கோலாகலமாக கொண்டாடப்பட்ட விஜயகாந்த் பாராட்டு விழா!

விஷால் வராதது ஏன்?

1

விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டன. கலையுலகமே திரண்டு நின்று கொண்டாட வேண்டிய விழாவை, சென்னையில் ஒதுக்குபுறமான ஓரிடத்தில் கொண்டாடி மகிழ்ந்தார்கள் தேமுதிக தொண்டர்கள். நல்லவேளை…. நன்றி முழுதுமாக சாகடிக்கப்படவில்லை என்பதற்கு உதாரணமாக, திரையுலகத்தின் முக்கிய பிரமுகர்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டார்கள் அதில்.

நடிகர் சங்கத் தலைவர் நாசர், சரத்குமார், தயாரிப்பாளர் தாணு, ஆர்.கே.செல்வமணி, எஸ்.ஏ.சந்திரசேகர், சத்யாராஜ், நகைச்சுவை நடிகர் மயில்சாமி ஆகியோர் அதில் முக்கியமானவர்கள்.

நடிகர் சங்க கடனை பெரும் போராட்டத்திற்கு பின் அடைத்து, பேங்க் அடமானத்தில் இருந்த பத்திரத்தை மீட்டெடுத்த விஜயகாந்துக்கு, பத்திரத்தை மீட்ட பாண்டியன் என்று பட்டமே கொடுத்து கொண்டாட வேண்டிய நட்சத்திரங்கள் ஏன் அங்கு வரவில்லை? இன்றைய இளைய நடிகர்கள் அத்தனை பேரும் அவரால் ஏதோ ஒரு விதத்தில் பலன் அடைந்தவர்களாகவே இருப்பார்கள். அப்படியிருக்க ஏன் அங்கு வரவில்லை? இந்த கேள்விகள் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், நாசரின் பேச்சு மிக மிக நியாயமாக இருந்தது.

ஒவ்வொரு முறை பொதுக்குழுவோ, செயற்குழுவோ கூடும்போதெல்லாம், இந்த நாற்காலியை மீட்டுக் கொடுத்த விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி சொல்லாமல் நாங்கள் அந்த கூட்டத்தை ஆரம்பிப்பதில்லை என்றார் அவர்.

என் அருமை நண்பர் விஜி இப்ப கால்ஷீட் கொடுத்தாலும் நான் அவரை ஹீரோவா வச்சு படம் எடுப்பேன் என்றார் எஸ்.ஏ.சி. மேடையில் இருந்த தயாரிப்பாளர் தாணு உடனே எழுந்து, அந்தப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்றார் ஆர்வமாக. எல்லாவற்றையும் மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.

இவ்வளவு பலவீனமான நேரத்திலும், சினிமாவுலகம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிற பிரச்சனையை நான் தீர்த்து வைப்பேன் என்று அவர் சொன்னதுதான் ஹைலைட்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவில், நடிகர் சங்க செயலாளர் விஷால் கலந்து கொள்ளவில்லை. ஏனென்று விசாரித்தால், அதே மேடைக்கு விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் சரத்குமார் வருவார். நானும் அந்த இடத்திலிருந்தால், அது சரியாக இருக்காது என்று கூறி ஒதுங்கிக் கொண்டாராம்.

உங்களுக்கெல்லாம் பாலிடிக்ஸ் இல்லாத நிமிஷங்கள் என்று ஏதாவது இருக்கிறதா சினிமாக்காரர்களே?

1 Comment
  1. ராஜா says

    தமிழ்நாடே காவேரி போராட்டத்தில் கொதி நிலையில் இருக்கும் பொழுது இந்த கொண்டாட்டம் தேவையா ??? காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தவுடன், காவேரியில் நீர் வந்தவுடன் எந்த கொண்டாட்டத்தையும் வைத்து கொள்ளலாமே !!!

Leave A Reply

Your email address will not be published.