ஒரே ரூம்… 17 நாட்கள்! என்னப்பா இது? தலைய சுத்துதே!

1

உலக நாடுகளையெல்லாம் சுற்றி சுற்றி வந்து படம் எடுத்தாலும், உள் பண்டம் சரியில்லேன்னா… ‘அடப் போங்கப்பா’ என்று கிளம்பிவிடுவார்கள் ரசிகர்கள். காலம் இப்படியிருக்கையில், ஒரே ரூமிற்குள் கதை சொன்னால் என்னாகும்? “சொல்லுவோம் சார். நீங்க அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர முடியாதளவுக்கு செம த்ரில்லிங்கா ஒரு விஷயத்தை சொல்லியிருக்கோம் சார்…” என்று சூடம் கொளுத்தாத குறையாக சத்தியம் பண்ணுகிறார் ‘தாயம்’ படத்தின் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி.

ஒரு இன்டர்வியூக்காக வரும் எட்டு பேர் ஒரு ரூமில் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கு வரும் முகமூடி அணிந்த ஒருவன், அந்த எட்டு பேரையும் பீஸ் பீஸ் ஆக்குவதுதான் கதை. அவர்கள் தப்பித்தார்களா? அந்த முகமூடி மனிதன் யார்? கடைசியில் அவன் என்னவானான்? இப்படி செம த்ரில்லிங்காக கொண்டு போய் படத்தை முடித்திருக்கிறாராம் கண்ணன் ரங்கசாமி.

பொள்ளாச்சியில ஷட்டிங், மலேசியாவுல டூயட், ஆஸ்திரேலியாவில் பைட்டு என்றால், நான் நான்… என்று கிளம்பி ஓடிவரும் வழக்கம் ஒளிப்பதிவாளர்களுக்கு உண்டு. ஆனால் ஒரே ரூம்ல உங்க வித்தைய காட்டணும் என்றால் யார்தான் வருவார்கள்? பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளர் பாக்யராஜ் முன்வந்தாராம். “ஒரே ரூம்தான். ஆனால் அந்த அறையில் யோசிக்காத மூலையில் எல்லாம் நான் கேமிராவை வைத்து படம் எடுத்தேன். கதையை கேட்டதும், எங்கெங்கே கேமிரா வைக்கலாம். அது எத்தகைய ஆங்கிளில் பிரதிபலிக்கும் என்றெல்லாம் வரைபடமாகவே வரைஞ்சுட்டோம். இந்த படம் பார்க்கும் போது ஒரு இடத்தில் கூட உங்களுக்கு அலுப்பு வராது” என்றார் பாக்யராஜ்.

படத்தில் சந்தோஷ் பிரதாப் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஐரா அகர்வால் நடித்திருக்கிறார். 17 நாட்களில் படத்தையே முடிச்சுட்டாங்க!

கொடுக்கிற பில்டப்பை பார்த்தால், 17 நாளில் எடுக்கப்பட்ட படம் 170 நாள் ஓடுச்சு என்று வரலாறுல எழுதுவாங்களோ?

1 Comment
  1. Jolly Payyan says

    romba pannatheenga da… kadaisila ‘THE EXAM’ padatha apdiya ethuruka poreenga

Leave A Reply

Your email address will not be published.