வட்டிக்காரர்களின் கொட்டத்தை ஒழிக்க நடிகர் சங்கம் புதிய திட்டம்! விஜய் அஜீத் சம்மதிப்பார்களா?

0

‘கட்டப்பா, அரண்மனை கதவப் புடுங்கி அணை கட்டுன மாதிரி’தான் விஷால் எங்கு திரும்பினாலும் அணை கட்டிக் கொண்டிருக்கிறார்கள் அவரது எதிர் கோஷ்டியினர். நல்லது செய்யலாம் என்ற ஓராயிரம் கனவோடு உள்ளே வந்தவருக்கு, பழைய பாறாங் கல்லுங்க கொடுக்கிற குடைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் விஷால் சப்போர்ட்டர்ஸ்.

விஷால் அறிவித்தபடி ஸ்டிரைக் நடக்குமா? அல்லது புஸ்சென்று போய்விடுமா? இந்த கேள்வி ஒருபுறம் இருக்க… எப்படியோ தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடந்தால் போதும் என்கிற திட்டத்தில் இன்னொரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறாராம் அவர். இந்த திட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்து வருபவர் ஞானவேல்ராஜா என்கிறார்கள்.

மார்க்கெட்டில் டாப்பில் இருக்கும் பத்து நடிகர்களில் எவரை புக் பண்ணினாலும், அவரது சம்பளத்தில் பெரும் பகுதியை அட்வான்சாக கொடுக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு அஜீத் புக் பண்ணப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் சுமார் நாற்பது கோடி சம்பளம் வாங்குகிறார் என்றால், அதில் பதினைந்து கோடியை அட்வான்சாக தர வேண்டியிருக்கிறது. படம் முடிந்து தியேட்டருக்கு வர சுமார் ஆறுமாதம் ஆகிறதல்லவா? இந்த ஆறு மாதங்களுக்கும் வட்டிக் கணக்கு போட்டால், அதுவே சில கோடிகள் ஆகிவிடுகிறது. இது தேவையில்லாத எக்ஸ்ட்ரா தொகைதானே?

இங்குதான் வேலை செய்திருக்கிறது விஷால் மூளை. பெரிய நடிகர்கள் யாராக இருந்தாலும் அட்வான்சாக ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடி மட்டும் பெற்றுக் கொண்டு நடித்துத் தர வேண்டும். மீதி பணத்தை ரிலீசுக்கு முன் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நடந்தால், வட்டிக் காரர்களுக்கு கொட்டியழ வேண்டியதில்லை. இதற்கு சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலர் சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம்.

மார்க்கெட் நிலவரப்படி மற்றவர்களை விட அதிகமோ அதிக சம்பளம் வாங்குகிற லிஸ்ட்டில் ரஜினி, அஜீத், விஜய், கமல், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், என்று இறங்கிக் கொண்டே வருகிறது தகுதி. இவர்கள் மனசு வைத்தால் கோடான கோடி மிச்சம்தான்.

ஆனால் விஷால் சொல்லி இவர்கள் கேட்டுத் தொலையணுமே?

Leave A Reply

Your email address will not be published.