இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா முதல் நாள் நிகழ்ச்சி தொகுப்பு! -டாப் டூ பாட்டம் வரை…

* சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து நேரு விளையாட்டு அரங்கம் வரை முதல்வர் விழாவுக்கு வரும் வழியில், முதல்வரை வாழ்த்தியும் அவரது மலிவுவிலை உணவகம், மலிவு விலை குடிநீர் ஆகிய திட்டங்களைப் பாராட்டியும், பல பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. வழியெங்கும் மங்கல மேளம், கேரளத்து செண்டை மேளம், நாட்டுப்புற நடனம் என்று வீரியமான விழாக் கோலம் வசீகரித்தது. ஏராளமான அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் முதல்வரைக் காண வழியெங்கும் கூடி இருந்தார்கள்.

* நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா மேடை இந்திர லோகம் போல ஜொலித்தது. கூம்புக் கோபுரங்கள் அடங்கிய ஏழு மாடங்களுடன் கூடிய உப்பரிகை போன்ற தோற்றத்தில் மேடை அமைந்து இருக்க, ஒவ்வொரு மாடத்தினுள்ளும் பிலிம் சுருள் ஒன்று நுழைந்து வெளியேறுவது போன்ற நவீன லேசர் காட்சி அமைக்கப்பட்டு இருக்க, நடுவில் உள்ள மாடத்தின் திரையில், பிரிக்கப்பட்ட பரிசுப் பேழையில் இருந்து நூறாண்டு சினிமா என்ற எழுத்துக்கள் தாங்கிய சுழலும் நாணய வடிவமும் முதல்வரின் உருவமும் மாறி மாறி ஒளிர்ந்தன.

* சினிமா கலைஞர்கள் உள்ளே வரும்போதெல்லாம் ரசிகர்கள் ஆரவாரம் செய்தாலும், ரஜினி, கமல், அஜீத் மூவருக்கும் பலத்த ஆரவாரம் எழுந்தது.

*தனது படத்தின் இசை வெளியீட்டு விழா முதல் எந்த சினிமா விழாவிலும் கலந்து கொள்ளக் கூடாது என்பதை கொள்கையாக வைத்திருக்கும் அஜீத் இந்த விழாவுக்கு மனைவி ஷாலினியோடு வந்தார். அவரை சரியான வழியில் அழைத்துச் செல்லாமல் சில நொடிகள் அலைக்கழித்து பிறகு அவருக்கான இடத்தில் அவரை அமர வைத்தார்கள்.

* முதல்வரின் வருகைக்கு முன்பே வந்த சசிகலா பார்வையாளர் வரிசையில் முதல் வரிசையில் அமர்ந்தார். முதல்வர் கிளம்பிச் சென்ற பிறகும் வெகுநேரம் இருந்து கலை நிகழ்ச்சிகளை ரசித்துப் பார்த்தார் சசிகலா.

* முதல்வர் அரங்கின் நுழைவாயிலுக்கு வருவது அரங்கின் உள்ளே அகன்ற திரையில் காட்டப்பட, அரங்கம் (நிஜமாக) அதிரும் ஆரவாரம்.

*வரவேற்புரை ஆற்றிய தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் கல்யாண், வார்த்தைக்கு வார்த்தை முதல்வரை அம்மா என்று அழைத்து , “அம்மா நீங்கள் இல்லாவிட்டால் இந்த விழா சாத்தியம் இல்லை” என்றார்.

* சற்று தாமதமாக வந்த கமல்ஹாசன் பலத்த கரகோஷத்துடன் மேடையேறினார். முதல் நாற்காலியில் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அமர்ந்து இருக்க, அவருக்கு வணக்கம் வைத்து விட்டு அவர் பக்கத்திலேயே அமர்ந்து விட்டார்.

