பழைய ஹீரோதான்! ஆனா புது டிமாண்ட்!

0

பழைய ஹீரோக்கள் மீது புதுவெளிச்சம் அடிக்கும் நேரமிது! இதற்கு அரவிந்த்சாமி ஒரு உதாரணம். ‘தனியொருவன்’ படத்திற்கு பின், தவிர்க்க முடியாத செகன்ட் ஹீரோ ஆகியிருக்கிறார் அவர். அதற்கப்புறம் ‘துருவங்கள் பதினாறு’ ரகுமான். கிட்டத்தட்ட அவர்களைப்போலவே டிமாண்ட் ஹீரோ ஆகிவிடுவார் போலிருக்கிறது மம்பட்டியான் தியாகராஜன்! வீட்டிலேயே ஒரு ஹீரோவை வைத்துக் கொண்டு வெளிப்படங்களில் தலை காட்டாமல் இருந்தவர், திடீரென ‘எமன்’ படத்தில் நடித்தது பலருக்கும் வியப்பு.

எப்படி நடந்தது இந்த சம்பவம்? விஜய் ஆன்ட்டனியின் முதல் படமான ‘நான்’ படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ்சை தியாகராஜன்தான் வாங்கியிருக்கிறார். “வாங்க… இந்தப்படத்தை இந்தியில் பண்ணலாம்” என்று இவர் அழைக்க, “வாங்க எமன் படத்தில் நடிக்கலாம்” என்று ஜீவா சங்கர் பதிலுக்கு அழைக்க, முதலில் நடந்த முகூர்த்தம்தான் எமன் படத்தில் தியாகராஜன் நடித்த விஷயம்! எமன் படத்தில் தியாகராஜனின் கேரக்டர் பெயர் கருணாகரன். இது அரசியல் படம் என்பதாலேயே இந்த கேரக்டர் பெயர் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

இப்பவே ‘எமன்’ படம் பற்றி இன்டஸ்ட்ரியில் ஆஹா ஓஹோ பாராட்டுகள். “பிச்சைக்காரன் படம் ஹிட்டுன்னா, எமன் பேய் ஹிட் ஆகும். ஏன்னா இது அதைவிட பல மடங்கு சுவாரஸ்யமான படம்” என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். படத்தில் தியாகராஜனின் நடிப்பும், லுக்கும் கோடம்பாக்கத்தின் பல இயக்குனர்களை இவர் வீட்டுப்பக்கம் நடமாட வைத்திருக்கிறது.

அவர்களுக்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறார் மம்பட்டியான்? “பிசினஸ்ல நிறைய நேரம் ஒதுக்க வேண்டியிருக்கு. ஸ்கிரிப்ட் என்னை மயக்குச்சுன்னா, பிசினசை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு நடிப்பேன். வர்ற இயக்குனர்களும், அவர்கள் கொண்டு வர்ற கதைகளும்தான் என்னை கூப்பிடணும்” என்றார்.

பல பேரு ‘துவையலை’ மூடி வச்சு ‘புதையல்னு’ ஏமாத்துறான். தியாகராஜன் உஷாரா இருக்கறதும் சரிதான்!

Leave A Reply

Your email address will not be published.