2001-ல் ஆசைப்பட்டார் கமல்! 2017 ல் செய்தார் விஷால்!

0

கமல்ஹாசனின் மிரட்டல் படங்களில் ஒன்றுதான் ‘ஆளவந்தான்’. இரட்டைக் கமல். அதிலும் ஒருவர் மொட்டைக் கமல்! முரட்டு உடம்பும், மேல் முழுக்க டாட்டூஸ்களுமாக ரசிகர்களை மெய்மறக்க செய்த கமலுக்கு, அப்படத்தின் ஷுட்டிங் நேரத்தில் பெப்ஸி கொடுத்த குடைச்சல் இருக்கே… அது காலத்திற்கும் ஆறாத கண்றாவி மார்க்!

வட இந்தியா பக்கம்….. ஏதோவொரு மலை உச்சியில் ஷுட்டிங். மலை ஏறி அதற்கு மேல் ஒரு குன்றின் மீதேறி உச்சியில் போய் நிற்கிறார் கமல். அந்த ஷாட்டை விரைவாக முடிக்கவில்லை என்றால், மேலே வரையப்பட்டிருக்கும் டாட்டூஸ் அழியும். அதற்கப்புறம் இரண்டு மணி நேரம் போராடி மீண்டும் வரைய வேண்டும். அதற்கப்புறம் சன் லைட் நினைத்த மாதிரி அமைய வேண்டும். இவ்வளவு பிரச்சனை.

கமலை மட்டும் உச்சியில் விட்டுவிட்டு அசிஸ்டென்ட்டுகள் கீழே இறங்கிவிட்டார்கள். இங்கிருந்து சைகை காட்டியதும் அவர் பேச வேண்டும். ஆனால் கீழேயிருந்து போன ஆக்ஷன், என்ற சைகைக்கானது அல்ல. “இறங்குங்க… இறங்குங்க” என்ற சைகை! ஏன்? பெப்ஸி ஊழியர்கள் உள்ளே நுழைந்து படப்பிடிப்பை நிறுத்தியிருந்தார்கள்.

கேமிராமேன் திரு, “ஏன்யா… இந்த ஷாட்டை எடுத்த பிறகு நிறுத்துங்களேன். கமல் என்ன உங்களுக்கு தெரியாதவரா? இந்த ஊரை விட்டே ஓடிப் போயிடுவாரா?” என்றெல்லாம் சமாதானப்படுத்தினாலும், இந்த அரக்கர்கள் வாயிலிருந்து வந்த ஒரே சொல்… “நோ! ”

பிரச்சனை என்னவாம்?ஆளவந்தான் தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்ட படம். “ஒரு பேட்டாதான் கொடுக்கிறீங்க? எங்களுக்கு தெலுங்குக்கான பேட்டாவும் சேர்த்து வேணும்”. இதுதான் பெப்ஸியின் பிரச்சனை. கீழே வந்த கமலிடம் விஷயம் சொல்லப்பட்டது. அவர் என்ன முட்டாளா? “தம்பி… காலையில் எல்லாருக்கும் இட்லி வைக்கிறீங்க. அந்த சர்வென்டுக்கு ஒரு பேட்டாதான் தர முடியும். அவர் வைக்கிற இட்லி ஒருமுறைதான். அது தெலுங்கு இட்லி, தமிழ் இட்லீன்னு ஏன் ரெண்டு ரெண்டா பார்க்கறீங்க? கேமிராமேன், அவரோட அசிஸ்டென்ட், லைட் மேன், கார் டிரைவர்ஸ்… இப்படி பணியாற்றுகிற எல்லாரும் தமிழுக்கு ஒரு வேலையும் தெலுங்குக்கு ஒரு வேலையும் செய்யப் போறதில்ல. அப்படியிருக்க ஏன் டபுள் பேட்டா? வேணும்னா தமிழ் தெலுங்குக்குன்னு தனித்தனியா மெனக்கெடுற ஆர்ட் டைரக்டர் மட்டும் வாங்கிக்கட்டும். அதுதான் நியாயம்” என்றார்.

அன்றிலிருந்து இன்று வரை காரிய செவிடர்களாகவே இருக்கும் இவர்கள் கேட்பார்களா என்ன? படப்பிடிப்பு நின்றது. அன்று சாபமிட்டர் கமல். “உங்களை சுளுக்கெடுக்க ஒருத்தன் வருவான்டா… வருவான்டா…” என்று.

2001 ல் கமல் ஆசைப்பட்ட அந்த ஒருவன் இப்போதைய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால்தான்! பெப்ஸியுடனான ஒப்பந்தம் ரத்து என்று பிரகடனம் செய்துவிட்டார் விஷால். கோடம்பாக்கம் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர்கள் மத்தியில் இந்த முடிவுக்கு பலத்த வரவேற்பு. “இனிமே இந்த முடிவிலிருந்து இறங்கவே கூடாது. நம்ம படத்துக்கு யார் வேலை செய்யணும்? எவ்வளவு பேரை வச்சுக்கணும்? எவ்வளவு சம்பளம் கொடுக்கணும் என்பதை நாமதான் முடிவு செய்யணும்” என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

அறிவித்தது அறிவித்ததுதான். அதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்றும் கூறிவிட்டார் விஷால்.

கிழக்கில் வெளிச்சம் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இனி வாசலெங்கும் ‘மங்கல கோலம்’தான்!

_ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.