சபாஷ்… சரியா செஞ்சிங்க விஷால்! இதுதாண்டா 9 வது தோட்டா!

0

கூரையில போட்ட சோறு, கூட்டிப்பெருக்கி அள்ளினாலும் திரும்ப தின்ன முடியுமா என்ன? இன்று சினிமாவில் போடுகிற காசு பணம், கிட்டத்தட்ட அப்படிப்பட்ட கூரை சோறு ஆகிவிட்டதுதான் கொடுமை. (பாகுபலி மாதிரி ஒன்றிரண்டு படங்களுக்குதான் சுபம். மற்ற படங்களுக்கெல்லாம் அசுபம்தான்!)

தமிழ்சினிமாவின் நிஜம் இப்படியிருப்பதை அறியாமலே படம் எடுக்க வரும் அநேக தயாரிப்பாளர்கள், அவ்வளவு ரணத்தை அனுபவித்த பின் கோடம்பாக்கத்தை சபித்துவிட்டு கிளம்பிப் போயேவிட்டார்கள். ஆனால் இந்த ஒன்வே-யில் பின்னாலேயே வரும் பலர் என்னாகிறார்கள் என்பதுதான் சோகத்திலும் சோகம். அண்மையில் திரைக்கு வந்து விமர்சகர்களின் பாராட்டை ஒரேயடியாக அள்ளிய ‘8 தோட்டாக்கள்’ படத்தின் நிஜ நிலைமை யாருக்காவது தெரியுமா? சுமார் நான்கு கோடியை விழுங்கிவிட்டு திரைக்கு வந்த அப்படத்தின் வசூல், விநியோகஸ்தர்களின் லாபம் போக தயாரிப்பாளருக்கு வந்தது சுமார் ஐம்பது லட்சத்திற்கும் கீழ்தானாம்.

இந்த அதிர்ச்சியை அவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுடன் பகிர்ந்து கொண்டாராம். பல்வேறு காரணங்களால் இப்படம் போட்ட பணத்தை எடுக்கவில்லை என்றாலும், உடனடியாக ஆக்ஷனில் இறங்கிய விஷால், மேற்படி படத்தை ஒரு தடவை கேபிள் டி.வியில் ஒளிபரப்பும் உரிமைக்காக பேசி பெற்றுத் தந்தாராம். இப்படி ஒருமுறை டெலிகாஸ்ட் செய்யப்படுவதற்காக சுமார் 45 லட்சத்தை அவர் தயாரிப்பாளருக்கு பெற்றுத் தந்ததாக சொல்லப்படுகிறது. இதைவிட குறைவான தொகையை கொடுத்து 99 வருஷத்திற்கு டெலிகாஸ்ட் உரிமையை எழுதி வாங்கிக் கொள்ளும் பிரபல சேனல்கள், அந்த படத்தை 100 முறைக்கும் மேல் தேய தேய ஓட்டி சம்பாதித்து ஏப்பம் விடுகிற காலத்தில், ஒன் டைம் டெலிகாஸ்ட்டுக்கு இவ்வளவு பெரிய தொகையை பெற்றுத்தந்த விஷால் கிரேட்தான்!

இருட்டில் கிடந்து தவியாய் தவிக்கும் சினிமாவுலகம், விஷாலின் இந்த மாதிரியான தொடர் ஆக்ஷனுக்குதான் ஏங்குகிறது. செய்ங்க சார் செய்ங்க!

Leave A Reply

Your email address will not be published.