இந்த சதிக்கு ரஜினியும் துணை போனார்….

புத்தகமே வாசிக்க தெரியாத காலத்திலிருந்து, முகப்புத்தகத்தில் கைகலப்பு நடத்தி சட்டையை கிழித்துக் கொள்ளும் இந்த காலம் வரைக்கும் ரசிகர்களின் உலகம் சினிமாதான்! தமிழகத்தை பொருத்தவரை சினிமாவும் அரசியலும் பின்னி பிணைந்திருந்தாலும், சினிமாவிற்குள் காலகாலமாக ஒரு அரசியல் யுத்தம் நடக்கிறது. அது ஆணானப்பட்ட பாகவதர் காலத்திலிருந்தே துவங்கி, ‘அழகுராஜா’ கார்த்தி காலம் வரைக்கும் தொடர்வதுதான் ஒரு ஆக்ஷன் படத்தைவிடவும் விறுவிறுப்பான சமாச்சாரம்.

நாடகத்தில் கிட்டப்பாவின் மார்க்கெட்டை ஷேக் பண்ண ஒரு தியாகராஜ பாகவதர் வருகிறார். சினிமாவில் பாகவதரின் மார்க்கெட்டை ஷேக் பண்ண ஒரு சின்னப்பா வருகிறார். இவர்களை காலி பண்ண ஒரு சிவாஜியும் எம்.ஜி.ஆரும் வருகிறார்கள் என்று எப்போதும் ஒருவித ‘கரண்ட்’ பாய்ச்சலிலேயே இருந்திருக்கிறது நமது சினிமாவுலகமும் அதற்கு முந்தைய நாடக உலகமும். அதன் நீட்சியாக கமல், ரஜினி, அஜீத், விஜய் என்று பரபரப்பாகி இதோ- விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வரைக்கும் ஒரு மவுன யுத்தம் நடந்து கொண்டேயிருக்கிறது கோடம்பாக்கத்தில். (நடுவில் வந்த விஜயகாந்த், மோகன், கார்த்திக், ராமராஜன், விக்ரம் போன்றவர்கள் யாராலும் ரஜினி கமல் இடத்தை பிடிக்கவே முடியவில்லை. அஜீத் விஜய்யை தவிர. இந்த அஜீத் விஜய்யின் இடத்தை பிடிக்கதான் இப்போதிருக்கும் நடிகர்கள் பெரும் பிரயத்தனம் செய்கிறார்கள். சரி, அதுபற்றி பின்னால் பார்ப்போம்)

பாகவதரின் ஹரிதாஸ் படம் மூன்று தீபாவளிகளை கடந்து ஓடியதாக கூறுகிறது சினிமா வரலாறு. அவரை தங்கதட்டில் சாப்பிட வைக்கிற அளவுக்கு பாகவதர் காலத்தை பொற்காலமாக்கினார்கள் ரசிகர்கள். ஒருமுறை நேரு தமிழகத்திற்கு வந்திருந்தார். அவர் போகிற இடங்களில் எல்லாம் நேருவை வரவேற்க திரண்டிருந்தது கூட்டம். பாகவதர் வீட்டை கடக்கும்போது மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு குழுமியிருக்க, இங்கு மட்டும் ஏன் இத்தனை கூட்டம் என்றாராம் நேரு. அது உங்களை பார்க்க வந்த கூட்டமல்ல, பாகவதரை பார்க்க வந்த கூட்டம் என்றார்களாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். அப்படியென்றால் அவரை காங்கிரசில் சேர சொல்லுங்களேன் என்று நேரு கொக்கி போட, காமராஜரே பாகவதரிடம் சென்று காங்கிரசில் சேர அழைத்ததாக கூறுகிறார்கள்.

