மோடியை சந்திக்கப் போன விஷால் டெல்லியில் என்ன செய்தார்? வெளிவராத தகவல்கள்!

0

சென்னையில் நடிகர் நடிகைகள் உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்த விஷால், அதற்கு முதல் நாள் டெல்லிக்கு சென்றிருந்தார். இந்த டெல்லி விசிட் ஏன் என்பதற்கு அவர் சொன்ன காரணம், பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்பதற்காக என்பதுதான்! பிரதமரிடம் கொடுப்பதற்காக பிரமாதமான ஒரு கடிதத்தையும் தயார் செய்து கொண்டு டெல்லி போய் இறங்கிய விஷாலுக்கு, அங்கு எதிர்பார்த்ததை விட வரவேற்பு பலம் என்றே கூறப்படுகிறது. எம்.பி.கள் வந்தால் கூட, வேலையா இருக்கேன்பா என்று ஒதுங்கிவிடும் பிரதமர் மோடி, விஷால் மாதிரி நடிகர்கள் வந்தால் மட்டும் ஆவோஜி ஆவோஜி என்று வரவேற்பது இன்று நேற்று நடக்கிற விஷயமல்லவே?

ஆனால் இந்த தடவை விஷாலை தொலைபேசியில் வரவேற்றது மோடியல்ல. அமித்ஷாவாம். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகத்தில் எழுந்திருக்கும் கொதிப்பை அமித்ஷாவிடம் விளக்கினாராம் விஷால். “உங்களை கண்டிப்பாக பிரதமர் சந்திப்பார். பிரதமர் அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் வரும். காத்திருங்கள்” என்றாராம் அவர். காத்திருக்க ஆரம்பித்த விஷாலுக்கு, அன்று மாலை வரை ஒரு தகவலும் வரவில்லையாம் மோடியிடமிருந்து.

மறுநாள் சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடக்க இருக்கும் நிலையில், நாம் டெல்லியிலேயே உட்கார்ந்திருந்தால் அது வேறு பல யூகங்களுக்கு வழி வகுக்கும் என்று நினைத்தவர், மீண்டும் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள… “22 ந் தேதி மதியம்தான் உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட்” என்று கூறப்பட்டதாம். வேறு வழியில்லாமல் தனது கோரிக்கை அடங்கிய கடிதத்தை பிரதமர் அலுவலகத்தில் சமர்பித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார் விஷால்.

வந்திறங்கியதுமே “பிரதமரை பார்த்துட்டீங்களா? என்ன சொன்னார்?” என்று அடுக்கடுக்காக அவரை நோண்டியெடுக்க ஆரம்பித்தது மீடியா. “இப்ப அதுவா முக்கியம்? முதல்ல உண்ணாவிரத மேட்டரை முடிப்போம்” என்று உள்ளே போய்விட்டார் விஷால்.

பொன்னை வச்ச இடத்தில் பூவை வச்ச மாதிரி, நம்ம தமிழிசை அக்காவை ஒரு தடவ பார்த்து விரதத்தை முடிச்சுருங்களேன் விஷால்!

Leave A Reply

Your email address will not be published.