இரும்புத்திரை விழாவில் அன்புச்செழியனின் தம்பி அழகர்! விஷாலுக்கு என்னாச்சு?

0

தமிழ்சினிமாவில் வாரா வாரம் யாருக்காவது யாராவது அர்ச்சனை பண்ணாமல் இருந்தால், இங்கிருக்கும் சினிமா முக்கியஸ்தர்களுக்கு உறக்கம் வராது. அப்படி சில வாரங்களுக்கு முன் சிக்கியவர் பைனான்சியர் அன்புச்செழியன். சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் அவர் சிக்கிய போது இன்டஸ்ட்ரியே திரண்டு நின்று அசிங்காபிஷேகம் பண்ணியது. குறிப்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், வாளை எடுக்காத குறை. ‘எத்தனை மந்திரிகள் குறுக்கே வந்தாலும் விட மாட்டேன்’ என்று கொக்கரித்தார்.

நடுவில் விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட ஞானவேல்ராஜா, ‘அன்புச்செழியனுக்கும் அவர் தம்பி அழகருக்கும் மதுரை ஏரியாவை எழுதி வச்சுட்டாங்களா? பல வருஷமா அவங்களை தாண்டி யாரும் அங்கு தியேட்டர் போட முடியல. நான் மதுரையில் இவ்வளவு காலம் நடக்காமலிருந்த விநியோகஸ்தர் சங்கத் தேர்தலை நடத்தி அதில் போட்டியிடுவேன்’ என்றார்.

இப்படி இருவரும் மாறி மாறி அன்பு அழகர் இருவரையும் விமர்சித்ததை மக்கள் இன்னும் மறக்காத சூழலில் இன்று ஒரு அதிசயம். விஷால் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்திருக்கும் ‘இரும்புத்திரை’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினர் லிஸ்டில் அழகர் இருந்தார். விஷாலே விரும்பி அழைத்ததாக தகவல். அழகரும் தன் அண்ணன் அன்புச்செழியனிடம் விஷயத்தை சொல்ல… ‘போய் வாப்பா’ என்றாராம் அன்பு.

மழை நின்றாச்சு. குடைய மடக்கி கக்கத்துல வச்சுகிட்டு ‘என்னது…. மழை வந்திச்சா? எப்போ?” என்று முணுமுணுத்துக் கொண்டே நடையை கட்டுங்க மக்களே!

Leave A Reply

Your email address will not be published.