ரஜினி கமலுக்கு இருந்த அதே ஜாக்கிரதை உணர்வு அப்போதே இருந்திருக்கிறது பாகவதருக்கு. அந்த அழைப்பை அவர் நாசுக்காக மறுத்தும் இருக்கிறார். இவருக்கு போட்டியாக பிற்பாடு வந்த பி.யூ.சின்னப்பாவையும் காங்கிரஸ் விடவில்லை. கட்சியில சேருங்களேன் என்று அன்பு அழைப்பு விடுக்க, அந்த விஷயத்தில் பாகவதரையே பின்பற்றினாராம் அவரும். பாகவதருக்கும் கிட்டப்பாவுக்குமான போட்டியை இப்போது படித்தாலும் ஒரு துப்பறியும் நாவலை போல விறுவிறுப்பாக இருக்கிறது. பாகவதரின் பவளக்கொடி நாடகம் கொடி கட்டி பறந்த காலத்தில், அப்படியென்ன அந்த நாடகத்தில் இருக்கிறது என்று மாறுவேடத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு போய் ரசித்தாராம் கிட்டப்பா. பாகவதருக்கு முன்பு தமிழ்சினிமாவை ஆண்டு அனுபவித்தவர் அல்லவா?

கிட்டப்பாவின் மனைவிதான் கே.பி.சுந்தராம்பாள். பாகவதர் மீது கிட்டப்பா எந்தளவுக்கு கோபம் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு சம்பவமே சாட்சி. அதே பவளக்கொடி நாடகத்தை கணவருக்கு தெரியாமல் பார்த்து ரசித்தார் கே.பி.சுந்தராம்பாள். இதில் கோபமுற்ற கிட்டப்பா, மனைவி என்றும் பாராமல் அவரை சுடு சொற்களால் ஏச, வருத்தத்தோடு கிட்டப்பாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சுந்தராம்பாள். ‘என்னை நடத்தை கெட்டவள் என்று நீங்கள் ஏசியிருக்கிறார்கள். உங்களுக்கு நரகம்தான் மிஞ்சும்’ என்று அவர் கிட்டதட்ட சாபமே கொடுத்திருக்கிறார் அந்த கடிதத்தில். (ஆதாரம்- கே.பி.சுந்தராம்பாள் கடிதங்கள்) சிறுவயதிலேயே கிட்டப்பா இறந்தாலும், வாழ்நாள் முழுக்க வெள்ளை சேலை கட்டி இறந்து போனார் சுந்தராம்பாள். இத்தனைக்கும் இவர் கிட்டப்பாவின் தாலி கட்டாத மனைவி.

பாகவதரின் சிவப்பழகை ஒரு கருப்பழகு வந்து காலி பண்ணிய அதிசயமும் இங்கே நடந்தது. பாகவதர் சிவப்பு, நளினம் என்றால் அவரை காலி பண்ண வந்த பி.யூ.சின்னப்பா கருப்பு, முரடு! குட்டையாக இருந்தாலும், சற்றே தெனாவட்டானவரும் கூட! ‘இவன் ஆம்பிளைடா’ என்கிற பாடி லாங்குவேஜ் அவருக்கு. எந்நேரமும் பீடி வலிக்கும் பழக்கமும் இருந்ததாம். அஞ்சலிதேவி எழுதிய ‘எனது சினிமா காதலர்கள்’ புத்தகத்தில் இவரது பீடி நாற்றம் பற்றி வர்ணித்திருக்கிறார் அவர். அருகில் வந்தாலே அவர் மீது பீடி நாற்றம் அடிக்கும் என்று அஞ்சலிதேவியே குறிப்பிட்டிருந்தாலும், இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அளவில்லாதது.