*தென்னிந்திய திரையுலகின் நான்கு மொழித் திரைப்படக் கலைஞர்களில் ஒவ்வொரு பிரிவிலும் சாதித்தவர்கள் பற்றிய மிக நீண்ட பட்டியலை வாசித்து உற்சாகமாக பேசிய முதல்வர், எம்ஜிஆரின் சிறப்புகளை எடுத்துரைத்து, சற்றே அரசியல் தொட்டு கண்ணியமாக உரையாற்றி “என் காலத்தில் தமிழ் திரையுலகம் சுதந்திரமாக இயங்குகிறது” என்று குறிப்பிட்டு, ‘எனக்கு வேண்டிய யாருடைய தலையீடும் அதில் இல்லை’ என்பதை பூடகமாக உணர்த்தி “நல்ல கருத்துக்களையும் முற்போக்கு சிந்தனைகளையும் எண்ணங்களையும் இளைய சமுதாயத்திற்கு எடுத்து சொல்லும் வகையிலும், ஜாதி மத ரீதியாக யாருடைய மனமும் புண்படாமல் இருக்கும் வகையிலும், வன்முறை, ஆபாசம் இல்லாமலும் படங்களை எடுக்க வேண்டும் என்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன். திரைப்படத் துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு வழங்கும்” என்றார்.

*முதல்வர் பேசும்போது ஒவ்வொரு விஷயத்துக்கும் தலையை ஆட்டி ஆட்டி ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார் விவேக்.

* திரையுலகில் சாதித்த 59 பேருக்கு முதல்வர் கையால் விருது வழங்கப்பட்டது. சக்கர நாற்காலியில் இருந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு முதல் விருது வழங்கப்பட, அடுத்து விருது பெற்றவர் கமல்ஹாசன். சரோஜா தேவி, சவுகார் ஜானகி, சாரதா, எம்.என்.ராஜம் போன்ற பழம் பெரும் நடிகைகளின் பெயர் விருதுப் பட்டியலில் இருந்த நிலையில், தனது பெயர் இரண்டாவதாக அழைக்கப்படும் என்று கமலே எதிர்பார்க்கவில்லை. (உங்களுக்கு வயசு குறைவு (?) என்றாலும் உங்க சினிமா அனுபவம் அதிகம் அல்லவா கமல்!) விஸ்வரூபம் விவகாரத்துக்குப் பிறகு, முதல்வரை கமல் நேரடியாக சந்திக்க, புன்சிரிப்புடன் முதல்வர் விருது வழங்க, மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார் கமல்.

* முதல்வரின் கையால் விருது பெற வந்த பழம்பெரும் நடிக நடிகையர் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலர், விருதைப் பெற்றுக் கொண்டு, முதல்வரிடம் பேசிக் கொண்டிருக்க, அதனால் அடுத்து விருது பெறுவோர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட, பேசிக் கொண்டு இருப்பவர்களை நகரச் செய்யும் பணி, முதல்வரின் பக்கத்தில் இருந்த ஏ.வி.எம். சரவணனுக்கு தானகவே அமைந்தது. மிக கண்ணியமான புன்னகையுடன் தனது முக பாவனைகள் மூலமே அதை பலருக்கும் உணர்த்தி, நகரச் செய்தார் சரவணன்.

* மிகுந்த வேலை பளுவுக்கு இடையே முதல்வர் விழாவுக்கு வந்திருக்க வேண்டும் என்பது, அவரது முகக் களைப்பிலேயே தெரிந்தது. (பேசும்போது லேசான இருமல் வேறு). அந்த நிலையிலும் 59 கலைஞர்களுக்கும் தன் கையால் விருது வழங்கி அவர்களின் நலம் விசாரிப்புக்கு எல்லாம் பதில் சொல்லி, முதுமை காரணமாக விருது வாங்கும் கலைஞர்கள் பலர் மெதுவாக நடந்து வந்த போதும் பொறுமையாக நின்று விருதுகளை வழங்கி, இந்த விழாவின் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தினார் முதல்வர்.

* சவுகார் ஜானகி விருது பெற வந்தபோது, அவர் உற்சாகமாக சில வார்த்தைகளை முதல்வரிடம் பேச, முதல்வரும் உற்சாகமாக பேசி, அவரது கன்னத்தைத் தட்டிக் கொஞ்சினார். (சக நடிகையாக இருந்தபோது இவரை கடுமையாக எதிர்த்தவர் சவுகார் ஜானகி)

