கவுன்சிலருக்கு கட்டிங் கொடு! விதார்த் படப்பிடிப்பு நிறுத்தம்!

0

‘இந்த தொழிலதிபருங்க தொந்தரவு தாங்க முடியலைப்பா…’ என்று கவுண்டமணி கதறிய மாதிரியே கதற வேண்டியிருக்கிறது! கண்ட தொழிலிலும் கால் வைத்து கட்டிங் கேட்கும் வழக்கம், கரை வேட்டிகளுக்கு கை கால் வந்த கலை! நிம்மதியா தூங்குனா கூட, “அதெப்படி நிம்மதியா தூங்குவே? அதுக்கும் ஒரு கட்டிங் கொடு” என்று கதவை தட்டிக் கேட்பார்கள் போலிருக்கிறது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், “கேமிராவை எறக்கறதுக்கு முன்னாடி, துட்டை இறக்குப்பா…” என்று குறுக்கே கட்டையை போடும் கரை வேட்டிகளால், எல்லா அவுட்டோர் படப்பிடிப்புகளிலும் பிரச்சனைதான். அதுவும் கடற்கரை ஓரத்தில் படம் எடுப்பதும் ஒன்று. காஷ்மீர் எல்லையில் படம் எடுப்பதும் ஒன்று. மீன்பிடி ராஜாக்கள் சிலர் கேட்கும் கட்டிங் அப்படியிருக்கும். தரவில்லை என்றால் கேமிரா உடைபடுவதெல்லாம் சர்வ சாதாரணம்.

இந்த லட்சணத்தில் மோடியின் திடீர் அறிவிப்பால் திக்குமுக்காடிய பொதுஜனம் போலவே சினிமாவும் மூச்சடைத்து கிடக்கிறது. தமிழ்ப்பட ஷுட்டிங்குகள் பல நிறுத்தப்பட்டுவிட்டன. அப்படியிருந்தும், எப்படியோ இருக்கிற உண்டியலையெல்லாம் உடைத்து சில்லறையை தேற்றிக் கொண்டு கிளம்பிய ‘வண்டி’ என்ற படக்குழுவுக்கு, மேற்படி கரை வேட்டிகளால் கடும் நெருக்கடி. விதார்த் சாந்தினி இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நாவலூர் பகுதியில் படமாக்கப்பட்டது.

திடீரென வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கிய ஆளுங்கட்சி அண்ணாச்சி ஒருவர், “எனக்கு கட்டிங் கொடுக்காம ஒரு பய ரோட்ல நின்னு படம் எடுக்க முடியாது” என்று கூறிவிட்டாராம். கட்டிங்கின் கனம் ஜாஸ்தி என்பதால், எவ்வளவோ கெஞ்சிப் பார்த்த படக்குழு, வேறு வழியில்லாமல் மூட்டையை கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டது.

எம்ஜிஆரை வணங்குற பக்தர் ஒருவரால், சினிமா தொழில் சுணங்குதுன்னா அதுதான்யா காலக் கொடுமை?

 

Leave A Reply

Your email address will not be published.