விழித்திரு-விமர்சனம்

0

தம்மாத்துண்டு சம்பந்தம் கூட இல்லாமல் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மத்தியில், ‘விழித்திரு’ என்ற இந்த தலைப்பு அப்படியொரு பொருத்தம். ஓர் இரவில் நடக்கும் நான்கு சம்பவங்கள் ஓரிடத்தில் இணையும்போது நடப்பதென்ன? சுமார் 2 மணி நேர படத்தில், இன்டர்வெல் தவிர மற்ற நேரமெல்லாம் காட்சிகளின் பின்னாலேயே நம்மை இழுத்துக் கொண்டு ஓடுகிறார் இயக்குனர் மீரா கதிரவன். ஒரு சின்ன எக்ஸ்யூஸ்… அந்த வெங்கட்பிரபு எபிசோடில் மட்டும், ஸ்பீடா மீட்டர் முள் மூச்சு வாங்குகிறது.

கால்டாக்சி டிரைவரான கிருஷ்ணா, சொந்த ஊருக்கு கிளம்புகிறார். போகிற வழியில் பர்ஸை எவனோ அடித்துவிட…. மீண்டும் செலவுக்காக இரண்டு மணி நேரம் ‘கால் டிரைவராக’ பணியாற்றுகிறார். வண்டியில் ஏறும் எஸ்.பி.பி.சரண் ஒரு புலனாய்வு நிருபர். இவருக்கும் மந்திரி அண் கோவுக்கும் நடக்கிற நீதி, அநீதி போரில் சரணை போட்டுத் தள்ளுகிறது மந்திரி கோஷ்டி. முக்கியமான தடயம் சரணிடம் இருப்பது தெரியாமலே தான் வந்த காரும் சரணுமாக எஸ்கேப் ஆகும் கிருஷ்ணாவை தேடுகிறது கும்பல்.

ஒரு பங்களாவில் அடைபட்டுக் கிடக்கும் தன்ஷிகாவை, அங்கே திருடச் செல்லும் விதார்த் காப்பாற்ற நினைக்கிறார். பங்களாவிலிருக்கும் ஏராளமான நகைகளுடன் தப்பிக்கும் அவர்களில், தன்ஷிகா விதார்த்தைவிட பக்காவான திருடி என்பது தெரியவர விதார்த்தை விட பேரதிர்ச்சி நமக்குதான். நகைக்காக கேம் ஆடும் இவ்விருவரின் முடிவு என்ன?

தொலைந்து போன நாய் குட்டியை தேடி குழந்தை சாராவுடன் தந்தை வெங்கட்பிரபு அலைகிறார். ஐயோ பாவம்… வெங்கட்பிரபுவுக்கு கண் பார்வை இல்லை. ஒரு கட்டத்தில் சாராவும் காணாமல் போகிறார். அவரை கடத்த நினைத்த கும்பலிடமிருந்து சாரா மீண்டாரா?

பணக்கார இளைஞன் , ரிசார்ட்டில் சந்திக்கும் ஒருத்தியை அடைய முயல்கிறான். அவளோ, ‘பாண்டிச்சேரி வரைக்கும் ஒரு ட்ரிப் போகலாம். அதற்குள் நீ என்னை இம்ப்ரஸ் பண்ணிட்டா எனக்கு ஓகே’ என்று கூற, அவர்களின் பயணம் சில உண்மைகளை புரிய வைக்கிறது அந்த பணக்கார இளைஞனுக்கு. வார்த்தைக்கு வார்த்தை தான் பெரிய பணக்காரன் என்று சொல்லி வரும் அவன் ஒரு பிச்சைக்காரனிடமே பிச்சை எடுக்கிற நிலைமை வருகிறது.

இப்படி போகும் நான்கு கதைகளும் ஓரிடத்தில் முடியும் போது, ஒரு பெருமழை விட்டது போலிருக்கிறது. ஏனென்றால்… இங்கு சொல்லப்பட்ட அத்தனை சம்பவங்களும் ரோட் டிராவல்!

இந்த நான்கு கதைகளில் விதார்த் தன்ஷிகா எபிசோடில் மட்டும் கலகலப்பு. அதுவும் தன்ஷிகா படக்கென தனது பாவாடையை மேலே ஏற்றி அண்டிராயருக்குள் வைத்திருக்கும் ஆயுதத்தை எடுத்து தாக்குவது செம. விட்டால் இந்த ஜோடிக்கு ஒரு டூயட்டை போட்டு நேரத்தை கடத்தியிருக்கலாம். படத்தின் வேகத்திற்கு பிரேக் வேண்டாம் என்பதாலேயே தடுத்தாட்கொண்டிருக்கிறார் டைரக்டர்.

தம்பி ராமய்யாவின் கேரக்டரில் லாஜிக் இல்லாவிட்டாலும், தியேட்டருக்குள் சிரிப்பு தேவைப்படுகிறதே? தன் தேவை உணர்ந்து பிரமாதப்படுத்தியிருக்கிறார் அவரும்.

வலிய திணிக்கப்பட்டதுதான் என்றாலும், வலிக்காமல் ரசிக்க வைக்கிறார் டி.ராஜேந்தர். அந்த ஒரு பாடலோடு அவரை பேக்கப் பண்ணியதே பெரும் புண்ணியம்!

ஓவர் ஆக்டிங் புகழ் கிருஷ்ணாவை, அடக்க ஒடுக்கமாக நடிக்க வைத்ததற்காகவே மீரா கதிரவனுக்கு ஒரு அப்ளாஸ். அவ்வளவு போலீஸ் படைகள் துரத்தியும் அவர் தப்பிப்பதெல்லாம் லாஜிக் மீது விழுந்த இடி.

சத்யன் மகாலிங்கத்தின் பின்னணி இசை பதற விடுகிறது. விஜய் மில்டனின் ஒளிப்பதிவில் காட்சியின் பதற்றம் வயிற்றில் இறங்குகிறது.

‘நாம நேசிச்ச உறவு எங்கிருந்தாலும் நம்மை தேடி ஓடி வந்திரும்’ என்று இரண்டு இலங்கை தமிழர்களை விட்டு பேச விட்டிருக்கிறார் மீரா கதிரவன். இப்படி கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தனது தமிழின உணர்வை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் அவருக்கு தனிப்பட்ட பாராட்டுகள்.

கண் சிமிட்டக் கூட விடாமல் கவர்ந்திருக்கிறது ‘விழித்திரு’!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.