இந்திய பெருங்கடலில் மலேசிய விமான பாகங்கள்: சீன செயற்கைக்கோள் புதிய படம்

எம்எச்-370 என்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8 ஆம் தேதியன்று கோலாலம்பூரிலிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்திற்குள் மாயமாய் மறைந்துபோனது. 25க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த விமானத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இரண்டு துண்டுகள் மிதப்பது போன்ற காட்சி செயற்கைக்கோளில் தெரிந்ததை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன்னால் அந்தப் பகுதிக்கு நான்கு விமானங்கள் அனுப்பப்பட்டன. ஆனால் இதன்மூலம் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதியன்று சீன நாட்டின் செயற்கைக்கோளில், தெற்கு இந்தியப் பெருங்கடலில் 22 மீட்டர் நீளமும், 13 மீட்டர் அகலமும் கொண்ட பொருள் ஒன்று மிதப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது உறுதி செய்யப்பட்டது. இது ஆஸ்திரேலியாவில் தெரிந்த கடல்பரப்பிலிருந்து 120 கி.மீ. தள்ளியிருப்பதால் இந்தத் துண்டு மறைந்த விமானத்தின் பகுதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தத் தகவலைத் தெரிவித்துள்ள சீனாவின் தேசிய பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகம் இந்த விபரங்கள் பற்றிய குறிப்பினை மலேசிய பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய போக்குவரத்து அமைச்சருமான ஹிஷாமுதின் ஹுசைனுக்கு அனுப்பியது.

அதன் பின்னர் ஆஸ்திரேலியாவின் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சீனக் கப்பல்கள் இன்று தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மலேசிய அமைச்சர் தெரிவித்துள்ளார். விமானம் காணமல்போய் இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சமீபத்திய முயற்சியில் ஏதேனும் விபரங்கள் வெளிவரலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

Read previous post:
1800 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து போர் வீரரின் கடிதம்

1800 ஆண்டுகளுக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எகிப்திய போர் வீரர் தனது குடும்பத்தாருக்கு எழுதிய உருக்கமான கடிதம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.1899-ம் ஆண்டு எகிப்து நாட்டின்...

Close