ஆந்திரா படங்கள்! அணை கட்டுவாரா விஷால்?

0

பில்டர் சிகரெட் குடிச்சாதான் பில்டப்பா இருக்கும் என்று நினைத்தவர்களெல்லாம் பீடிக்கு திரும்புகிற நேரம் போலிருக்கிறது. ‘செலக்ட் பண்ணிதான் படம் பார்ப்பேன். அதுவும் அஜீத் விஜய்னா கொஞ்சம் அட்வான்சா போய் கியூவுல நிப்பேன்’ என்று கூறுகிற அல்டாப் ரசிகர்கள் கூட, அழகென்ற சொல்லுக்கு அமுதா, மறுமுகம் போன்ற படங்களுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தது காலத்தின் கிடுக்கிப்பிடி. நாலு வருஷத்துக்கு முன்னாடி ரிலீஸ் ஆன படம். நாற்பது வருஷத்துக்கு முன்னாடி வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி படம் என்று பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆரஞ்சு பழம் இல்லேன்னா, ஆலம்பழம் ஓ.கே என்கிற இந்த மனநிலையை கரெக்டாக காயின் பண்ண நினைத்துவிட்டார்கள் தியேட்டர்காரர்கள். ஆந்திராவில் சுட சுட வெளியாகும் தெலுங்கு படங்களை, அதே சூட்டோடு தமிழ்நாட்டிலும் இறக்கி வைக்கக் கிளம்பிவிட்டார்கள். ராம் சரண் தேஜா நடித்த படம் ஒன்று இன்று வெளியாகியிருக்கிறது. இதையடுத்து சத்யம் காம்ப்ளக்ஸ் வெகு நாட்களுக்கு பின் களை கட்டியதாக கூறுகிறார்கள்.

அடுத்த வாரம் மகேஷ்பாபு நடித்த படம் ஒன்றையும் நேரடியாக இறக்க போகிறார்களாம். நோய் நாடி… நோய் முதல் நாடி… என்று கூறியது போல, முதலையை மேட்டூர்லேயே போய் லாக் பண்ணுகிற வேலையில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

ஆந்திரா திரையுலக அமைப்புகளிடம் பேசி, தமிழ்நாட்டில் ரிலீஸ் என்பதை தள்ளி வைக்க சொன்னால் ஒழிய இதற்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை.

தமிழ் ரசிகன், பீடியே தேவலாம் என்று நினைப்பதற்கு முன் செய்வதுதான் சாலச் சிறந்தது. கிளம்புங்க விஷால்… கிளம்புங்க!

Leave A Reply

Your email address will not be published.