விஷால் வைத்த ஸ்மார்ட் செக்! கலகலத்த எதிர் கோஷ்டி!

0

சங்கம்னு இருந்தா சட்டை கிழியதானே செய்யும்? இப்படி அடிக்கடி சட்டை கிழிகிற அளவுக்கு மோதல் நடக்கிற சங்கத்தை வைத்துக் கொண்டு முட்டை ஓட்டை கூட முழுசா உடைக்க முடியாது என்பதை கடந்த சில வருஷங்களில் புரிந்து கொண்டிருப்பார் விஷால். அப்படியிருந்தும் சங்கப் பணத்தை அள்ளி தெரு பிள்ளையார்களுக்கு உடைத்த வகையில் எட்டே கால் கோடி காலி.

பள்ளம் தோண்டிய இடத்தில் பணத்தை போட்டு மூடணுமே? அதற்காகதான் இளையராஜா இசைக் கச்சேரி. செலவெல்லாம் போக சுமார் பதினொரு கோடி வசூல் திட்டத்துடன் இதில் குதித்திருக்கிறாராம் விஷால். ஆனாலும் மூக்கில் மாட்டிய கயிறுக்கு பேரு மூக்கணாங்கயிறுதானே? கழுத்தை எந்த பக்கமும் திருப்ப முடியாமல் இழுத்தடிக்கிறது அது.

இளையராஜா நிகழ்ச்சிக்கு யாரேனும் இடையூறு செய்வார்கள் என்பதை யூகித்தே வைத்திருந்த விஷால், இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடியை கலந்து கொள்ள வைக்க பிரயத்தனப்பட்டார். ஆனால் முதல்வர் வட்டாரத்தில் எவ்வித ரீயாக்ஷனும் இல்லை. நடுவில் இந்த நிகழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதை போல நீதிமன்றத்திற்குப் போனார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார்.

செலவுக்கணக்கை ஒப்படைக்க சொல்லிய நீதிமன்றம், ஏன் இந்த நிகழ்ச்சியை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கூடாது என்றொரு கேள்வியை போட… விஷால் ஏரியா படு ஷாக்.

முள்ளை முள்ளால எடு. சொல்லை சொல்லால எடு என்பது போல, அதிகாரத்தை அதிகாரத்தால் களைகிற முயற்சியில் இறங்கிவிட்டார். அதன் முதல் சிக்சர்தான் இது. இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், இளையராஜா இசை நிகழ்ச்சியை நீங்கதான் துவங்கி வைக்கணும் என்று அழைத்தார்கள். ஸ்பாட் அப்ரூவல் கொடுத்துவிட்டார் கவர்னர்.

இனிமேல் கோர்ட் உத்தரவுகள் சர் சர்ரென பறக்காது. இப்படி இடுக்குல பூந்தா, விஷால் தடுக்குல பூர்றாரேய்யா… என்று அதிர்ச்சியாகிறார்களாம் எதிர் கோஷ்டியினர்.

பூங்காற்று திரும்புமா? எம் பாட்டை விரும்புமா…?

Leave A Reply

Your email address will not be published.