ஆஹா கல்யாணம் / விமர்சனம்
ஒரு மேகத்திற்குள் எத்தனை மழைத்துளிகள் என்று யாரால் கணிக்க முடியும்? காதலை அள்ளி சுமந்து கொண்டு இன்னும் எத்தனை எத்தனை படங்கள் வருமோ, தெரியாது. ஆனால் இந்த படம் காதல் ஸ்பெஷல்! காதலர்கள் ஸ்பெஷல்! ஏன் காதலிக்காதவர்களின் ஸ்பெஷலும் கூட! படம் துவங்கிய பத்தாவது நிமிடத்திலேயே நம் மனசுக்குள் மருதாணி மாதிரி ஒட்டிக் கொள்கிறது இந்த ஜோடி. அதற்கப்புறம் அவர்களின் சேட்டை பிடிக்கிறது. சில்மிஷம் பிடிக்கிறது. சண்டை பிடிக்கிறது. அழுகையும் பிடிக்கிறது. இந்த படத்தை உருவாக்கிய இளமை குறும்பர்கள் எல்லாரையும் பிடிக்கிறது.
கதை களம் புதுசோ புதுசு! மேரேஜ் ஆர்கனைசிங் என்றொரு தொழில் இருக்கிறது. ஒரு கல்யாணத்தை இவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் போதும். ஜம்மென்று காலாட்டிக் கொண்டே கல்யாணத்தை முடித்துவிடலாம். இந்த படத்திலும் அதுதான் பின்புலம். கதாநாயகன் நானி, தனது காலேஜ் தோழர்களுடன் ஒரு கல்யாண விருந்துக்கு போகிறார். இது திருட்டு சாப்பாடு. போகிற இடத்தில் மேரேஜ் ஆர்கனைசராக இருக்கும் புதுமுகம் வாணி. ‘நீ யாருக்கு சொந்தம்ப்பா? பொண்ணு வீட்டுக்கா, மாப்பிள்ளை வீட்டுக்கா?’என்று கேள்வி கேட்டு ‘அப்படின்னா நீ வெத்து வேட்டா?’ என்று வெறுப்பேற்றுகிறார். நாலைந்து சந்திப்புகளுக்கு பிறகு லேசாக கொக்கி போடும் நானியிடம், ‘எனக்கு லவ் பண்ணவெல்லாம் நேரம் இல்லே. ஒரே லட்சியம் ‘கெட்டி மேளம்’ என்ற கம்பெனியை ஆரம்பிச்சு. நல்லா சம்பாதிப்பதுதான்’ என்கிறார். ‘நானும் பார்ட்னரா வர்றேன்’ என்று விடாமல் துரத்தும் நானியிடம், ‘ம்ஹூம் சரிபட்டு வராது. பிசினஸ்ல ரொமான்சுக்கு இடம் இல்லே’ என்கிறார்.
‘நோ ரொமான்ஸ், ஒன்லி பிசினஸ்’ என்று சம்மதிக்கும் நானிக்கும் வாணிக்கும் லவ் வந்து தொலைந்தாலும் பரவாயில்லை. ஸ்ட்ரெயிட்டாக ‘அது’ நடந்து விடுகிறது. மெல்ல நானியை லவ் பண்ண ஆரம்பிக்கும் வாணியை புரிந்து கொள்ளாமல் நானி பேசும் சில டயலாக்குகள் வாணிக்குள் தீராத கோபத்தை ஏற்படுத்த வார்த்தைகள் வெடிக்கிறது. பிரிகிறார்கள் இருவரும். அதுவரை இவர்கள் இணைந்து நடத்திய கெட்டி மேளம் கம்பெனியை வாணி பிரித்துக் கொள்ள, தனியாக தொழில் ஆரம்பிக்கிறார் நானி. ஆனால் இருவருமே தொழிலில் சொதப்ப ஆரம்பிக்கிறார்கள். ‘மீண்டும் இணைந்து வாங்க. ஆர்டர் தர்றேன்’ என்கிற கோடீஸ்வர ஆர்டர் ஒன்றுக்காக மறுபடியும் இணைந்து ஒரு கல்யாணத்தை நடத்த, அதற்கப்புறம் என்னவாகிறது இவர்களின் லவ்? என்பதுதான் க்ளைமாக்ஸ்.
