தாணு ஆபிசில் விஷால்! வெற்றி ரகசியம் இதுதான்!

1

2013 ல் சங்க நிர்வாகிகளின் போக்கு பிடிக்காமல் கேள்வி கேட்டார். 2015 ல் அந்த நடிகர் சங்கத்துக்கே பொதுசெயலாளர் ஆனார். 2016 ஆகஸ்டில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை எதிர்த்து கேள்வி கேட்டார். 2017 மார்ச்சில் அந்த சங்கத்துக்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இனி பொதுதேர்தலையே கூட விஷாலை நம்பி இறங்கலாம் என்னும் அளவுக்கு வியூகம் வகுத்து ஜெயிக்கும் தேர்தல் நாயகன் விஷால் ஜெயிப்பது எப்படி? அவரது வெற்றியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை என்ன? பார்ப்போம்.

கேள்வி புரட்சி

நடிகர் சங்கமோ தயாரிப்பாளர் சங்கமோ விஷால் கேள்வி கேட்பதற்கு முன்பே அங்கு பிரச்னைகள் இருந்தன. சங்க நிர்வாகிகளின் போக்குக்கு எதிர்ப்பு இருந்தது. ஆனால் யாரும் துணிச்சலாக கேள்வி எழுப்பவில்லை. முதலில் கேள்வி எழுப்பியது, பகிரங்கமாக விமர்சனம் செய்தது விஷால் தான்… ரஜினி, கமல், விஜய், அஜித் அளவுக்கு விஷால் முன்னணி நடிகர் இல்லை. ஆனால் கேள்வி கேட்டது தான் எல்லோருக்கும் பிடித்தது. நீங்கள் ஒரு தவறை எதிர்க்க எங்கே இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல… துணிச்சலாக எதிர்த்து குரல் கொடுக்கிறீர்களா என்பது தான் முக்கியம்.

ஒருங்கிணைப்புத் தன்மை

விஷால் எந்த விஷயத்திலும் தனித்து செயல்படுவதில்லை. தன்னை ஒத்த இளைஞர்களையும் புதியவர்களையும் ஒன்றிணைக்கிறார். யார் யாரிடம் எந்த வேலையை வாங்குவது என்பது தெளிவாகத் தெரிந்திருக்கிறது. இரண்டு தேர்தல்களிலும் முதலில் தன்னுடன் கைகோர்ப்பவர்களை ஒன்றிணைத்தார். பின்னர் வாக்காளர்களை ஒன்றிணைத்தார். வெற்றி வசமானது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல்

தேர்தலில் நிற்கும்போதே எப்படி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும்? முடியும் எனக் காட்டியிருக்கிறார் விஷால். நடிகர் சங்க தேர்தலில் நாசரைத் தலைவராக நிறுத்திவிட்டு தான் செயலாளர் பதவிக்கு தான் நின்றார். காரணம் நடிகர் சங்கத்துக்கு தலைவராக அனுபவம் மிக்கவர் தான் வர வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். செயலாளராக செயல்படும் இளைஞர் ஒருவர் வர வேண்டும் என எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பை தேர்தலில் நிற்கும்போதே பூர்த்தி செய்தார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் அனைவரின் எதிர்பார்ப்பும் புதியவர் ஒருவர் தலைவராக வரவேண்டும் என்பதாக இருந்தது. விஷால் இதனாலேயே குஷ்புவை தலைவராக நிறுத்த திட்டமிட்டார். குஷ்பு ஆர்வம் காட்டததால் தானே நின்றார். ஞானவேல்ராஜாவைக் கூட தலைவராக நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் சங்க நிர்வாகத்துக்கு பழையவர் தான். எனவே தான் அவரை செயலாளர் பதவிக்கு நிறுத்திவிட்டு தான் தலைவர் பதவிக்கு நின்றார். வாக்காளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதனை பூர்த்தி செய்தார்.

