இவன் வேற மாதிரி – விமர்சனம்

இயக்குனர்களில் ‘நான் வேற மாதிரி’ என்று இரண்டாவது முறையாக உணர்த்தியிருக்கிறார் சரவணன். ஆக்ஷன் படங்களை பார்க்க கிளம்பும்போதே, Action 500. Anacin வகையறாக்களோடு உள்ளே சென்று பழகிய பலருக்கு, இந்த ஆக்ஷன் ஒரு விறுவிறுப்பான ஸ்கேட்டிங் அனுபவம். அதில் சந்தேகமேயில்லை! திருவாளர் பொதுஜனம் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் பொம்மையாகவே இருக்கிறாரல்லவா? அப்படியொரு பொதுஜனங்களில் ஒருவரான விக்ரம் பிரபு மந்திரியின் தம்பி ஒருவனுக்கு கொடுக்கிற ஐந்து நாள் பனிஷ்மென்ட், நாட்டுக்கே ரெஃபிரஷ்மென்ட்டாக இருக்கும் என்று நினைத்தால், விழுகிறது இடி! அதற்கப்புறம் அவர் வைக்கும் ஒவ்வொரு அடியும் என்னாச்சு… என்னாச்சு… என்றே நகர்வதால் ரசிகர்களின் விரல்களில் பாதி நகங்கள் காலி. லாஸ்ட் மினிட் வரை எல்லாரையும் முன்சீட்டில் தள்ளி, ‘எப்படியிருக்கு படம்’ என்று காலரை உயர்த்துகிறார் சரவணன். ம்ஹும்… இந்த பதற்றம் தணிய ரெண்டு ராவு, மூணு பொழுது ஆவும் டைரக்டரே….!

சட்டக்கல்லுரி மாணவர்களை உசுப்பிவிட்டு அதில் குளிர்காயும் மினிஸ்டர், அவருக்கு சாதகமான கொலைகளை செய்யும் அவர் தம்பி. இவ்விரண்டு வெறியர்களையும் ஒரே ஸ்விட்ச் அமுக்கலில் காலி பண்ணிவிட நினைக்கிறார் ஹீரோ. அதற்காக மினிஸ்டர் தம்பியை கடத்திக் கொண்டுபோய் ஓரிடத்தில் அடைத்து வைக்கிறார். பதினைந்து நாள் பரோலில் தம்பியை அழைத்து வந்த மினிஸ்டர் அவனை திரும்ப நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியாக வேண்டிய நிலை. தம்பியை காணோம் என்று அவர் தவியாய் தவிக்க, எதிர்க்கட்சிகள் கொந்தளிக்க, பிரஷர்… பிரஷர்… கடைசியில் பதவியையே இழக்கிறார் மினிஸ்டர். ஐந்து நாள் பரபரப்புக்கு பிறகு மீண்டும் தம்பியை நடுரோட்டில் தள்ளிவிட்டுவிட்டு கிளம்பிவிடுகிறார் ஹீரோ. அதற்கப்புறம் அவர் தலையில் விழும் இடிதான் செகண்ட் ஹாஃப்.

ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் படத்தில் காதல் எதற்கு? அப்படியிருந்தாலும் அந்த காதலை களிமண்ணில் செய்து கொள்ளலாம் என்கிற பேத்தல்கள் எதுவும் இல்லாமல் அதிலும் ஒரு உயிர்ப்பை ஓட விட்டிருக்கிறார் சரவணன். அந்த காதல் எபிசோட், அற்புதமான கவிதை. சம்பளத்திற்கு பதிலாக மீன் குஞ்சுகளை எடுத்துக் கொண்டு கிளம்பும் விக்ரம் பிரபு, அதை பஸ்சில் பயணிக்கும் சுரபி கையில் ஒப்படைத்துவிட்டு ஏதோவொரு ஸ்டாப்பிங்கில் இறங்கிவிட, அதை வைத்துக் கொண்டு அவர் தவியாய் தவிக்கிற காட்சிகள் சுவாரஸ்யமான பல திருப்பங்களுக்கு வழி வகுக்கிறது. மீனுக்கு தீனி போட்டதில் துவங்கி, அது தொடர்பான ஆட்டோ கன்வேயன்ஸ் வரை அவர் பில்லாக போட்டுக் கொடுக்க, அதற்கு ஹீரோ பணம் தருவதில் கூட படத்தின் இரண்டாவது பகுதியில் முக்கியமான முடிச்சாகி விடுகிறதே… அங்கு நிற்கிறது டைரக்டரின் அறிவு.

விக்ரம் பிரபுவிடம் ஒரு நடுத்தர குடும்பத்து பையனின் எளிமையும், அடங்காத காதலைக் கூட ஒரு சூயிங்கத்தை போல கன்னத்து இடுக்கில் அடக்கிக் கொள்ளும் பக்குவமும் இருப்பதால் நிறைய ரசிக்க முடிகிறது. தன் காதலி சுரபியை அவர் இந்த சீனிலாவது பார்த்துவிடக் கூடாதா என்று ஏங்க வைக்கிறது அந்த பிற்பாதி தேடல். சண்டைக்காட்சிகளில் மின்னலை போல செயல்பட்டிருப்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். எந்த கும்கி வந்தாலும், இனி இந்த மதயானையை வீட்டிற்கு அனுப்ப முடியாது.