‘நல்ல நேரம் வந்தா நல்லபாம்பு கூட உள்ளங்கையில் மாணிக்கம் கக்கும்’ என்பது மாதிரி, இந்த படத்தின் பிள்ளையார் சுழி டூ எண்ட் கார்டு வரைக்கும் எல்லாமே அட்சர சுத்தமாக அமைந்திருக்கிறது. ஹீரோ நானியை விட்டால் இந்த கேரக்டரில் நடிக்க ஆளேது என்கிற மாதிரி நடித்திருக்கிறார் அவர். வாணி மட்டும் என்னவாம்? அவர் ஆடும் ஆட்டத்தை தமிழ்சினிமாவில் இப்போதிருக்கும் ஹீரோயின்கள் எவர் ஆடினாலும், கைவசம் நாலைந்து சுளுக்கு டாக்டர்களுடன், ஐம்பது அயோடக்ஸ் பாட்டில்களும் வைத்துக் கொண்டுதான் பாடல் காட்சிகளை எடுத்திருக்க முடியும். முக பாவனைகளில் இன்னொரு ஜோதிகாவாக இருக்கிறார். சட்டென முகத்தில் படரும் சந்தோஷமும் சோகமும் ‘எங்கேயிருந்தே பட்டாம்பூச்சியே இத்தனை நாளும்?’ என்று கேட்க தோன்றுகிறது.
பெரிய வில்லியாக வரப்போகிறார் என்கிற அளவுக்கு சிம்ரனின் அறிமுகம் இருக்கிறது. ஆனால் அவரும் பாதியிலேயே காணாமல் போய்விடுகிறார். படத்தில் நமக்கு தெரிந்த மற்றொருவர் படவா கோபிதான். அவரும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார்.
நானியே டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். ‘என்னடா, தமிழை தெலுங்கு மாதிரியே பேசுற?’ என்றொரு டயலாக்கை வைத்து சமாளித்திருக்கிறார் இயக்குனர் கோகுல். அதற்கும் விழுந்து விழுந்து சிரிக்கிறது தியேட்டர். படம் நெடுகிலும் சீரியசான காட்சிகளில் கூட எட்டிப் பார்க்கும் ஜோக்குகள்தான் ப்ளஸ் ப்ளஸ். தனக்கும் வாணிக்குமான சண்டையை நண்பனிடம் விவரிக்கும் நானி, பேச்சுக்கு நடுவில், ‘அவ ஒரு டீ போட்டுக் கொடுத்தாடா, சகிக்கல’ என்று கூறிவிட்டு சம்பவத்தை சொல்ல தொடங்குவது ஒரு சாம்பிள்தான். புயலடிக்கும் க்ளைமாக்ஸ் சமயத்தில் கூட இப்படி ஒரு டயலாக்கை போட்டு மொத்த கூட்டத்தையும் கலகலக்க வைக்கிறார் டைரக்டர் கோகுல் கிருஷ்ணா. இந்த படத்தின் வசனகர்த்தா எவரோ, அவரை கட் அவுட்டுகள் வைத்து கவுரவப்படுத்தினால் கூட தப்பில்லை.
வாரியிறைத்த வாட்டர் கலர் போல எல்லா காட்சிகளும் கிராண்டியராக இருக்கிறது. வண்ணங்களின் கலவையை வடிவத்தோடு தந்த ஒளிப்பதிவாளர் லோகநாதன் ஸ்ரீநிவாசன் பாராட்டுக்குரியவர். அப்படியே இந்த படத்திற்கு ஆன செலவை பற்றி கவலையே படவில்லை போலிருக்கிறது தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ். காட்சிக்கு காட்சி லட்சங்களும் கோடிகளும் கண்முன் தெரிகிறது.
இசை தரண். நம்ம ஊரு புள்ளதான். ஆனால் தெலுங்கு ஸ்டைலில் அடித்திருக்கிறார். வெறும் பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு அவர் உருவாக்கியிருக்கும் பாடல் ஒன்று புதுமையோ புதுமை.
போஸ்டர்களையும் அதில் வழியும் வண்ணங்களையும் பார்த்துவிட்டு இது டப்பிங் படம் என்று எண்ணி உள்ளே போகாமல் நடையை கட்டுகிற ரசிகர்களுக்கு பெருத்த நஷ்டம் காத்திருக்கிறது. எந்த நஷ்டத்தையும் விட பெரிய நஷ்டம் காதல் கிடைத்தும் அதை அனுபவிக்காமல் விடுவதுதான்.
அந்த பழிக்கு ஆளாக நினைப்பவர்கள் மட்டும் இந்த கல்யாணத்தை புறக்கணிக்கலாம்.
-ஆர்.எஸ்.அந்தணன்