* ஆரம்ப கால தமிழ் சினிமா பாடல்கள் தொகுப்புக்கு நடனம் மற்றும் சந்திரலேகா படத்தின் முரசு நடனப் பாடலை நினைவு கூரும் வகையில் அந்தப் பாடலுக்கு ஒற்றை முரசு மட்டும் அரங்கில் இருக்க, நடனக் கலைஞர்கள் நடனம் ஆடும் நிகழ்ச்சி உள்ளிட்ட, ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் பார்த்து விட்டு முதல்வர் கிளம்பி விட, கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

* முதல்வர் கிளம்புவதற்கு சில நிமிடங்கள் முன்பு வந்தார் சூர்யா. விஜய் எப்போது வந்தார் என்றே தெரியவில்லை. முதல்வர் போன பிறகுதான் அவர் இருப்பதே ரசிகர்களுக்கு காட்டப்பட்டது. அதே நேரம் முதல்வர் அமர்ந்து பார்த்து ரசித்த, தமிழ் சினிமா பற்றிய தொகுப்பு நிகழ்ச்சியில் (பின்னணிக் குரல் நடிகர் சத்யராஜ் ) மாபெரும் சினிமா சாதனையாளர்கள் வரிசையில் கலைஞர் கருணாநிதியும் இடம்பெற்று இருக்க, பராசக்தி படத்தில் நடிகர் திலகம் பேசும் “கோயில் கூடாது என்று நான் கூறவில்லை. அது கொடியவர்களின் கொள்ளைக் கூடமாக இருக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்” என்ற வசனம் இடம் பெற்றது. விஜயகாந்த படங்களும் அதில் அணிவகுக்க, விஜய் நடித்த துப்பாக்கி படமும் இடம்பெற்று இருந்தது.

* எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி ஆகிய நால்வரின் திரைச் சாதனைகள் பற்றிய படங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனித்தனியாக காட்டப்பட்டன. எம்ஜிஆர், ரஜினி பற்றிய படங்களுக்கு பலத்த ஆரவாரம் கிடைக்க, சிவாஜி பற்றிய படம் ஒளிபரப்பப்பட்டபோது நிறைய கண்கள் கலங்கின.

* கமல் பற்றிய படம் ஒளிபரப்பப்பட்டபோது அதில் தேவர் மகன் படமும் இடம்பெற்றது (தவிர்க்க முடியுமா என்ன?) அதில் “அப்புறம் என்ன.. அதான் சின்னையா சொல்லிட்டாகல்ல.. போய் டிக்கட்ட கேன்சல் பண்ணு.. கேன்சல் கேன்சல்..!” என்று சிவாஜி பேசும் காட்சி இடம் பெற, தனக்கு பின்னால் உட்கார்ந்திருந்த பிரபுவை முழு உடலையும் திருப்பி, பெருமையாகப் பார்த்தார் கமல். கமலின் தோளில் கைவைத்து, கை தட்டுவது போல தட்டி சந்தோஷப் பட்டார் பிரபு. கமல் பற்றிய அந்தப் படம் முடிந்ததும் நடிகர் சிவக்குமார் எழுந்து கமலிடம் வந்து, அவரது புறங்கையை பற்றி முத்தமிட்டு கண் கலங்கினார். ஒரு ரசிகனின் நிலையில் இருந்து கைதட்டிக் கொண்டே இருந்தார் ரஜினிகாந்த்.

* தியாகராஜ பாகவதர் இப்போது உயிரோடு வந்து இன்றைய சினிமா பற்றி அவர் பாணியில் விவரிப்பது போல, நடிகர் விவேக்கும் செல் முருகனும் நடத்திய காமெடி நிகழ்ச்சியை சிம்புவும் தனுஷும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசித்து சிரித்தனர். அதே பல நடிகர்கள், விஷால், ஆர்யா, கார்த்தி இவர்கள் பழைய பாடல்களுக்கு நடனமாட, ஜீவாவும் சந்தானமும் அவர்களை ஜாலியாக கிண்டலடித்து பேசிய நிகழ்ச்சியும் ரகளையாக இருந்தது.

