ஆதலால் காதல் செய்வீர்
பிக்கப்பும் பிரேக் அப்பும் சர்வசாதாரணமாகிவிட்ட டீன் ஏஜ் உலகத்தின் அலட்சியப் போக்கை பொளேரன்று புத்தி கலங்குகிற அளவுக்கு சொல்லியிருக்கிறார் சுசீந்திரன். பார்க், பீச், பஸ் ஸ்டாண்ட், கோவில் என்று எங்கும் காதல், எதிலும் காதலாகிக் கிடக்கிறது இந்தகால டீன் ஏஜ். இவர்களுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை சிலபஸ் மாதிரி சொல்லாமல், சிந்திக்கிற மாதிரி சொல்லியிருக்கிற சுசீந்திரனின் நோக்கத்திற்கு உலக பெரிசில் ஒரு வெல்கம்!
காலேஜ் காதல் எப்படியெல்லாம் அரும்புகிறது. அது எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கிறது என்பதை முதல் சில காட்சிகளிளேயே போட்டு உடைத்துவிடுகிறார் டைரக்டர். அந்த ஜோடிகளில் ஒன்றுதான் மனிஷா சந்தோஷ். சற்றே பளபளப்பான சில்க் துணிகளுக்கெல்லாம், பழைய டிரங்க் பொட்டிகளின் மீது ஆசை வருவதுதான் ஏனென்றே புரிவதில்லை. இந்த படத்திலும் அப்படியொரு மொக்கை பையனிடம் மடங்குகிறார் மனிஷா. கலகலப்பாக போகிற காதல், ஒரு மஹாபலிபுர ‘ட்ரிப்’பில் க்ளைமாக்சை எட்டுகிறது. ஏண்டி… இந்த மாசம் நாப்கின்னை நீ யூஸ் பண்ணலையா என்று அம்மா கேட்கும்போதுதான் அடிவயிற்றை தொட்டுப் பார்க்கிறது டீன் ஏஜ். அப்புறமென்ன… ? கருவை கலைக்க கிளம்புகிறது நண்பர்கள் டீம்.
சொந்த காலேஜ் என்பதால்தான் இந்த ரேட். இல்லேன்னா ரேட்டே வேற… போன்ற அதிர்ச்சிகளையெல்லாம் தாண்டி வயிற்றை கழுவுகிற நேரம், அதுவும் முடியாமல் போக… இரண்டு குடும்பங்களுக்கும் விஷயம் தெரியவருகிறது. ஆக்ஷன் காட்சிகளை விஞ்சிய வாய் சவடால்களால் ஜோடி பிரிய நேர்கிறது. இவ்வளவு பேசிட்டேயில்ல… இனிமே நீ எனக்கு வேணாம் என்று முடிவெடுக்கிற இருவரும் ஆளாளுக்கு ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க, பெற்றெடுக்கும் குழந்தையின் கதி? நெஞ்சை அடைக்கும் க்ளைமாக்சோடு வழியனுப்புகிறார் சுசீந்திரன். காதலர்களே… பெற்றோர்களே… இந்த படம் உங்க எல்லாருக்குமானதுதான்.
ஒரு சில காட்சிகளில் வந்தாலும், ‘இவ்ளோ நாளா என்னை ஃபாலோ பண்றீயா. ஒரு நாள் கூட நான் உன்ன பார்த்ததில்லையே’ என்று அசடு வழியும் பெண்ணும், அந்த வித்தியாசக்குரல் இளைஞனும் கூட படத்தை வேகமாக நகர்த்த உதவியிருக்கிறார்கள் என்றால் மெயின் கேரக்டர்களை முடிவு செய்து கொள்ளுங்கள். அப்படியொரு அட்சர சுத்தமான காஸ்ட்டிங்… வெல்டன் சுசீ.
