நட்ட மரம் முளைச்சுதா? பட்ட மரம் தழைச்சுதே! வியக்க வைத்த விவேக்!

0

ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதுதான் விவேக்கின் டார்க்கெட். அதில் 30 லட்சம் வரைக்கும் நட்டுவிட்டார் அவர்.  இதில் பாதி முளைத்திருக்கும். மீதியை மாடோ, ஆடோ புல் மீல்ஸ் கட்டியிருக்கும். இருந்தாலும் ‘நட்டதுதான் கணக்கு. லஞ்ச் ஆனதெல்லாம் நமக்கெதுக்கு?’ என்று சாந்தியும் சமாதானமும் அடைந்திருப்பார் அவர். இது ஒருபுறம் இருக்கட்டும்… விவேக்கின் மரம் நடும் சந்தோஷத்தின் மகோனத தருணம் ஒன்று அண்மையில் நடந்திருக்கிறது.

பாப்பாபட்டி என்ற கிராமத்தில் ஒரு கோவில். அங்கு அரிய வகை கடம்ப மரம் ஸ்தல விருட்டமாக இருந்திருக்கிறது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பட்டுப் போய் கிட்டதட்ட உயிரே போய்விட்டது அதற்கு. இதை கண்டு வாடிய அந்த ஊர் கிராம மக்கள் எவ்வளவோ முயன்றும் நோ சான்ஸ். மரம் தழைக்கவே இல்லை. யாரோ ஒருவர் விவேக்கிடம் சொல்லி பார்ப்போம். அவர் ஏதாவது முயற்சி எடுப்பார் என்று கூற, கிராமமே சேர்ந்து அவருக்கு கடிதம் எழுதியதாம்.

அதற்கப்புறம் ஆக்ஷனில் குதித்தார் விவேக். மதுரையிலிருக்கும் தனது ‘பாட்டனி’ பார்ட்னர்களை, பசுமை விஞ்ஞானிகளை பாப்பாபட்டிக்கு அனுப்பி வைத்தாராம். அதற்கப்புறம் நடந்தது அதிசயம். நெய், பருத்தி, வேப்பம் கொட்டை உள்ளிட்டவற்றுடன் சில மூலிகைகளையும் கலந்து மை போல அரைத்தவர்கள், அந்த மையை மரத்தை சுற்றி பூசியிருக்கிறார்கள். அதன் மேல் ஒரு சாக்கை கட்டி, எந்நேரமும் ஈரம் இருப்பதை போல சொட்டுநீர் பாசனத்தையும் அதன் மீது செலுத்தியிருக்கிறார்கள். இந்த வித்தையை செய்தால் எந்த மரமும் துளிர்க்கும் என்பது நம்மாழ்வார் தியரி.

சுமார் இரண்டு மாதங்களாக எந்த அறிகுறியும் இல்லை. மவுன சாமியாராகிவிட்டதே மரம்? என்று கவலையில் கண்ணீர் வடித்தார்கள் ஊர் மக்கள். ஆனால் 61 வது நாள் அத்தனை கவலையும் பறந்தது. மரத்திலிருந்து ஒரு இலை மட்டும் தலை நீட்டி, என்னா பெருசுகளா… சவுக்யமா? என்று கேட்க… ஆனந்த கூத்தாடிவிட்டது ஊர். கெட்டி மேளம், கரகம் என்று மரத்தை சுற்றி சுற்றி வந்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

சென்னையிலிருக்கும் விவேக்கும் தகவல் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் பாப்பாப்பட்டிக்கு விசிட் அடிக்கப் போகிறார் விவேக். எந்த ராசா வச்ச மரமோ? பட்டுப்போனதை மீட்டுவிட்டார் விவேக். அவருக்கும் அவரது வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கும் நன்றி சொல்ல வேண்டிய நேரமிது!Leave A Reply

Your email address will not be published.