இன்னமும் தீராத பார்வையற்ற பட்டதாரிகள் பிரச்சனை

பார்வையற்ற பட்டதாரிகள் பிரச்னையில் அமைச்சரின் பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என பார்வையற்ற பட்டதாரிகள் அறிவித்துள்ளனர். ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது பார்வையற்றோருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் பார்வையற்றோர் மதிப்பெண் 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் கடந்த ஒரு வாரமாக திடீர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையின் முக்கிய சாலை களில் மறியல் செய்கின்றனர். அவர்களை போலீ சார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தும் காட்சிகள் தினமும் நடக்கிறது.

பார்வையற்றோரின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லையா, அல்லது அவர்களை அலட்சியம் செய்கிறதா என்று புரியாத சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும் அவர்களின் போராட்டம் நிற்பதாக தெரியவில்லை. இதன் தொடர்ச்சியாக கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் எதிரில் பார்வையற்றோர் நேற்றும் திடீரென சாலையில் அமர் ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கும் போலீசார் வந்து அவர்களை குண்டுக் கட்டாக தூக்கிச்சென்றனர். இதுகுறித்து பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டாதாரிகள் சங்க இணை செயலாளர் சுந்தரேசன் கூறியதாவது:

எங்கள் போராட்டம் இப்போது தொடங்கியதல்ல. கடந்த 4 ஆண்டுகளாகவே நாங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரிவித்து வந்தோம். கடந்த 8 மாதங்களாக அமைச்சர், அரசு செயலாளரிடம் பேசினோம். கல்வித்துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்தோம். பயன் இல்லை. இதையடுத்து ஆகஸ்ட் 8ம் தேதி உண்ணாவிரதம் இருந்தோம். பிறகுதான் சாலைக்கு வந்துள்ளோம்.

அமைச்சர் வளர்மதி கடந்த வாரம் எங்களை சந்தித்து, ஒரு மாதத்தில் பிரச்னையை தீர்ப்பதாக கூறினார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நிரந்த தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும். எங்களின் கோரிக்கை தொடர்பாக இரண்டு முறை முதல்வரை சந்தித்தோம். அவர் அதை தீர்த்து வைத்தார். இப்போதும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். இவ்வாறு சுந்தரேசன் தெரிவித்தார்.

பார்வையற்ற பட்டதாரிகள் 9 பேர் 7வது நாளாக நேற்று கே.கே.நகர் மாற்றுத்திறனாளிகள் கமிஷன் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் உடல் நிலை மோசமானது போலீசார் அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பெற மறுத்து, தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சிலர் வாந்தி எடுத்தனர்.

தகவல் அறிந்த சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி தலைமையிலான அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்தனர். உங்களுடைய கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்றனர். ஆனால், முதல்வரை சந்திக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிட மாட்டோம் என்று கூறிய பார்வையற்ற பட்டதாரிகள், மருத்துவமனையிலேயே உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இந்தியாவில் மறதி நோய்

இந்தியாவில் மறதி நோயால் 6.40 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அல்சைமர் (மறதி நோய்) தினத்தை முன்னிட்டு, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது....

Close