விஷால் தாணு கூட்டு! கோடம்பாக்க குஸ்தியில் புதுத் திருப்பம்!

0

ஐயோ பதவி சண்டையில் சிக்கிக் கொண்டாரே விஷால் என்பதை தவிர, வேறு வருத்தம் எதுவும் இல்லை அவரை சுற்றியிருக்கும் சில நல்ல மனங்களுக்கு! “நான் இருக்கிற சினிமாவுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறேன். அதை யார் தடுத்தாலும் விட மாட்டேன்” என்பதுதான் விஷாலின் ஆக்ரோஷமாக இருக்கிறது. ஆனால், எல்லாம் அரசியலுக்கு வர்றதுக்கான முதல் ஸ்டெப். இங்க இருக்கிற முதலைங்களை முறையா மேய்ச்சா போதும்… அரசியல்ல திரியுற சிங்கங்களை அசால்டா ஹேண்டில் பண்ணிடலாம் என்பதும் அவரது திட்டங்களில் ஒன்றாக இருக்கலாம்.

சரி… இன்றைய நிலவரம் என்ன? விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால், ‘போடா… அந்த ஆண்டவனே நம்ம பக்கம்’ என்று விஷால் மனசுக்குள் சிரித்துக் கொண்டிருக்கிறார். வொய்? தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவும், விஷாலுமே ஒரு ரகசிய உடன்படிக்கை வந்துவிட்டதாக காதைக் கடிக்கிறது இன்டஸ்ட்ரி. இந்த முறை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு அநேகமாக தாணு நிற்கப் போவதில்லையாம். அதே நேரத்தில் யார் நின்றால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதை அலசி ஆராய்ந்தவர், விஷால் தரப்பின் திடீர் அதிரடிக்கு சங்க உறுப்பினர்கள் மத்தியில் ஒரு கிரேஸ் இருப்பதையும் அறிந்திருக்கிறார்.

ஏன் விஷாலை இழுத்து நம்ம மடியில் உட்கார வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதை நிரூபிப்பது போல, “எனக்கும் தாணு அண்ணனுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்ல” என்று கூறி வருகிறார் விஷால். தன்னை நீக்கிய சங்கத்தின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு கெட்ட சொப்பனமாக விளங்க வேண்டும் என்பதுதான் அவரது இப்போதைய ஒரே முடிவாக இருக்கிறது. எலக்ஷன் நேரத்தில் விஷாலின் பாய்ச்சல் எப்படியிருக்குமோ?

பின் குறிப்பு- விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு பெரும் மகிழ்ச்சி தெரிவித்த அவருக்கு எதிரான குரூப் ஒன்று நடிகர் சங்க வளாகத்திலிருந்த பிள்ளையார் கோவிலில் 108 தேங்காய் உடைத்து நன்றி செலுத்தியிருக்கிறார்கள். அட… அப்ரசண்டுகளா… உங்க கோலாட்டத்துக்கு பிள்ளையாரும் தப்பிக்கலையா?

 

Leave A Reply

Your email address will not be published.