இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா – விமர்சனம்

‘ணங்….’ -இன்னாபா இது?

விஜய் சேதுபதி நடிச்சிகிறாரு. அப்புடீன்னாக்கா படம் சோக்காதான் இருக்கும்னு நென்ச்சோம் பாரு, அதுல வுழுந்த கல்லுபா அது!

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் டைப்ல லைட்டிங் இருக்கு. அப்படின்னா படமும் கொஞ்சம் டச்சிங்காதான் இருக்கும்னு முன் சீட்டில கால துக்கி வச்சுகிட்டு உட்கார்ந்தா, பின்னணி சவுண்டுங்குற பேர்ல, சவுண்ட் பாக்சை பொளந்து தலையில கொட்றாய்ங்க. பழைய பேப்பர் கடையில பார்சல் கட்டறதுக்கு பேப்பர் வாங்குன மாதிரி துண்டு துண்டா காட்சிகள்னும், திண்டு திண்டா வசனங்கள்னும் ரெண்டரை மணி நேரம் நம்மள போட்டு கிரைண்டர்ல ஆட்டி, கடைசியா கொஞ்சூண்டு உளுந்தம் வடை கொடுக்கிறாய்ங்க. அது மட்டும் கொஞ்சம் ருசியாயிருக்கு. மற்றபடி இதற்காகதான் ஆசைப்பட்டாயா ‘போரு’குமாரான்னு போட்டு தாளிச்சதுல சட்டையில ரெண்டு பட்டனே அவுட்டுபா…

கதை இன்னாவாம்…? ஏதோ ஒரு கலீஜான அபார்ட்மென்ட். அங்க பளீச்சுன்னு ஒரு குமுதா. எதிர்வீட்டு அழுக்கு பையன் சுமார் மூஞ்சி குமாருக்கு அவ மேல ஒரு இது. அவளுக்கோ இவன கண்டாலே ஆகல. நைசா தம்பிய இட்டாந்து அண்ணாச்சிகிட்ட விட்றாங்க. அண்ணாச்சி ஆளுங்க நாலு மொத்து மொதுறதுல ‘சுமார் மூஞ்சி’ மேலும் சுமாராகி பையில இருந்த செல்போனையும் தவற விட்டுட்டு குவார்ட்டருக்கும் ஆஃபுக்குமா ராவெல்லாம் அலையுறாரு. அப்படியே சைடாப்ல இன்னொரு கதையை எடுத்து சொருவுற டைரக்டரு, அங்க ஒரு படிச்ச பையனோட லவ்வை காமிக்கிறாரு. அதுங்க ரெண்டும் சதா நேரமும் மூஞ்சுல கருவாட்ட வறத்துகுனு ஒரே சண்ட.

அந்த எரிச்சல்ல அவன் ரோட்ல ஒரு கர்ப்பிணிய பைக்ல இடிச்சு தள்ள, அவளுக்கு ஏ பாசிட்டிவ்வோ, இசட் பிளஸ் ரத்தமோ வேணும்ங்குது நர்சு. அது நாலே நாலு பேருகிட்டதான் இருக்கு. அதுலயும் ஒருத்தன்தான் லைன்ல இருக்கான். அவன வுடாம புடிச்சு இட்டான்னு அந்த நர்சு சொல்ல, அந்த ஒருத்தன்தான் நம்ம சுமார் மூஞ்சி குமாரு. செல்போன்ல ஓயாம ட்ரை பண்ற பசங்க, கடைசியா சுமார் மூஞ்சு குமாரை ரீச் பண்ணறதுக்காக, அவனோட லவ்வர் குமுதாட்ட போக, குமுதா குமாருக்கு லவ் யூ சொல்ல, ஆங்… சொல்ல மறந்தாச்சு. நடுவாப்ல ஒருத்தன பார்ல வச்சு போட்டு தள்றாய்ங்க. அது கள்ளக் காதல் மேட்டராம். இத துக்கி அதுல விட்டு, அத துக்கி இதுல விட்டு, நடுவாப்ல எதை எதையோ கதையுல போட்டு கலக்கி எடுக்கிறாரு டைரக்டரு. ஒரு வழியா படம் முடிஞ்சு வெளியில வரும்போது, கண்ணுல குடம் குடமா தண்ணி. புரட்யூசர் சேர்த்து வச்ச பணமெல்லாம் இப்படி கொட்டாவியா போச்சேன்னுதான்…

