ஆந்திராவில் துப்பாக்கி சூடு- விஜய்யின் புலி படத்திற்கு சிக்கல்?

ஆந்திராவில் காட்டுப்பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் ஆந்திர போலீசார் செம்மரம் கடத்தல்காரர்கள் பதுங்கியிருக்கிறார்களா? என தீவிர சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலமலை காட்டுப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை போலீசார் சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவத்தில் மேலும் பலர் தப்பி ஓடிவிட்டதால் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி அருகில் உள்ள ‘தலைக்கோணை’ நீர்வீழ்ச்சி பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த நீர்வீழ்ச்சி அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 10 நாட்களாக பிரபல நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ என்ற தமிழ் சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய்யுடன், நடிகை சுருதிஹாசன், பிரபு மற்றும் துணை நடிகர், நடிகைகள் உட்பட சுமார் 300 பேர் அந்த பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ரூ.1 கோடி செலவில் பிரமாண்ட செட் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது.

போலீசாரின் தாக்குதலில் தப்பிய செம்மரக் கடத்தல்காரர்கள் இந்த தலைக்கோணம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என ஆந்திர போலீசார் கருதினர். இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக நெரபைலு என்ற இடத்தில் புதிதாக ஒரு சோதனைச்சாவடியை அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். இந்த வழியாகத் தான் புலி சினிமா யூனிட்டை சேர்ந்த வாகனங்களும் சென்றுவரும். முன்னர் சினிமா யூனிட் வாகனங்களை போலீசார் சோதனையிட மாட்டார்கள். ஆனால் இந்த சம்பவத்துக்கு பின்னர் கடந்த 3 நாட்களாக சினிமா யூனிட்டின் வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. நேற்று சினிமா படப்பிடிப்பு நடைபெறும் இடத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். ஆயுதம் தாங்கிய 30 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் சோதனைக்கு இடையே பரபரப்பான நிலையிலேயே சினிமா படப்பிடிப்பு நடந்தது.

தமிழ் சினிமா படப்பிடிப்பு என்பதால், தமிழ் மொழி மட்டுமே தெரிந்த செம்மர கடத்தல்காரர்கள் இவர்களுடன் கலந்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் படப்பிடிப்பு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில், நேற்று காலை படப்பிடிப்பில் இருந்த நடிகை சுருதிஹாசன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
 ட்ரீம் ஸ்சோன் மூவீஸ் வழங்கும்  பிரேம்ஜி –  அத்வைதா  – லீமா நடிக்கும்  “ மாங்கா “

ட்ரீம் ஸ்சோன் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.கே.சக்திவேல் தயாரிக்கும் படம்   “ மாங்கா “ இந்த படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அத்வைதா,...

Close