‘அவங்க என் படத்தை பார்த்ததேயில்லை…’ -மனைவி ஜெஸ்லி பற்றி பரத் ஆச்சர்யம்
ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் க.மு- க.பி என்று இரண்டு பிரிவாக பிரிக்கலாம். கல்யாணத்திற்கு முன் கட்டை சோம்பேறிகளாக இருந்த நடிகர்கள் கூட, அதற்கப்புறம் மார்க்கெட் பிக்கப்பாகி மனைவியிடம் பேசக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணம் சொன்னால் சில நடிகர்களின் அதிதீவிர ரசிகர்கள் ஈமெயிலில் எரிச்சலை பார்சல் கட்டி அனுப்புவார்கள் என்பதால் இத்துடன் நிற்க. பரத்தின் வாழ்க்கையும் அப்படி அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
துபாயை சேர்ந்த பல் மருத்துவரான டாக்டர் ஜெஸ்லியை கடந்த 9 ந் தேதி திருமணம் செய்திருக்கிறார் நடிகர் பரத். செப்டம்பர் 14 ந் தேதி திருமண வரவேற்பு சென்னையில் ஜாம் ஜாமென்று நடைபெற இருக்கிறது. பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி ஏராளமான கேர்ள்ஸ் மனதில் இடம் பிடித்தவர் பரத். இவர் மனதில் இடம் பிடித்தவர்தான் ஜெஸ்லி.
தனது காதல் பற்றி பரத் என்ன சொல்கிறார்? ஜெஸ்லியை எங்களுக்கு பொதுவான பிரண்ட் வீட்டில் ரொம்ப கேஷுவலா ஒருமுறை மீட் பண்ணினேன். பரஸ்பரம் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டோம். ஹாய் சொல்வது, குட்மார்னிங் சொல்வது என்று தொடர்ந்த நட்பு, திடீரென காதலாக மாறியது. என் படங்கள் எதையும் அவங்க பார்த்ததேயில்லையாம் என்றார். (ஒருவேளை அதனால்தான் லவ் கன்ட்டினியூ ஆச்சோ?) திருமணத்திற்கு பிறகும் அவங்க மேற்படிப்பு படிப்பாங்க. நான் வழக்கம் போல சினிமாவில் நடிச்சுட்டு இருப்பேன்.
அவங்க கிறிஸ்டியன். நான் இந்து. இதனால் ஏதும் பிரச்சனை வருமா என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன இன்பர்மேஷன். கல்யாணத்துக்கு முன்னாடி இது பற்றியெல்லாம் கூட நாங்க பேசியாச்சு. நான் கோவிலுக்கு போனா அவங்களும் வருவாங்க. அவங்க சர்ச்சுக்கு போனா நானும் போவேன். எங்க ரெண்டு பேரை பொருத்தவரை எல்லா மதமும் நம் மதமே!
பேசிக் கொண்டே போகிற பரத், என்னோட கல்யாண ராசின்னு நினைக்கிறேன். இன்னொரு இந்தி படமும் சைன் ஆகியிருக்கு என்றார்.
அச்சா ஹை…