அக்டோபர் 1 ந் தேதி சிவாஜியின் பிறந்தநாள் – கொண்டாடும் வசந்த் டி.வி
சிம்மக்குரலோன் சிவாஜிக்கு ஹாலிவுட்டில் சிலையெழுப்ப வேண்டும் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உள்ளுரில் ஒரு மணி மண்டபம் அமைக்க படாத பாடு பட வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் ஒரு புறம் கவலையோடு ஜீரணித்துக் கொண்டிருந்தாலும், நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்த தினமான அக்டோபர் 1 ந் தேதியை மணக்க மணக்க கொண்டாடி வருகிற வழக்கம் இருக்கிறது அவரது ரசிகர்களுக்கு. சிவாஜியின் தீவிர ரசிகரான ‘பளிச் சிரிப்பு’ வசந்த குமாரும் தனது வசந்த் தொலைக்காட்சியை அன்றைய ஒரு தினத்திற்கு சிவாஜிக்கென அர்ப்பணித்திருக்கிறார்.
அன்று காலையில் இருந்து இரவு வரை எல்லா நேரங்களிலும் சிவாஜியின் புகழ் பாடுவது போல நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 11 மணிக்கு சிவாஜியின் நடிப்பில் மக்களை கவர்ந்தது காதலா நடிப்பா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது.
மாலை 5.30 மணிக்கு முதல் மரியாதை படத்தின் கதாசிரியர் ஆர்.செல்வராஜ், சிவாஜியுடன் நடித்த வடிவுக்கரசி, சத்யராஜ் ஆகியோர் முதல் மரியாதையை மறுபடியும் நினைவு கூர இருக்கிறார்கள்.
நடுநடுவே, பாசமலர், கர்ணன் திரைப்படங்களை ஒளிபரப்புகிறார்கள். இரவு 9.30 க்கு சிவாஜி- முதல் பயணம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இது தவிர இந்த வாரம் முழுக்கவே சிவாஜியின் படங்களை ஒளிபரப்பப் போகிறார்களாம் வசந்த் டி.வி யினர்.
வசந்தகுமார் என்ற தனிப்பட்ட ரசிகனின் ஆசை இப்படி வெளியாகிறது. தமிழ்சினிமா கலைஞர்கள் ஒன்று கூடி என்ன செய்யப் போகிறார்களோ?