பாகவதரின் ‘ஹரிதாஸ்’ மூன்று தீபாவளிகள் ஓடியது என்றால் இவரது உத்தமபுத்திரன் படமும் மூன்று தீபாவளிகளை பார்த்தது. அப்படத்தில் இவருக்கு டபுள் ரோல். இவரது படங்கள் வரிசையாக ஓட ஆரம்பித்தது. சொந்த ஊரான புதுக்கோட்டையில் இவர் சொத்துக்களாக வாங்கி குவித்தாராம். இனி புதுக்கோட்டையில் இவருக்கு நிலம் விற்கக் கூடாது என்று அரசே உத்தரவு போடுகிற அளவுக்கு வாங்கி குவித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதற்கப்புறம் எம்.ஜி.ஆர் வந்த காலம் வசன காலம்.

பார்ப்பதற்கு பாகவதர் போல அழகாக இருப்பதால் மட்டுமல்ல, தோற்றத்திலும் அவரைப்போலவே ஹேர் ஸ்டைல் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவரைப்போலவே ஜிப்பாவை அணிந்து கொண்டார். ஆச்சர்யம் என்னவென்றால், சின்னப்பாவை போலவே அடிப்படையில் சண்டைப்பயிற்சிகள் அத்தனையும் எம்.ஜி.ஆருக்கு அத்துப்படி. பாகவதரை மறந்த ரசிகர்கள், சின்னப்பாவை போலவே வீரமான எம்.ஜி.ஆரை ரசிக்க ஆரம்பித்தார்கள். அதுவரைக்கும் ‘ப்ராணா நாதா’ என்கிற வசனத்தை கேட்டு கேட்டு புளித்துப் போன ரசிகர்களை சுத்த தமிழ் வசனங்கள் பித்து பிடிக்க வைத்தது. இவர் நடித்த மலைக்கள்ளன் படத்திற்கு முதன் முறையாக ஜனாதிபதி விருது கிடைத்தது. அந்த படத்தை ஐந்து மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். மலைக்கள்ளன், மதுரை வீரன் என்று மன்னர் கால படங்களில் எம்.ஜி.ஆரின் அழகும், அவரது வாள்வீச்சும், திரண்ட தோள்களும், தித்திக்கும் சிரிப்பும் ரசிகர்களை கொள்ளை கொண்டது. அதுவரை அரச சபையை முன்னிறுத்தி வந்த படங்களில் இருந்து மாறுபட்டு வந்தது பராசக்தி. தமிழ்சினிமாவை புரட்டிப் போட்ட முதல் சமூகப்படம்.

ஒருமுறை சிவாஜி, இனி வாள் சண்டைக்கு வேலையிருக்காது. எம்ஜிஆர் என்ன செய்வாரோ என்று பேசியதாகவும் கூறுகிறார்கள் பழங்கால நிருபர்கள். எம்.ஜி.ஆர் சும்மாயிருப்பாரா? திருடாதே என்கிற முதல் சமூகப்படம் எம்.ஜி.ஆரையும் வாரி அணைத்துக் கொள்ள இருவரும் சமமாக டிராவல் செய்ய ஆரம்பித்தார்கள். இருவருமே தி.மு.கவில் இருந்தாலும், ஒருமுறை சிவாஜி திருப்பதிக்கு சென்று வந்த காரணத்தால் அவரை கட்சியை விட்டு நீக்குகிறது தி.மு.க. ‘திருப்பதி கணேசா… திரும்பி போ’ என்று போகிற இடங்களில் எல்லாம் தி.மு.க தொண்டர்கள் கோஷம் போட, காங்கிரசில் சேருகிறார் சிவாஜி. அதற்கப்புறம் இவர்களின் படங்களை கட்சி முத்திரையோடு பார்க்க தயாராகிறார்கள் ரசிகர்கள். எம்.ஜி.ஆரை தி.மு.க தொண்டர்களும், சிவாஜியை காங்சிரஸ் தொண்டர்களும் ஆராதனை செய்ய, அவர்கள் படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் இருவரது கட்சிக் கொடிகளும் பட்டொளி வீசி பறக்க ஆரம்பிக்கின்றன.