அணி தான் முக்கியம்

விஷால் தேர்தலில் நின்றதில் இருந்தே வந்த கணிப்பு இதுதான். விஷால் கண்டிப்பாக ஜெயித்து விடுவார். மற்றவர்கள் தான் சந்தேகம். ஏனென்றால் துணைத் தலைவர் பதவிக்கு நின்ற கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் தயாரிப்பாளர்களிடம் அதிருப்தியை சம்பாதித்திருந்தார்கள். விஷால் மட்டும் ஜெயித்து தலைவர் ஆகிவிடுவார். நாம் மற்ற பதவிகளை கைப்பற்றினால் சில மாதங்களிலேயே தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து கவிழ்த்து விடலாம் என்பது எதிரணியின் திட்டமாக இருந்திருக்க கூடும். விஷால் ஓட்டு கேட்கும்போதே ‘எங்களை தேர்வு செய்வதாக இருந்தால் ஒட்டுமொத்த அணியாகத் தேர்வு செய்யுங்கள். இல்லாவிட்டால் முழுமையாக தோற்கடித்துவிடுங்கள். எனக்கு மட்டும் ஓட்டு போடுவதாக இருந்தால் வேண்டாம்’ என்று கேட்டார். அணிக்காகவே தன் வெற்றியை பலி கொடுக்க தயாரானவர் சங்கத்தை நிச்சயம் விட்டுக்கொடுக்க மாட்டார் என்று நம்பினார்கள் தயாரிப்பாளர்கள். அந்த நம்பிக்கையே வெற்றி ஆனது.

பொறுமையும் பக்குவமும்

நடிகர் சங்கத்தை நிர்வகிப்பதை விட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க நிறைய பொறுமையும் பக்குவமும் தேவை. அதை தேர்தலின் போதே வாக்காளர்களுக்கு காட்டினார். தாணு, சிவா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஒன்று திரண்டு தங்கள் ஆட்களை திரட்டி நடிகர் சங்கம் முன்னின்று விஷாலை மோசமாக திட்டி பேட்டி கொடுத்தார்கள். மேடைக்கு மேடை விஷாலைத் திட்டினார்கள். எதற்குமே விஷால் பதில் கொடுக்கவில்லை. மாறாக பாசிட்டிவான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். சென்னையை விட்டு நகரவே இல்லை எதிரணிகள். ஆனால் விஷால் தன் அணியைக் கூட்டிக்கொண்டு ஊர் ஊராக சென்று ஒரு சிறு தயாரிப்பாளர்களைக் கூட மிஸ் பண்ணி விடாமல் வாக்கு சேகரித்தார். முக்கியமாக, படம் பண்ணி தோற்றுவிட்டு ஊரில் போய் மூலையில் முடங்கிய தயாரிப்பாளரைக் கூட விடவில்லை. அதுதான் எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு வாக்குகள் பதிவானது. மாற்றத்தை விரும்பினால் மட்டுமே வாக்கு சதவீதம் அதிகரிக்கும். மாற்றம் வந்தது.

விமர்சனங்களை பற்றி மட்டும் அல்ல விமர்சிப்பவர்கள் பற்றியும் கூட கவலைப்பட்டதே இல்லை விஷால். நடிகர் சங்க கட்டட அடிக்கல் விழாவிற்கு தாணுவை அழைக்க வேண்டும்… யாரை அனுப்பி பத்திரிகை வைக்கலாம் என்று பேச்சு வந்தது. தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன்பு, தாணு தீவிரமாக விஷாலை விமர்சித்து வந்த நேரம் அது. தானே நேரில் சென்று அழைப்பது தான் முறை என்று நேராக தாணு அலுவலகத்திற்கே சென்று விட்டார் விஷால். தாணு அலுவலகம் இவரைப் பார்த்ததும் பரபரப்பானது. அப்போது தாணு இல்லை. ‘அண்ணன் வந்தா சொல்லிடுங்க… அவசியம் வரணும்னு சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு வந்தார்.

ஒரு கனவு கண்டு அதன் வழியில் தீவிரமாக திட்டமிட்டு உழைத்தால் இளைஞர்கள் எந்த விஷயத்திலும் ஜெயிக்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறார். அந்த வகையில் போராட்ட குணம் கொண்ட ஒவ்வொரு இளைஞனுக்கும் விஷால் தான் ரோல் மாடல்!

– க.ராஜிவ் காந்தி

1 Comment
  1. Rajii says

    உண்மை சரியான பதிவு.

Leave A Reply

Your email address will not be published.