* மேடையில் ஸ்டன்ட் கலைஞர்கள் சாகச நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியபின் அது பற்றிப் பேச வந்த விஜய் “ஆபத்தை எதிர்நோக்கி போறதால தீயை அணைக்க செல்பவர்களை தீயணைப்பு வீரர்கள் அப்படீன்னு சொல்றோம். அப்படீன்னா சினிமாவில் ஸ்டன்ட் காட்சியில் நடிப்பவர்களும் வீரர்கள்தான். என்னோட ஒரு படத்தோட ஷூட்டிங்ல எனக்கு டூப் ஆக ஒரு சண்டை வீரர் பைக்கில் பறக்கும் காட்சி எடுக்கப்பட்டபோது அவரது மனைவியும் மகளும் பதற்றத்தோடு காத்திருந்த காட்சியும், இன்னொரு படத்தின் சண்டைக் காட்சியின் போது ஒரு சண்டை வீரர், “இந்த ஷாட்டில் நடித்த பிறகு இன்னொரு முறை என் மகளைக் கொஞ்ச எனக்கு வாய்ப்பு இருக்குமா என்பது தெரியாது” என்று கூறியபடி தன மகளுக்கு முத்தம் கொடுத்த காட்சியும் என்னால் என்றுமே மறக்க முடியாது” என்றார். பாட்டுப் பாட சொன்னபோது மறுத்து விட்டு போனார் விஜய்.

* மேடையில் நடிகர் சூர்யாவை இயக்குனர் லிங்குசாமி பேட்டி கண்ட விதம் மிக சுவையாக இருந்தது. “உங்களுக்கு பிடித்த டாப் டென் படங்கள் பற்றி சொல்லுங்கள்” என்ற லிங்குசாமியின் கேள்விக்கு முதலில் பராசக்தி படம் பற்றி சொன்ன சூர்யா அடுத்து ஆயிரத்தில் ஒருவன், நாயகன், தனது தந்தை நடித்த மறுபக்கம், தம்பி கார்த்தியின் பருத்தி வீரன் ஆகிய படங்களின் பெயர்களை சொன்னார். அந்த வரிசையில் தான் நடித்த ஒரு படத்தின் பெயரையும் சொல்லவில்லை சூர்யா. ஒரு நிலையில் அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற “நீ அழகா இல்ல.. நான் உன்ன லவ் பண்ணல … ஆனா இதெல்லாம் நடந்துருமோனு பயமா இருக்கு…” என்ற வசனத்துக்கு லிங்குசாமியை நடிக்க சொன்னார் சூர்யா. “அப்படியானால் எனக்கு ரெண்டு கதாநாயகி இப்போது இங்கே வேண்டும்” என்று லிங்குசாமி சொல்ல “ஆளை விடுங்க… நான் அதுக்கு ஆள் இல்ல..’’ என்ற சூர்யா, கடைசியில் லிங்கு சாமியின் வேண்டுகோளை ஏற்று, ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ பாடலைப் பாடினார்.

* ரஜினியுடனான தனது அனுபவங்கள் பற்றிப் பேசிய பி.வாசு “சிக்மகளூர்ல ஒரு ஷூட்டிங்குக்கு போனப்ப, எங்க பட நிறுவனம் எனக்கும் ரஜினிக்கும் தங்கறதுக்கு ரூம் போடாம விட்டுட்டாங்க… கோபப்பட்ட நான் அந்த ஓட்டல் ஊழியரிடம் ‘நாங்க யாரு தெரியுமா ..?’என்று ஆரம்பிக்க, என்னை தடுத்த ரஜினி சார் ‘வாசு… நம்மள பத்தி நாமே சொல்லக் கூடாது. நம்மள பத்தி மத்தவங்கதான் சொல்லணும்’ என்றார். அதுல இருந்து நான் எங்கயுமே நானா என்னை வாசுன்னு சொல்லிக்கறதே இல்லை” என்றார். (வேற எப்படி இன்ட்ரடியூஸ் பண்ணிக்குவீங்க வாசு?)