ஆனா அங்கங்க விஜய் சேதுபதி சீன் போட்ற சீனெல்லாம் செம அலப்பறைப்பா. அதுவும் அந்த அண்ணாச்சியாண்ட கால் மேல கால் போட்டு உட்கார்ந்துகிட்டு பேசுற அலம்பலு இருக்கே, மெரட்ரான் மனுசன். ஒவ்வொரு தபா மொக்கை வாங்கும்போதும், ‘பட் குமுதா ஹேப்பியண்ணே’ன்னு சொல்றாருல்ல. சிரிச்சதுல பக்கத்துல ஒறங்குவனரும் எழுந்து உட்காந்துட்டாருபா.

ஃபோன அண்ணாச்சிகிட்ட தர்றேன்னு அப்பா ராஜா சொல்ல, ‘கடைக்கார அண்ணாச்சியாப்பா’ன்னு அந்த பொண்ணு கேட்க, பேட்டை தாதா பசுபதி அண்ணாச்சியோட ஃபேஸ் ரீயாக்சன் பாக்கணுமே, பின்றாரு. இந்த மாதிரி படத்துல அங்கங்க காமெடிய தெளிச்சதுனால ஸ்கிரீன் தப்புச்சு. இல்லேன்னா… ஹ்ம்.

ஆமா, குடிக்கறதுக்கு நான் சரக்கு தர்றேன்னு பைக்ல ஏறிகிட்டு கிளம்புற அந்த பிரதர் யாருப்பா. சொன்னதையே சொல்ல சொல்லி ரசிக்கிறத பார்த்தா, ரூம் நிறைய வச்சுருப்பாரு போலன்னே தோணுது. போய் பார்த்தா, காலி பாட்டிலை கவுத்து கவுத்து புடிக்கலாம் வான்னு அவரு கூப்பிட சொல்லோ, தியேட்டர்ல கைதட்டறத பார்க்கணுமே, அது நல்ல சீனுப்பா.

பரோட்டா சூரி, அந்த பரோட்டாவை செய்யறதுக்கு ஒரு ரூல்ஸ் வச்சுருப்பானுங்களே, அதுமாதிரி நம்பள போட்டு வதைக்குறாரு. இவருக்கு சோடியா செட்டாகுதே, அந்த சூரியகாந்தி பூ. எங்கபா இருக்குது அதோடு வூடு. ஆட்டோகிராப்புல ஒரு சைனு வாங்கலாம்னுதான்…

விஜய் சேதுபதி சட்டையெல்லாம் கிழிஞ்சு, மூஞ்சியெல்லாம் ரத்தம் வழிய தெருவெல்லாம் திரியுறாரு. நல்லா அடி வாங்குறாரு. இமேஜ் பார்க்குற ஹீரோங்களுக்கு ‘விஜய்சேதுபதி- ஒரு சிறு குறிப்பு’ன்னு வரைஞ்சு பைண்டிங் பண்ணி அனுப்பி வைக்கணும் போல தோணுது. ஆனா வண்டிய இவரு இதே ரூட்ல தொடர்ந்து ஓட்டுனா, சுமார் மூஞ்சி குமாருக்கு அண்ணாச்சி ஆளுங்க கொடுத்த வைத்தியத்தைதான் ஜனங்க கொடுப்பாங்க, பார்த்துக்கங்க….

லைட்டிங், கேமிராவெல்லாம் நல்லாதான் இருக்கு. அந்த ‘பின்னால’ மியூசிக் போட்ட தம்பிய மட்டும் நைசா இட்டாந்து காது ஓட்டையில ‘கார்க்’ வச்சு அனுப்பணும் போல தோணுது.

கதையே இல்லாததையெல்லாம் கதைன்னு பாராட்றாய்ங்க, இது ஒரு படமான்னு நினைச்சா, இதாண்டா படம்ங்கிறாய்ங்க. ஒருவேளை நம்மதான் சுமார் புத்தி குமாராயிட்டமோ? ரொம்ப டவுட்டாயிருக்குபா….!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
முஸ்லீம் தீவிரவாதிகளுடன் தமிழக, ஆந்திரா போலீசார் துப்பாக்கி சண்டை… தமிழக எல்லையில் பயங்கரம்…

ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே புத்தூ­ரில் பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்­டனர். இவர்களை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சண்டை நடத்தினர். இதில்...

Close