ஆரம்பம் – விமர்சனம்

‘ஆரம்பமே இனிமேதான்’ என்று இன்டர்வெல்லில் அஜீத் பேசும் ஒரு பவர்ஃபுல் டயலாக்கிற்கான முன் பின் காரணங்கள்தான் இந்த படம். இந்த ‘பலே யோஜனா’ டைரக்டருக்கு ஆம் ஆத்மி, அன்னாஹசாரே குரூப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ரூவா நோட்டில் மாலை போட்டாலும் தப்பில்லை. ஏனென்றால் சுவிஸ் வங்கியிலிருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்த கதையின் சதை! இதற்குள் ஆக்ஷன் ஹீரோக்களுக்கென்றே உருவாக்கப்பட்ட பழிவாங்கல் ஃபார்முலாவை பொருத்தினால் ‘ஆரம்பம்’ தயார்.

அஜீத் இந்த படத்திற்கு எத்தனை கோடி சம்பளம் வாங்கியிருந்தாலும் அதில் ஐம்பது பைசாவை மட்டும் நடிப்புக்கு ஒதுக்கி வைத்துவிட்டு மிச்சமிருக்கும் அவ்வளவு பணத்தையும் அவரது ஸ்டைலான லுக்குக்காக எடுத்துக் கொள்ளலாம். அப்படியொரு கம்பீரமான லுக்கில் அவர் சும்மாவே நடந்து வந்தால் கூட படத்தை மூணு மணி நேரம் அலுக்காமல் பார்க்கலாம் போலிருக்கிறது. இவரும் நயன்தாராவும் ஆர்யாவை திட்டம் போட்டு தங்களது கஸ்டடிக்கு கொண்டுவருகிற அந்த திருப்பம்… யாராலும் யூகிக்க முடியாத அதிரடி. அதற்கப்புறம் அவரை வைத்துக் கொண்டு இவர்கள் நடத்தும் டமால் டுமீல் ராஜ்ஜியத்தை கண்டு ஆர்யா அலறுவதைப் போலவே அஜீத்தின் ரசிகர்களும் அலறுவார்கள். ‘ஐயய்யே… தலய நம்பியாராக்கிட்டாங்களே’ என்றுதான்.

ஆனால் அதுவரைக்கும் சிந்திய அவ்வளவு துப்பாக்கி ரவைகளையும் பூவாக தொடுத்து ரசிகர்களின் காதில் செருகி வைக்கும் டைரக்டர் விஷ்ணுவர்த்தன், ‘அவரு யாரு தெரியுமா? எப்படியிருந்தாரு தெரியுமா?’ என்று நயன்தாராவை விட்டு பிளாஷ்பேக்கை ஓப்பன் பண்ண, அட… அஜீத் ஒரு பாம் ஸ்குவார்டு அதிகாரி! சக அதிகாரியான ராணாவின் உயிரை ஊழலில் நெய்தெடுத்த புல்லட் புரூப் காவு வாங்கிவிட்டதே என்று பழி வாங்க புறப்படுகிறார்.

எல்லாம் வல்ல போலீஸ் அஜீத்தை, எல்லாம் ‘வில்ல’ பழிவாங்கல் அஜீத், துக்கி சாப்பிடுகிறார். பின்னவரை விட முன்னவரின் உடல்வாகும் கச்சிதம். நயன்தாரா மாதிரி ஒரு லட்டுவை பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஒரு கனவு காட்சிக்கு கூட வழியேற்படுத்தாமல் விட்ட விஷ்ணுவர்த்தனை யாராவது தண்ணியில்லா காட்டுக்கு மாத்துங்கப்பா….!

நயன்தாராவுக்கு காதல் இல்லை. சந்தானம், சூரிகள் இல்லை, அட… இதையெல்லாம் விடுங்க. ஹீரோவான அஜீத்துக்கு கன்னத்தில் மரு, ஒரு கண்ணில் புரை போன்ற துளித் துளி மாறுவேஷங்கள் கூட இல்லை. இப்படி பல ‘இல்லை’களால் தனது ‘இருப்பை’ நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் டைரக்டர் விஷ்ணுவர்த்தனுக்கும் பாராட்டுகள்.