* “எனக்கு இரண்டு முதன்மைக் குருநாதர்கள் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இன்னொருவர் பாலச்சந்தர்” என்று துவங்கிய கமல்ஹாசன், “நான் சிறுவயதில் சிவாஜியின் மடியில் தவழ்ந்தவன். எம்ஜிஆரின் தோளில் விளையாடியவன். பின்னாளில் பாலச்சந்தரின் இயக்கத்தால் உயர்ந்தவன் (விழாவை முதன்மை பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தார் பாலச்சந்தர் ) இவர்களிடம் எல்லாம் கற்றுக் கொண்ட நான், உருப்பட்டது அதிசயம் இல்லை உருப்படாமல் போனால்தான் நீங்கள் ஆச்சர்யப்படவேண்டும். நான் என்றால் நான் மட்டும் இல்லை. என் அன்பு நண்பர் ரஜினியும்தான். நூறாண்டு கண்ட இந்திய சினிமாவில் நானும் ஐம்பது ஆண்டுகாலம் இருப்பது பெருமைதான். எனது சினிமா பயணத்தில் நான் தள்ளாடிய போது என்னை தூக்கி நிறுத்திய இயக்குனர்களுக்கு நன்றி. அடுத்து வரும் தமிழ் தலைமுறைகள் இன்னும் சாதிக்கும். தமிழ் சினிமா உலகாளும்” என்றார்.

* தமிழ் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கமல் பேசி முடிக்க, அடுத்து பேச வந்த ரஜினி, இந்தி சினிமா கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச்சை ஆரம்பித்தார் தொடர்ந்து “சாதாரண ஆளான என்னை உயர்த்திய பாலச்சந்தர் சாருக்கும் என்னை உயர்த்திய அனைத்து சினிமா பிரமுகர்களுக்கும் நன்றி. நானும் 38 வருஷமா சினிமாவுல இருக்கேன். நடிப்பு தவிர எனக்கு வேற எந்த தொழிலும் தெரியல. சிலவற்றை முயற்சி பண்ணிப் பார்த்தும் முடியல. ஆனா, கமல் எல்லாத்தையும் சரியாய் செஞ்சு ஜெயிக்கிறவர். நடிகனா என்னை கொண்டு போய் டாப்புல உட்கார வச்சுட்டீங்க. இப்ப நான் தனி ஆளா நிக்கறேன். எப்பவுமே டாப்ல போனா தனி ஆளாத்தான் நிக்கணும்.

நான் முதன் முதல்ல பார்த்த படம் அவ்வையார். அப்ப எனக்கு பத்து வயசு. அந்தப் படத்தை அப்போ பார்த்தப்ப எனக்கு என்ன ஆச்சர்யம் ஏற்பட்டுச்சோ, இப்ப பார்த்தாலும் அதே ஆச்சர்யம் ஏற்படுது. ஒரு துறவியோட கதையை அவ்வளவு செலவு பண்ணி எடுக்க எஸ்.எஸ்.வாசன் சாருக்கு என்னா ஒரு தன்னம்பிக்கை இருந்திருக்கணும்? அதே மாதிரி அடிமைப்பெண், நாடோடி மன்னன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம் மாதிரி படங்களை இப்ப எடுக்க முடியலையேங்கற ஆதங்கம் இருக்கு.

ஆனா, அந்த மாபெரும் சாதனையாளர்கள் வரிசையில் என் கலை உலக அண்ணா கமல்ஹாசனும் இருக்கார். இது உண்மை. அவரோட சாதனை சாதாரணமானது இல்லை.

சினிமாவுல எப்பவுமே கஷ்டப்படுறது தயாரிப்பாளர்கள்தான். சினிமாவுல ஜெயிச்சு வாழ்க்கைல தோத்தவங்க இருக்காங்க. சினிமாவில் தோத்து வாழ்க்கையில ஜெயிச்சவங்க இருக்காங்க. சினிமாவுக்கு வர ஆசைப்படுறவங்க முதல்ல பொருளாதாரத்துல உங்களை சரி பண்ணிக்குங்க. பிறகு சினிமாவுல சாதிக்க உழையுங்க” என்றார் ரஜினி. சரிதானே…!

நன்றி – சு.செந்தில்குமரன், தின இதழ் நாளிதழ்

Read previous post:
ரஜினி முகம் மோசமாக இருக்குமாம்… விமர்சிக்கிற ‘சுமார் மூஞ்சு’ இவர்தான்!

கருப்பா பிறந்த எல்லாருமே காலரை துக்கிவிட்டுக் கொண்டது ரெண்டே சந்தர்ப்பங்களில்தான். ஒன்று காமராஜர் முதல்வராக வந்தபோது. மற்றொன்று ரஜினி அறிமுகமான பின். தமிழ்சினிமாவில் சிவாஜியின் தாக்கம் இல்லாமல்...

Close