சுரபி..! பொல்லாத கண்களும் அதில் பொங்கி வழியும் காதலுமாக அசத்துகிறார். பொசுக்கென காதலில் விழுந்ததை கூட பொருத்தமாக எண்ண வைக்கிறது அவரது இன்னொசென்ட். உயிருக்கு போராடும் அந்த தருணத்தில் கூட, தன்னை கொத்தும் காக்கையிடம் ‘போயிட்டு நாளைக்கு வா…’ என்கிறாரே, அந்த காட்சியில் பொசுக்கென கண்களில் குளம் கட்ட வைக்கிறது அவரது நடிப்பு. குட்டீஸ்களையெல்லாம் அழைத்து வந்து காதலுக்கு பஞ்சாயத்து வைக்கும் காட்சிகளில் விக்ரம் பிரபுவை போலவே இதழோரத்தில் நமுட்டு சிரிப்பு சிரிக்கிறது தியேட்டரும். இனி கொஞ்ச நாளைக்கு அமுத‘சுரபி’யாய் வழிவார்கள் ரசிகர்கள்.

இவர்கள் இருவருக்குமான காட்சிகளை உருவாக்கிய டைரக்டருக்கு ஸ்பெஷல் ரசகுல்லா. ‘ஹை… என்னை மாதிரியே கையெழுத்து போடுறீங்களே’ என்று இவர் சொல்ல, ‘மாலினின்னு யாரு எழுதுனாலும் இப்படிதான் இருக்கும்’ என்கிற விக்ரம் பிரபுவின் பதிலில்தான் எவ்வளவு காதலும் நக்கலும். ஒருபுறம் மயிலிறகால் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள், இன்னொரு பக்கம் சாட்டையாலும் விளாசப்படுகிறது. ‘இவ்வளவு சம்பாதிக்கிறானுங்க. அப்புறம் எதுக்கு இந்த மாமா வேலை?’ என்று போகிற போக்கில் சேனல் ஒன்றை வம்புக்கு இழுக்கிற நேர்த்தியையும் பாராட்டியாக வேண்டும்.

ஒரு ஹீரோவுக்கு தரப்பட்ட அத்தனை முக்கியத்துவத்தையும் வில்லன் வம்சி கிருஷ்ணாவுக்கும் கொடுத்திருக்கிறார் சரவணன். அவனது பிற்பாதி புரட்டல்களுக்கு ‘லீட்’ தரும் விதத்தில் அமைந்திருக்கிறது அந்த ஜிம் காட்சி. அதற்கப்புறம் அவன் எவ்வளவு பேரை அடித்தாலும் ‘ஆமாம்ல…’ என்கிற சமாதானத்திற்கு வர முடிகிறது நம்மால்.

ஒரு படத்தில் உயிரோட்டமான பாத்திரங்கள் நடிப்பை பொழியும். பொழிந்துவிட்டு போகட்டும்… ஆனால் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களும், கொட்டி வைக்கப்பட்டிருக்கிற இரும்பு பைப்புகளும் கூட நடிக்கும் என்பதை இந்த படத்தில்தான் உணர முடிகிறது. அவ்வளவு ஏன்? உயரத்திலிருந்து உடைந்துவிழும் பானையும், கிழித்து தொங்கவிடப்படும் பொம்மையும் கூட!

சண்டைக்காட்சிகளில் பம்பரமாக சுற்றி அந்த பரபரப்பை நமக்குள் விதைத்த ஒளிப்பதிவாளர் ஷக்தி பிரமிக்க வைத்திருக்கிறார். ஆக்ஷனில் புதுப்புது டெக்னிக்குகளை காட்டுகிறார் ஃபைட் மாஸ்டர் ராஜசேகர். இசையமைப்பாளர் சி.சத்யாவின் எல்லா பாடல்களும் ஹிட் ரகம். அதற்கு நடனம் அமைத்தவர்களும் எழுதியவர்களும் கூட அழகு சேர்த்திருக்கிறார்கள்.

‘அதெல்லாம் ஷங்கராலதான் முடியும்…’ என்ற விமர்சனங்களுக்கு சவால் விட்டிருக்கிறார் சரவணன். பட்ஜெட்டும், கதையும் கைவசப்பட்டால் ‘இவர் வேற மாதிரி’யில்ல, ஷங்கர் மாதிரியும்தான் என்பதை வருங்காலம் நிரூபிக்கக் கூடும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
எங்களுக்குள்ள ஒரு சண்டையுமில்ல… பிரியாத சமுத்திரக்கனி- சசிகுமார்

சமுத்திரக்கனியும், சசிகுமாரும் கும்பகோணம் டிகிரி காபி மாதிரி அப்படியொரு காம்பினேஷன். யார் பால், யார் காபி பவுடர் என்பதெல்லாம் நமக்கு தேவையில்லாத ஒன்று. ஆனால் ருசியாக இருந்த...

Close