு வணங்கியிருக்கிறார் விஜய்.

ஹ்ம்ம்ம்… ரசிகர்களை வளைக்கறதுக்காக ஒவ்வொரு ஹீரோவும் எவ்வ்வ்வ்வளவு வளைய வேண்டியிருக்கு?

Leave A Reply

Your email address will not be published.