நடுவில் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் இருவரும் சேர்ந்தே ஒரு படத்தில் நடிக்கிறார்கள். அதுதான் கூண்டுக்கிளி. இப்பவும் இந்த படத்தை தியேட்டர்களில் பார்க்க முடியாது. காரணம், இந்த படத்தை எங்கும் திரையிட வேண்டாம் என்று சேர்ந்தே முடிவெடுத்தார்களாம் எம்.ஜி.ஆரும் சிவாஜியும். ஏன்? அதுதான் பயங்கரம். இந்த படம் மதுரையில் ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது. வெறிபிடித்த சிவாஜி ரசிகர் ஒருவரை எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவர் குத்தி கொலையே செய்துவிட்டார். அப்போது எடுத்த முடிவுதான் இது.

சிவாஜிக்கு பார்த்த பெண்ணை, அவர்தானென்று தெரியாமல் எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொள்வார். அவள் நினைவிலேயே சுற்றி திரியும் சிவாஜி பல காலம் கழித்து எம்ஜிஆர் வீட்டுக்கு வரும்போது அவளை பார்த்துவிடுவார். அவள் எம்ஜிஆரின் மனைவி என்றே தெரியாமல் கையை பிடித்து இழுக்க, அது போதாதா ரசிகர்களுக்கு? படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் அடிதடி. ஆனால் ஒன்று. எம்ஜிஆருக்கும் சிவாஜிக்குமான தனிப்பட்ட செல்வாக்கை உலகத்திற்கு அறிவித்த படம் கூண்டுக்கிளிதான்.

இருவரது ரசிகர்களும் வெட்டு குத்து என்று வெறிபிடித்து திரிந்தாலும், எம்ஜிஆரும் சிவாஜியும் உற்ற நண்பர்களாக இருந்தார்கள். அதற்கு ஆயிரம் உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். சிவாஜி நடித்த சாந்தி என்ற படத்தின் கருத்திற்கு ஆட்சேபணை தெரிவித்த தணிக்கை குழு, அப்படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் தரவில்லையாம். இது குறித்து அப்போதைய முதல்வர் காமராஜரிடமும், தணிக்கை குழுவிடமும் சாந்தியை வெளியிட உதவும்படி கேட்டுக் கொண்டது யார் என்று நினைக்கிறீர்கள்? சிவாஜிக்கு தொழில் போட்டியாளராக இருந்த எம்.ஜிஆர்தான். அப்படியிருந்தது அவர்களின் சினிமாவை தாண்டிய நட்பு. சிவாஜிக்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் மணிக்கணக்காக காத்திருந்த ரசிகர்களை காரில் போகும்போது கவனித்த எம்ஜிஆர், காரை விட்டிறங்கிப் போய் சிவாஜியிடம் சொல்லி அவர்களை சந்திக்க வைத்தாராம். அந்தளவுக்கு உரிமையோடு பழகினார்கள் இருவரும்.

இவர்களின் சினிமா சகாப்தம் மெல்ல மெல்ல சாயும் நேரத்தில் உள்ளே வந்தவர்கள்தான் கமலும் ரஜினியும். ஜெய்சங்கர் விஜயகுமார் போன்ற ஹீரோக்கள் கொடிகட்டி பறந்த காலங்களில் தனிப்பட்ட திறமையால் தமிழ்சினிமாவை பட்டா போட்டுக் கொண்டார்கள் இருவருமே. இத்தனைக்கும் எம்.ஜி.ஆர்- சிவாஜி போல அரசியல் பின்புலத்தை கொண்டிருக்கவில்லை இவர்கள்.