ஒரு சக மாணவன் சட்டென முகத்திற்கு நேரே லவ்வை போட்டு உடைக்கும் காட்சியில் அந்த பெண் என்ன ரீயாக்ஷன் கொடுப்பாள்? மனிஷா பிரித்து மேய்ந்திருக்கிறார். வீட்டுக்கு தெரியாமல் தன் வாந்தியை மட்டுமல்ல, எல்லாவற்றையும் சமாளிக்க அவர் எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்கள் அத்தனையும் இயல்பு மீறாத நடிப்பு. (பாலாஜி சக்திவேல் ஸ்கூல் என்பதும் கூடுதல் தகுதி) யேய்… இவனையே உன் ஹஸ்பெண்டுன்னு சொல்லிக்க என்று தன் நண்பனை காதலியோடு அனுப்பி வைக்கும் சந்தோஷ்களை நம்பிதான் இந்த கால இளசுகள் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறார்கள். ஹ்ம்ம்ம்..
சந்தோஷ் ஹீரோ கேரக்டருக்கு லாயக்கானவரா என்பதை விடுங்கள். இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கிறார். நடிப்பிலும் சொட்டையில்லை. படத்தின் மொத்த ஸ்கோரையும் அள்ளிக் கொண்டு போவது மனிஷாவின் அம்மாவாக நடித்திருக்கும் துளசிதான். ஒரு அன்பான தாய் தருகிற சுதந்திரம், சந்தேகம், பதற்றம், அழுகை, கோபம் எல்லாவற்றையும் போஸ்டர் அடித்து ஒட்டுகிறது அவரது கண்கள். இவனை நம்பி உங்க பிள்ளைகளை படிக்க அனுப்பாதீங்க என்று மகளையும் இழுத்துக் கொண்டு போய் கதறுகிற காட்சியை எந்த பெற்றவளும் அனுபவிக்க கூடாது என்று ஒரு ஸ்பெஷல் பிரார்த்தனை கிளப்பையே கூட்ட வைக்கிறார்.
பஞ்சாயத்து காரசாரமாக நடந்து கொண்டிருக்க, படுத்ததுக்கு எவ்ளோ வேணும். வாங்கிட்டு போய்யா என்கிற வார்த்தையை ஒரு அப்பனாக தாங்கிக் கொள்ள முடியாமல் வெடிக்கும் ஜெயப்ரகாஷுக்கு பல படங்கள் கழித்து நல்ல ரோல்.
சந்தோஷின் நண்பரான நடித்திருக்கும் அந்த பப்ளி பாய், வருங்கால சந்தானமாவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கருக்கலைக்க கிளம்புகிற நேரத்தில், இந்த மாதிரி விஷயத்துக்கு தெரிஞ்ச இடத்துக்கு போக கூடாது. தெரியாத இடத்துக்குதான் போகணும் என்பதும், டேய்… உங்க அக்காவுக்கு குழந்தை பொறந்துருச்சு. நீ மாமாவாயிட்ட என்ற டயலாக்கில் குறுக்கிட்டு இன்னும் கொஞ்ச நாளில் அப்பாவே ஆகிடுவான் என்று டபாய்ப்பதும், இந்த பப்ளி பாய்க்கு வெளிச்சமான ஃபியூச்சர் இருக்கு.
அப்புறம் இசை… இருட்டில் தேடி எடுத்து பிரஸ் ரிலீசை படித்தால், அது யுவன்சங்கர் ராஜாவாம். கெரகம்டா… ஆனால் மச்சி என்கிற ஒரு மஜாய் பாடல் கிறக்கம்.
இனிமேல் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒளிப்பதிவாளர்கள் வரிசையில் சூர்யாவுக்கும் இடமிருக்கும்.
எவராலும் சீண்டப்படாமல் புழுதி படிந்திருந்த சுசீந்திரனின் ‘ராஜபாட்டை’ இந்த ‘காதலால்’ கழுவப்பட்டிருக்கிறது. ஒரு முறை ‘கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே…’
-ஆர்.எஸ்.அந்தணன்