கடைசியா ஒரு குத்து வேணும்! பிரபுதேவாவுக்காக ஆசைப்பட்ட விக்ரம்!

0

நடிகர் விக்ரம் இப்போது டைரக்டர் ஆகிவிட்டார். “அவருக்கு இருக்கிற சினிமா அனுபவத்திற்கு அவர் ஆகலாம். அதிலென்ன தவறு?” என்று கேட்பவர்கள் பக்கம் நாமும் நிற்கலாம். ஏனென்றால் அவரது இயக்கத்தில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஒரு ஆல்பம், ஆஹா ஆஹா… அத்தனை அழகு!

சென்னையை வெள்ளம் புரட்டிப் போட்டதல்லவா? அப்போதுதான் நமக்கு நாமே என்று செயல்பட்டது இளைஞர்களின் எழுச்சி. யாருக்காகவும் காத்திருக்கவில்லை அவர்கள். சாதி மதம் இனம் மொழி கடந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டார்கள். அந்த நிகழ்வை ‘மனிதம் வளர்ப்போம்’ என்ற சிந்தனையோடு ஒரு இசை ஆல்பமாக வெளியிட்டிருக்கிறார் விக்ரம். அநேகமாக தமிழின் முன்னணி நடிகர்கள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்ட ஆல்பமும் இதுவாகதான் இருக்கும்.

விக்ரம் தயாரித்து இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்தின் வரிகளை மதன் கார்க்கி எழுத, கிரிநாத் இசையமைத்திருக்கிறார். பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் நடனம் அமைத்திருக்கிறார்.

என்ன சொல்கிறார் விக்ரம்?

எனக்கு டைரக்ஷன் பண்ணணும்னு ஆசையெல்லாம் இல்ல. இந்த வெள்ளத்துல எல்லாரும் பாதிக்கப்பட்டிருக்கோம். ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. நான் கேட்டுக் கொண்டதும் இந்தியிலேர்ந்து அபிஷேக் பச்சன்ல ஆரம்பிச்சு பக்கத்து பக்கத்து ஸ்டேட்லேர்ந்தெல்லாம் வந்தாங்க. இந்த ஆல்பத்துல ஸ்ரீதர் மாஸ்டர் இருக்கணும்னு நினைச்சேன். அவர் எனக்காக ஓடி வந்தார். இப்ப அவர் ஹீரோவா நடிச்சுட்டு இருக்கார். ரொம்ப பிசி. இருந்தாலும் ஓடி வந்தார். இன்பேக்ட்… இந்த ஆல்பத்தில் நடிச்ச இரண்டு குழந்தைகளையும் அழைச்சிட்டு வந்ததே அவர்தான். கோரியோகிராப் சொல்லிக் கொடுத்துட்டு மற்ற நேரங்களில் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராகவும் வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டார். இந்த பாடல் ரொம்ப மெலடியாக இருக்கும். ஒரு இடத்தில் மட்டும் வேற மாதிரி இருக்கும்.

அங்க மட்டும் ஒரு குத்து வேணும்னு ஆசைப்பட்டேன். பிரபுதேவா மாஸ்டர் ஆட்ற இடம் அது. அழகா அமைச்சுக் கொடுத்தார் ஸ்ரீதர் என்று முழுக்க முழுக்க இந்த பாடல் வெள்ளத்தில் மூழ்கிப் போனார் விக்ரம்.

வெள்ளம் எப்படி காலம் கடந்து பல வருடங்கள் ஆனாலும் மனசுக்குள் அப்படியே நிறைந்திருக்குமோ, அப்படிதான் இந்த பாடலும் இருக்கும். ஏனென்றால் ட்யூனும், அதில் பங்காற்றியவர்களின் அர்ப்பணிப்பும் அப்படி!

Leave A Reply

Your email address will not be published.