ரஜினியை போலவே ஒருத்தர் வந்துருக்கார். நடிப்பும் சூட்டிகை என்று பாராட்டப்பட்ட விஜயகாந்த், கடைசிவரைக்கும் போராடியது ரஜினியின் இடத்தை பிடிக்கதான். நடிக்கிற எல்லா படங்களும் ஹிட். கமல் மாதிரியே இருக்கார்ப்பா… என்று கொண்டாடப்பட்ட மைக் மோகன் பிடிக்க நினைத்தது கமலின் இடத்தை. ஆனால் காலம் ஒருவருக்கு செய்த நாற்காலியை இன்னொருவருக்கு கொடுப்பதில்லை. இதே காலத்தில் பீடுநடை போட்ட ராமராஜனையும், (வாழும் எம்ஜிஆர் என்று பாராட்டப்பட்ட ராமராஜன், ஒரு துண்டு சீட்டில் கையெழுத்து போட்டுக் கொடுத்தால் கூட போதும். அதை கொண்டு வரும் நபருக்கு பைனான்ஸ் தந்து படமெடுக்க உதவக்கூட முன் வந்தார்கள் பைனான்சியர்கள்.) கே.பாக்யராஜையும், டி.ராஜேந்தரையும் கூட அளவான ரேஷன் கார்டுக்குள் அடக்கி வைத்திருந்தது அது.

ஆனாலும் ரஜினியும் கமலும் எப்படி? கமல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது வில்லனாக உள்ளே நுழைந்தவர் ரஜினி. பதினாறு வயதினிலே படத்தில் நடிக்க கமலை தேடிப் போகிறார் பாரதிராஜா. அதில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று பாரதிராஜாவை தேடி வருகிறார் ரஜினி. ‘அப்பல்லாம் ரஜினி எங்க தங்குவாருன்னு கூட எனக்கு தெரியாது. எனக்கு மட்டும் ஒரு ரூம் கொடுத்திருந்தாங்க’ என்கிறார் கமல். ‘நானும் ரஜினியும் நினைத்தாலே இனிக்கும் ஷுட்டிங் நேரத்தில் ஒருவர் முதுகில் மற்றவர் சாய்ந்து கொண்டு உறங்குவோம்’ என்று கமல் சொல்கிற போது, இருவருக்குமான நட்பு எந்தளவுக்கு பரிசுத்தமானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவர்களையும் தொழில் போட்டி போட்டு தாக்கியதை எப்படி இல்லையென்று மறைக்க முடியும்?

நாம சேர்ந்து நடிச்சா ஒரு 100 ரூபாய் நோட்டை ரெண்டா கிழிச்சு கொடுப்பாங்க. அதே தனித்தனியா நடிச்சா, அந்த நோட்டு ரெண்டு பேருக்குமே முழுசா கிடைக்குமே என்று ரஜினிக்கு வியாபார வித்தை சொல்லிக் கொடுத்தார் கமல். காலத்தை தாண்டி சிந்திக்கிற கலைஞனாச்சே ? அவர் நினைத்ததுதான் நடந்தது. அதற்கப்புறம் இருவரும் தனித்தனியாக நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றன. கமலின் சகலகலா வல்லவன் படமும், ரஜினியின் பாயும் புலி படமும் ஒரே நாளில் திரைக்கு வந்தது. இத்தனைக்கும் இரண்டுமே ஏ.வி.எம் தயாரிப்பு. இரண்டுக்குமே எஸ்.பி.முத்துராமன் டைரக்டர். இரண்டுமே சூப்பர் ஹிட். இருவரும் நண்பர்களாக இருந்தாலும், ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள். அதை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டது வியாபாரிகள்தான்.

ஒரு படத்தில் ரஜினியை போலவே தோற்றம் கொண்ட நளினிகாந்த் என்பவரை கமல் நைய புடைப்பதை போல காட்சிகள் வைக்கப்பட்டன. இந்த சதிக்கு ரஜினியும் துணை போனார். இவர் படங்களிலும் கமல் சீண்டப்பட்டார். ஒரு கால கட்டத்தில் கமல் பாணியில் நடித்தால் என்ன ரஜினியை சீண்டி, அவரை எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் நடிக்க வைத்தார்கள். அந்த நேரத்தில்தான் தற்போது அமரர் ஆகிவிட்ட அனந்துவின் அட்வைஸ் கை கொடுத்தது ரஜினிக்கு. கமல் பாணியில் ரஜினி நடித்தாலோ, ரஜினி பாணியில் கமல் நடித்தாலோ வெகு விரைவில் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். இருவரும் தனித்தனி பாதையை தீர்மானித்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று அவர் அறிவுறுத்த ரஜினியின் பாணி அதற்கப்புறம் முற்றிலும் வேறானது.