ஆர்யாவை வித்தியாசமாக காட்ட வேண்டும் என்று கிராபிக்சில் மெனக்கெட்டிருக்கிறார்கள். அதுவும் நன்றாகவே ‘பளு’ சேர்த்திருக்கிறது அவரது கேரக்டருக்கு. கம்ப்யூட்டர் புரோகிராமில் கில்லாடியான இவரை நயன்தாரா கொண்டு போய் அஜீத்திடம் கோர்த்துவிட, இவரும் டாப்ஸியும் சேர்ந்து அவர்களிடம் சிக்கி படுகிற அவஸ்தைகள் ஒவ்வொன்றும் உயிர்கொல்லி நிமிடங்கள். ‘நான் சொல்றதுக்கெல்லாம் ஐ லவ் யூ மட்டும் சொல்லு’ என்று ஆர்யா போனிலேயே நிலைமைய விளக்க, டாப்ஸி சொல்லும் ஐ லவ் யூகளில்தான் எத்தனையெத்தனை சோகம்? அதிருக்கட்டும்… ஆர்யாவுக்காக தனது ஸ்பேசையும் சற்றே விட்டுக் கொடுத்திருக்கிறார் அஜீத். சில காட்சிகளில் ஆர்யா அஜீத்தை கை ஓங்குகிற அளவுக்கு போகிறது இந்த சுதந்திரம். ஆனால் அஜீத் ரசிகர்கள்தான் தியேட்டரில் ‘ஆர்யா பிரியாணி’க்காக கத்தியை தீ(தி)ட்டுகிறார்கள்.

ஆர்யாவும் அஜீத்தும் இணைந்து சுவிஸ் பேங்கில் இருக்கும் பணத்தை ஆன் லைன் டிரான்ஸ்பர் மூலம் களவாடுகிற காட்சி ரசிகர்களுக்கு அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக விஷுவலில் எவ்வளவோ மெனக்கெட்டிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். ‘பணத்தை ரிசர்வ் பேங்க் அக்கவுண்டுக்கு மாற்றிவிடு’ என்று லாஜிக்கே இல்லாமல் கனவு காண்கிற சுதந்திரம் படைப்பாளிகளுக்கு இருப்பதால், ‘கடனே’ என்று அதையும் ரசிக்க வேண்டியிருக்கிறது.

நயன்தாரா ஒரு வில்லனின் ‘பவர் பாயின்ட்’டில் துப்பாக்கியை வைக்க, அந்த சண்டைக்காட்சியை எப்படியெப்படியோ ரசிக்க வைக்கிறார் டைரக்டர். நயன்தாராவும் ஒரு ஆக்ஷன் குயினை போல அதிரடி கிளப்பியிருக்கிறார். யாருக்காக இவ்வளவு தாராளமோ? நயன்தாராவின் காஸ்ட்யூமரின் சிக்கன நடவடிக்கைக்கு ஊரே கூடி ஒரு சல்யூட்! நயன்தாரா அண் பேமிலி விஷம் குடித்து சாகக் கிடக்கும் அந்த சீன் மனதில் ஒரு சிறு தேம்பலை கூட ஏற்படுத்தாதுதான் துரத்திருஷ்டம்.

இஞ்ச் மாறாத கிஷோர், இம்மி பிசகாத வில்லன்கள் என்று பார்த்து பழகிய பழைய மாவு ஐட்டங்களும் படத்தில் உண்டு. நாயகன் பட ஸ்டைலில் அஜீத், ராணா, நயன்தாரா ஆடும் அந்த பாடல் காட்சி கலர்ஃபுல் கோலம். ஒரு ‘பார்’ பாடலில் ‘நான் முரட்டு தமிழச்சி’ என்று வரிகள் போட்டிருக்கிறார் பா.விஜய். படத்தில் ஆடுகிற பெண் இந்திக்கார மந்திரியின் புத்திரி. இப்படி கத்தரி போட வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது படத்தில்.

ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவில் பல காட்சிகளை ஒரு போட்டோ கண்காட்சியை போல ரசிக்க முடிகிறது. தினேஷ், ஷோபி நடனங்களில் இருக்கிற பிரமாண்டமும் புதுமையும் யுவனின் இசையில் இல்லாமல் போனது துரதிருஷ்டம். வரவர யுவன் ஸ்ரீகாந்த் தேவா ஆகிக் கொண்டிருக்கிறார். இதனால்தான் ஆடியோவை முறைப்படி வெளியிடாமலே விட்டுவிட்டார்களோ என்னவோ?

அஜீத் போன்ற டபுள் ட்ரிப்பிள் மாஸ் ஹீரோக்களுக்கு இந்த காம்பினேஷன் படமே சமுத்திரத்தை தாண்டிய ஜன கூட்டத்தையும், கலெக்ஷன் ஊட்டத்தையும் கொடுக்கும் என்றால், ஷங்கர் போன்ற இயக்குனர்களோடு அவர் இணைந்தால் அந்த ‘ஆரம்பம்’ எப்படியிருக்கும்?

ச்சும்மா தோணுச்சு…!

-ஆர்.எஸ்.அந்தணன்

5 Comments
 1. subramaniya shiva. says

  arumai….anna.

 2. Rasigan says

  Your review in video format:
  http://www.youtube.com/watch?v=Q9khcHxFTzI

 3. Velupraba says

  டியர் Mr .அந்தணன்,
  உங்கள் விமர்சனம் ஓகே.
  ஆனால், தொடர்ந்து நீங்கள் ‘யுவன்’ மியூசிக்-பற்றி குறை சொல்லும் போக்கு (மிக கீழ்த்தரமாக, கடுமையாக விமர்சிப்பது) ஏற்புடையதல்ல..மற்ற இசை அமைப்பாளர்களை நீங்கள் இந்த அளவுக்கு விமர்சிப்பது இல்லை!? விமர்சனம் என்பது தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்..ஒரு படைப்பாளியை விமர்சனம் என்ற பெயரால் காயப்படுத்துவது மிக மிக கண்டிக்கத்தக்கது, வருத்ததிற்குரியது..உங்களுக்கு (மட்டும்) பிடித்த இசையை கொடுப்பதற்காக யுவன் இசை அமைக்க வரவில்லை..திறமை இல்லாமல் ஒரு கலைஞன் 100 படங்களுக்கு மேல் இசை அமைப்பது சாதாரண விசயமில்லை..முடிந்தால்!? ஒரு பாடல், பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என்று ‘நீங்கள்’ உருவாக்கி காட்டவும்..பின்னர் யுவன்-இசை பற்றி நீங்கள் விமர்சனம் செய்யலாம்..

  மற்றபடி உங்கள் கட்டுரை, தொடர், இதர செய்திகள் நன்று..தொடரவும்.. வாழ்த்துக்கள்..

 4. rrmercy says

  this movie missed lot of logic.
  1. Why did they miss to revenge bullet proof jacket manufacturing company which did lobby.
  2. How worst that introduction encounter was?
  3. Tired of innocent and talkative characters of tamil cinema.
  4. Ajith doing this revenge for his single friend. why he is killing around 40 innocent police man.
  5. is reserve bank have account number?
  and big list so far

  http://kanavuthirutan.blogspot.in/2013/11/blog-post.html

  1. Ram says

   Aalugala paru. Nee padam parka poniya illa parichai elutha poniya? Athu padam, karpanai. Nijam illai. Unna mathiri logic pathukkittu iruntha cinemava rasikka mudiyathu. Theatrukku pogum pothu student maathiri po, vaathiyaar maathiri illai kurai kandupidikka.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மருத்துவமனையிலிருந்து விழா மேடைக்கு… – ஒரு டைரக்டரின் போராட்டம்!

மகள்களை பெற்ற அப்பாக்களுக்குதான் தெரியும்... முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்று. தன் படத்தின் வெற்றியை விட இந்த டயலாக்கை மக்கள் மனதில் ஒட்ட வைத்தவர் டைரக்டர் ராம்....

Close