எமன் /விமர்சனம்

0

எருமை கடாவும் ஏழூரு மீசையுமா ஒருத்தர் வந்து, பாசக்கயிறை வீசுவார்னு எதிர்பார்த்து போற ரசிகர்களுக்கு ‘எமன்’ கொடுக்கிற எபெக்ட் அவ்வளவு ‘டெரர்’ இல்லேங்கறதுதான் முதல் தகவல் அறிக்கை! ஆனால் ஒரு அரசியல் படத்தின் அத்தனை ‘டகால்டி’ சமாச்சாரங்களையும் ஒரு டிபன் பாக்சில் போட்டு அடைத்து சுட சுட பேக் பண்ணியிருக்கிறார் ஜீவா சங்கர்.

குழந்தை பருவத்திலேயே அப்பாவை கொலை அரிவாளுக்கு பலி கொடுத்துவிட்டு தாத்தாவின் வளர்ப்பாக உருவாகும் விஜய் ஆன்ட்டனி, ஆஃப் வே-யில் துவங்குகிறார் தன் பயணத்தை. பணம் கிடைக்கும் என்பதற்காக செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைச்சாலைக்கு செல்லும் அவர் சிறை தருகிற தொடர்புகளால் அடுத்தடுத்து எடுக்கும் விஸ்வரூபங்கள்தான் முழு படமும்.

பிச்சைக்காரன்’ படத்திற்கு பிறகு, புருவ முடிச்சை சுருக்கினால் கூட “தலைவரு ஏதோ சொல்ல வர்றாப்ல” என்று எதிர்பார்ப்பதற்கு ஒரு பெருங்கூட்டம் சேர்ந்து விட்டது விஜய் ஆன்ட்டனிக்கு. அவ்வளவு நெருக்கடி இருந்தும், தன் ஸ்டைலில் இருந்து இம்மிளவு கூட ஏறாமலும் இறங்காமலும் பர்பாமென்ஸ் பண்ணியிருக்கிறார் விஜய்ஆன்ட்டனி. இன்டர்வெல் பிளாக்கில் தன் விரல்களை விரித்து கொம்பு போல வைத்துக்கொண்டு அவர் கொடுக்கும் அந்த டெரர் லுக், அவசரமாக ஒரு பப்ஸ்சை உள்ளே தள்ளிவிட்டு மீண்டும் ஓடி வந்து இடம் பிடிக்க வைக்கிறது. அதற்கப்புறம்? (பப்ஸ் செரிப்பதும் படம் செரிப்பதும் ஒரே ஸ்பீட் என்பதுதான் திடுக்)

அடிக்கிற கை இன்னும் கூட ஆறேழு டன் வெயிட்டை அசால்ட்டாக நொறுக்கும் என்று நம்பிவிட்டால் போதும். அந்த ஹீரோவை கடைசிவரை கண் கலங்காமல் (?) காப்பாற்றிவிடுவான் ரசிகன். அந்த தோள் வளம் விஜய் ஆன்ட்டனிக்கும் இருப்பதுதான் சிறப்பு. ஆக்ஷன் காட்சிகளில் பொறி பறக்க விடுகிறார். ஆனால் காதல் காட்சிகளில் மட்டும், ‘மனைவி பக்கத்திலேயே இருக்காங்க’ பீலிங்ஸ் வந்துவிடுகிறது அவருக்கு. மியாஜார்ஜுடனான காதல் காட்சிகள் எல்லாம் டிஸ்டன்ஸ் எஜுகேஷனாகவே இருக்கிறது படத்தில்.

ஒவ்வொரு சீன் முடியும் போதும், அடுத்த ஸ்டெப்புக்கான ‘தொடரும்’ போட்டுக் கொண்டே போகிற விஜய் ஆன்ட்டனி, ஒரு பர்ஸ் கண்டுபிடிப்பில் ஆரம்பித்து பவர்புல் எம்.எல்.ஏ வாக மாறுவது வரைக்கும் அரசியலின் ஸ்டெப்புகளை புட்டு புட்டு வைக்கிறார். ஆ ஊ என்றால் துப்பாக்கியை எடுத்து நெற்றிப் பொட்டில் வைத்து, மிரள விடுவதெல்லாம் தியேட்டர் கொள்ளாத கைதட்டல் சப்த நேரங்கள்.

நடிகை என்று காட்டிவிட்டதாலேயே என்னவோ, மியாஜார்ஜுக்கு விதவிதமான காஸ்ட்யூம்களில் விதவிதமான லொக்கேஷன் பாடல்களை அமைக்கிறார்கள். ஒரு நடிகை தன் ரசிகனிடம் காட்டுகிற அன்பும் ஈர்ப்பும் நாடகத்தனம் இல்லாமல் பிரசன்ட் செய்யப்பட்டிருப்பதும் கூட கவனிக்க வேண்டிய பகுதி.

ஆணானப்பட்ட தியாகராஜன், படத்தின் கீ வில்லனாக வருகிறார். பெரும்பாலும் உட்கார வைத்தே நடிக்க விட்டிருக்கிறார் இயக்குனர். அவரும் கிடைத்த நாற்காலியை ஸ்திரமாக பற்றிக் கொண்டு உரம் போல உதவியிருக்கிறார் எமனுக்கு. இவர் நாற்காலிக்கு ஏன் விஜய் ஆன்ட்டனி ஆசைப்பட்டார்? அதை மட்டும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக புரிய வைத்திருக்கலாம்.

நீண்ட தாடியுடன் வரும் அந்த அருள் டி சங்கர், மிக முக்கியமான நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்று விட்டார். அவ்வளவு நீண்ட தாடி அவசியமே இல்லைதான். இருந்தாலும், அந்த அடர்ந்த புதர் தாண்டி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிற அந்த முகத்திற்கு தனி அப்ளாஸ் தரலாம்.

மாரிமுத்து, ஜெயக்குமார் இருவருக்குமே சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டர். தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தாத்தாவாக வரும் சங்கிலிமுருகன், சார்லியும் வழக்கம்போல பக்குவமான நடிப்பால் மனம் கவர்கிறார்கள். ஒரு வில்லன், ஒரு ஹீரோ என்று கதை நகர்ந்திருந்தால், இடியாப்ப குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கும். பட்…?

பாடல்களில் மெலடி இல்லாத குறையை அடுத்த படத்திலாவது தீர்த்து வைக்க வேண்டும் விஜய் ஆன்ட்டனி. பதிலாக பின்னணி இசை கச்சிதமோ கச்சிதம்!

‘நான்’ இருக்கிறேன் என்று தோளில் கை போட்டுக் கொண்ட ஜீவா சங்கரே, விஜய் ஆன்ட்டனியின் மார்கெட் அந்தஸ்துக்கு ‘எமனாக’ வந்துவிட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது.

எமன்? சற்றே புளிப்பு குறைந்த லெமன்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.