எழுபது எண்பதுகளில் வெளிவந்த அமிதாப்பச்சன் படங்களின் ரீமேக்குகள் ரஜினிக்கு கைகொடுத்தன. நான் வாழ வைப்பேன், பணக்காரன், பில்லா என்று அத்தனையும் அமிதாப் டைப் படங்கள். இருவரும் மாறி மாறி ஹிட்டுகள் கொடுத்தாலும், அவர்கள் செய்த நல்ல காரியம் சம்பளத்தை ஒரேயடியாக ஏற்றாமல் விட்டதுதான். இவ்வளவுக்கும் கதை விஷயத்தில் ரஜினி உள்ளே வருவதேயில்லை. அண்ணாமலை ஹிட்டுக்கு பிறகுதான் அவர் கதைக்குள் நுழைத்து கருத்து சொல்ல ஆரம்பித்ததாக கூறுகிறார்கள். கமல் அப்படியல்ல. படத்தில் எறும்பு ஊர்ந்து போனாலும் அது கமலுக்கு முன்பே தெரிந்தாக வேண்டும். இது இருவருக்குமான வித்தியாசம் என்றாலும், கமலின் படங்களை ரஜினி உன்னிப்பாக கவனிப்பதும், ரஜினியின் படங்களை கமல் உன்னிப்பாக கவனிப்பதும் இன்றளவும் நடந்து வருகிறது.

ஒருமுறை ஒரு மிக்சிங் தியேட்டருக்கு வந்தாராம் கமல். அங்கு ரஜினி நடித்த வேறொரு படத்தின் புகைப்படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்ததாம். அதை நின்று கவனித்த கமல், ‘முன் பக்கம் இன் பண்ணியிருக்கார். பின் பக்கம் ஷர்ட்டை வெளியில் விட்டிருக்கார். இந்த படம் ஹிட்’ என்று கூறிவிட்டு சிரித்தபடியே நகர்ந்தாராம். கமல் போராடி அடைகிற வெற்றியை வெகு சுலபமாக ரஜினி பெற்றுவிடுவதாக உலகம் பேசி வருகிறதே, கமலும் அதை உணர்ந்தவர் போலிருக்கிறதல்லவா இந்த கமென்ட்?

ரஜினி கமல் காலத்தில் அவர்களுக்கு இருந்த சவால்களை விட பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது அஜீத்துக்கும் விஜய்க்கும். வேடிக்கை என்னவென்றால் பந்தயத்தில் இப்போதும் பலமான குதிரையாக இருக்கிறார்கள் ரஜினியும் கமலும். சைடில் ஓடி வரும் குட்டி குதிரைகளும் அவ்வப்போது குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் அதையும் சமாளிக்க வேண்டிய நிலைமை இவர்களுக்கு. விஜய்க்கு அவரது அப்பா எஸ்.ஏ.சி. என்கிற படகு எல்லா மழைக்காலங்களிலும் கை கொடுக்கிறது. ஆனால் அஜீத்திற்கு அப்படியல்ல. படகில்லாத நேரத்தில் நீச்சல். கை ஓயும் நேரத்தில் கர்ணம் என்று சுயமான ஓட்டம்தான். இவர்கள் இருவரின் கவனமுமே ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலி மீதுதான். அதற்கான வித்தையை அவரிடமே கேட்டுத் தெளிகிற அளவுக்கு இருக்கிறார்கள் இவர்கள்.

