வடை வட்டி வசூல் விஷால்! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

0

அதென்னவோ தெரியவில்லை. விஷால் உடம்புக்குள் காரி, பாரி, ஓரி என்று கடையேழு வள்ளல்களில் எவர் புகுந்தாரோ? அடுத்தவர்களுக்கே தெரியாமல் அநியாயத்துக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பித்திருக்கிறார். “நான் கேள்விப்பட்ட விஷயம் இது” என்று கோடம்பாக்கம் சொல்கிற கதைகளில் பாதி, விஷாலின் வள்ளல் குணம் குறித்ததாகவே இருக்கிறது. இவ்வளவுக்கும் ‘மூச்’ விடக் கூடாது என்று சொல்லி சொல்லியேதான் சொந்த காசை இறைக்கிறாராம் அவர்.

சும்மா இஷ்டத்துக்கும் அளந்து விட்றானுங்களோ? என்று டவுட் வந்த நேரத்தில்தான் “உன் வாயை மியூட் பண்ணு தம்பி” என்று சொல்லாமல் சொல்வது போல ஒரு மேட்டரை அவிழ்த்துவிட்டார் நகைச்சுவை திலகம் சூரி.

போன வாரம் ஷுட்டிங்கை முடிச்சுட்டு கார்ல வந்துகிட்டு இருந்தோம். உளுந்தூர் பேட்டை தாண்டி ஓரிடத்தில் டீ குடிக்கலாம் என்று காரை நிறுத்திவிட்டு அசிஸ்டென்ட் டைரக்டரை கடைக்கு அனுப்பிவிட்டு காருக்குள் உட்கார்ந்திருந்தோம். அப்போது தூரத்தில் ஒரு வடைக்கடை. ஒரு அம்மா வடை சுட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் அவர் கணவர் அடுப்பெரித்துக் கொண்டிருந்தார். திடீரென்று அங்கு வந்த சிலர் அந்தம்மாவிடம் சண்டை போட ஆரம்பித்தார்கள். அந்தம்மா கெஞ்சிக் கொண்டிருந்தார். அவர்கள் அந்த தம்பதியை தொழில் செய்ய விடாமல் பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள்.

உடனே அசிஸ்டென்ட் டைரக்டரை அனுப்பி அங்கு என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வரச்சொன்னார் விஷால். போய்விட்டு சிறிது நேரம் கழித்து வந்த அசிஸ்டென்ட், “ஏதோ கடன் பிரச்சனை போலிருக்கு சார். பணத்தை இப்பவே தான்னு வம்பு வளக்குறானுங்க” என்று கூற, பதறிப் போன விஷால், “அந்த வண்டியில இருக்கிற எல்லா வடையையும் வாங்கிகிட்டு இந்த பணத்தை அவங்ககிட்ட கொடு” என்று சுமார் 20 ஆயிரம் இருக்கும். கொடுத்தனுப்பிட்டார்.

நாங்க கார்லே இருந்து பார்க்குறோம். அந்தம்மா வாங்க மாட்டேங்குறாங்க. ஒருவேளை இதை இப்ப கொடுத்துட்டு நாளைக்கு காலையில் வந்து ரெண்டு மடங்கா கேட்டா என்ன பண்றதுன்னு நினைச்சிருப்பாங்க போலிருக்கு. எப்படியோ வற்புறுத்தி அசிஸ்டென்ட் கொடுத்துட்டு கார்ல வந்து ஏறினார். நான் விஷாலிடம், அந்த குடும்பம் ராத்திரியெல்லாம் தூங்காது. அதனால் நீங்கதான் கொடுத்தீங்க. பயப்படாம வச்சுக்கோங்கன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வரச்சொல்லுங்க என்று வற்புறுத்தினேன். அதற்கப்புறம் மீண்டும் அசிஸ்டென்ட் டைரக்டரை அனுப்பி சொல்ல சொல்லிவிட்டு, அவங்க நன்றி சொல்ல வர்றதுக்குள்ள காரை கிளப்பிட்டு வந்து சேர்ந்தோம். விஷால் மனசு அப்படிப்பட்டது என்றார்.

பதவிக்கு தகுதி சேர்க்குற மனுஷன். நல்லாயிருக்கட்டும்…!

Leave A Reply

Your email address will not be published.