யுவனும் நயனும்! ஒரு இனிப்பு மிட்டாய் திருப்பம்!
தென் துருவத்தில் காரத்தையும், வட துருவத்தில் இனிப்பையும் சுமந்த ஒரே பர்சனாலிடி நயன்தாராதான்! மனிதாபிமானத்தில் அன்னை தெரசாவாக மாறிவிடும் அவர், கோபம் வந்தால், கோட்சேவாக மாறவும் தயங்க மாட்டார். இப்படியொரு வியத்தகு வித்தகியை, நட்பாக்கி நாலு காசு பார்த்துவிட வேண்டும் என்று கோடம்பாக்கத்தில் கொள்ளை பேர் சுற்றினாலும், நயனின் மனசில் அகர்வால் ஸ்வீட்டாக இனிப்பவர்கள் ஒரு சிலர் மட்டும்தான்!
அப்படியொரு ஸ்வீட்தான் யுவன். இத்தனைக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் நயன்தாராவுக்கும் தனிப்பட்ட நட்பு பெரிதாக இல்லைதான். இருந்தாலும், யுவன் படம் தயாரிக்க வருகிறார் என்றதும், படக்கென்று அவருக்கு கால்ஷீட் கொடுத்து பெருமை படுத்திவிட்டார் நயன்.
ஹாலிவுட்டில் வெளியான ‘ஹஷ்’ என்ற படத்தை தமிழில் ‘கொலையுதிர்காலம்’ என்ற தலைப்பில் எடுக்கப் போகிறார்கள். சக்ரி டோலட்டிதான் இயக்குனர். இப்படத்தில் காது கேளாத வாய் பேச முடியாத பெண்ணாக நடிக்கிறார் நயன். (இதற்கு முன்பே நானும் ரவுடிதான் படத்தில் இப்படியொரு கேரக்டரில் பிரித்து மேய்ந்தவராச்சே?) இந்தப் படத்தைதான் பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார் யுவன்.
பொதுவாக இதுபோன்ற ஹாலிவுட் படங்களை ஓசி டிவிடியில் பார்த்து சீன் பை சீனாக காப்பியடிக்கும் கோடம்பாக்கக் காரர்கள் மத்தியில், அப்படத்தின் உரிமையை முறையாக ராயல் டி கொடுத்து வாங்கியிருக்கிறாராம் யுவன். நயன்தாரா வந்தால், நண்டு சிண்டு பிரச்சனையெல்லாம் கூடவே வரும் என்பதால் கூட இப்படியொரு முன்னெச்சரிக்கை வந்திருக்கலாம் யுவனுக்கு!