இமயத்தில் என் கொடி பறந்தால் உனக்கென்ன? என்று அஜீத் விஜய்யை நோக்கி சவால் விட்டதும், ஒரு படத்தில் அஜீத்தின் தொப்பையை விஜய் கிண்டலடித்ததும் இறந்த காலமாகிவிட்டது. காலம் தந்த பக்குவமா, அல்லது திடீர் போட்டியாளர்களின் சலசலப்பா, தெரியவில்லை. இருவரும் ஒன்றாகிவிட்டார்கள். நேரம் கிடைக்கும்போது குடும்பத்தோடு செலவிடுகிறார்கள். ஆனால் இவர்களின் ரசிகர்கள்தான் இப்போதும் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் சட்டையை கிழித்துக் கொள்கிறார்கள்.

ரஜினியின் இடத்திற்காக அஜீத்தும் விஜய்யும் போராடிக் கொண்டிருக்க, இவர்களின் இடத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கு பின் வந்த நடிகர்கள். சூர்யாவாகட்டும், விக்ரமாகட்டும், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என்று ஒரு கூட்டமே அஜீத் விஜய்யின் மார்க்கெட்டை தாண்டிவிடுகிற வேகத்தில் ஓட நினைத்தாலும், இந்த பந்தயத்திலிருந்து அஜீத்தும் விஜய்யும் விலகினாலொழிய அது நடக்காது போலிருக்கிறது. ஏனென்றால் ஹீரோ என்பது வேறு. ஸ்டார் என்பது வேறு.

ரஜினி, கமல், அஜீத், விஜய் இவர்கள் மட்டும்தான் ஸ்டார்கள்! துரத்துகிற மீதி அத்தனை பேரும் இந்த நேரம் வரைக்கும் ஹீரோக்கள் மட்டுமே!

-(அந்திமழை இதழுக்காக ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கட்டுரை)

7 Comments
 1. anthanar says

  ajith pugazh paadum porambokku andanan kenna payyan

 2. rrmercy says

  very nice article. sir could you please write something about how the star and star value are created. i feel Suriya and vikram are competitive enough to ajith and vijay why they are not able to get it? if possible please write it. thank you

  1. kumar says

   That’s only because of their die hard fans. suriya and vikram didn’t bless, like ajith and vijay.

 3. Manokar says

  Rajiniya paththi pesathada. Rajini oru 24 carrot gold.

 4. Kalinga says

  ONE SUN
  ONE MOON
  ONE SUPER STAR
  ATHU RAJINI MATTUM THAAN.

  THALAIVAR RAJINI VAZGA.

 5. அன்புச்செல்வன் says

  தலைவர் ரஜினி அவர்கள் அரசியலுக்கு நிச்சயம் வர வேண்டும். சீர்கெட்டு போயி இருக்கும் தமிழகத்தை தூய்மை படுத்த நல்ல எண்ணம், நேர்மை , ஆன்மிக பலம் இவை அனைத்தும் பொருந்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள். அவர் அரசியல் கட்சி துவக்கினால் அவர் தான் அடுத்த தமிழக முதல்வர். திராவிட கட்சியை, நம் தமிழகத்தை விட்டு ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். இனி தமிழ் தமிழன் என்று மக்களை ஏமாற்ற முடியாது.

 6. Mohammed Aneez says

  சூப்பர் ஸ்டார் என்றாலே ரஜினி ரஜினி என்றாலே சூப்பர் ஸ்டார் தான்.
  வேறு ஒரு பயலும் கிடையாது

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இருக்கறது போதாதா? சிம்புவுக்கு ‘சிக்னல்’ கொடுத்த நடிகை!

உங்களுக்கு பிடித்த நடிகை யாரென்று சிம்புவிடம் கேட்கும்போதெல்லாம், ‘சினேகா உல்லால்’ என்று பலமுறை பதிலளித்திருக்கிறார் அவர். அவ்வளவு அருமை பெருமைகளை கொண்ட அந்த சினேகா உல்லால் ஆந்திரா...

Close