உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை -3 – முருகன் மந்திரம்

ஒருநாள் எங்கயோ போயிட்டு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி வந்துட்டிருந்தோம். கூட என் இல்லத்தரசி, மகள், மடியில மகன்… ஏதோ நெனைப்பில சைடுல உட்கார்ந்து முகத்துல காத்து பட்ட ஜோருல பாட ஆரம்பிச்சிட்டேன்.

“ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது…”

பட்னு பட படன்னு என் பையன்கிட்ட இருந்து ஒரு சவுண்ட்.

“அப்பா வேயாம்… அப்பா வேயாம்…”

சவுண்ட் மட்டும் இல்ல, கூடவே தொடையில விடாம தட்டிக்கிட்டே சொன்னான்.

ஆட்டோ டிரைவர் பின்னாடி திரும்பலேன்னாலும் அவர் சிரிச்சது சைடுல வந்து பைக் வாலிபனை திரும்பி பாக்க வச்சது.

இத்தனைக்கும் என் மகனுக்கு வயசு ரெண்டரை தான் ஆச்சு. நான் பாடுனது அவனுக்கே அவ்ளோ கொடுமையா இருந்துருக்குன்னா பாத்துக்கோங்க…

எனக்கு பழைய கதை ஒண்ணு கண்ணுக்குள்ள ஓடிச்சி…

ப்ளாஷ் பேக் ஸ்டார்ட்…

“யோவ் மாம்ஸ், போவமா?”

“அவன் எங்க இருக்கான்னு கேளுமய்யா… நம்ம மட்டும் போயி என்ன செய்யதுக்கு?”

என்னோட கேள்விக்கு மாமனோட பதில் இது. அவர் குறிப்பிட்ட அந்த அவன் முத்துக்குமார்.

இந்த மாமன், முத்துக்குமார்… நாங்க தான் ஊர்ல தட்டி போர்டு வைக்காத “இளையராசா பாசறை”.

குசும்பு பிடிச்ச கூட்டம். அதுல முத்துக்குமார் பண்ற அலம்பலும் சேட்டையும் நெசமாவே ரொம்ப வித்தியாச ரகம்.

சாம்பிளுக்கு ஒண்ணு ரெண்டு, முத்துக்குமார்ங்கிற அவன் பேரை முத்துன்னு சுருக்கித் தான் எல்லாரும் கூப்பிடுறது வழக்கம். ஆம்பளைங்க அப்டி கூப்பிட்டா அதைப்பத்தி ஒண்ணுமே கண்டுக்காதவன், பெண்கள் பக்கம் இருந்து அழைப்பு வந்தால்…பண்ணுவான் பாருங்க ஒரு அலப்பறை…

“ஓ முத்து… ஓஓ முத்து…”

யாரோ ஒரு பொண்ணு எதுக்கோ கூப்பிட்டான்னா, யோசிக்காம அடுத்த நிமிசம் “எங்க, எப்போ”ன்னு கேப்பான்.

கூப்பிட்ட பொண்ணு மலங்க மலங்க முழிச்சான்னா, நீதான “முத்து”ன்னு சொன்ன, அதான் எங்க வச்சி, எப்போம்னு கேட்டேன்பாம். அவ்ளோ அலப்பறை.

என்னை விட நாலைஞ்சு வயசு சின்னப்பையன் முத்துக்குமார், என்னை அண்ணன்னு தான் கூப்பிடுவான்.

எங்கயாச்சும் தெருவுல போயிட்டிருக்கிறப்போ பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்கும்.

“ஓ முருகன்…”

யார்டான்னு திரும்பி பாத்தா முத்துக்குமார் பல்லைக்காட்டிட்டே “அண்ணன்”ம்பான். பயபுள்ள கேப்புல கெடா வெட்டிட்டு சிரிக்கும்.

“ஓ முருகன்…. அண்ணன்.”

அதாவது, முருகன்னு சொல்லிவிட்டு, ஒரு சின்ன “பாஸ்” விட்டு அண்ணன்னு சொல்வான்.

நானெல்லாம் சென்னை வந்து பாடலாசிரியனா மாறி, ரெக்கார்டிங் தியேட்டர்ல பாட்டு பதிவாகிறப்போ தான், “பாஸ்” விடுறது பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்.

அவன் அப்பவே தெரிஞ்சி வச்சிருந்திருக்கான். அதுக்கு ஒரு காரணம் இருந்திச்சி. “ரமலா சவுண்ட்ஸ்”. இசக்கியப்பன் அண்ணன் முத்துக்குமாரின் அண்ணன். அவர் தான் ரமலா சவுண்ட்ஸ் ஓனர். ஓனர் என்னமோ அண்ணந்தான். தம்பி தான் தேர் ஓட்டுற கண்ணன்.

“பிரிச்சி மேயுறது” அவனுக்கு குலத்தொழில். கர்ணன், கவச குண்டலத்தோட பொறந்த மாதிரி, வயர், டெஸ்டரோட பொறந்தவன் மாதிரியே திரிவான். பாக்கெட் இல்லாத சட்டை போட்டுட்டு வந்தாலும் டெஸ்டர் இல்லாம வரமாட்டான்.

கலர் கலரா, வயர், ட்யூப், யூனிட் (மைக் செட் குழாய்ல மாட்டுற மண்டை), சீரியல் பல்புகள், விதவிதமா ஆம்ப்ளி பயர், வித விதமா டேப் ரிக்கார்டர்னு அவனை அப்டி பிரமிச்சி பாப்பேன் நான்.

பாஸ், ட்ரபிள், ஈக்குவலைசர்லாம் எனக்கு என்னன்னே புரியல. அவனுக்கு அப்பவே அத்துப்படி. டேப் ரெக்கார்டர்லாம் நம்ம பயன்படுத்துற மாதிரிலாம் கெடையாது. அவங்களுக்குன்னு அவங்களா “கஸ்டமைஸ்” டிசைன் பண்ணி செஞ்சிக்கிட்ட டேப் ரெக்கார்டர்.

“இந்த மான் உந்தன் சொந்த மானையும்”, “போவோமா ஊர்கோலத்தை”யும் தெருவுல ஸ்பீக்கர் வச்சி, அந்த சவுண்ட் பட்டன்களை எல்லாம் முன்னாடியும் பின்னாடியும் திருப்பிக்கிட்டே எங்களுக்காக ஸ்பெஷலா போடுவான். மெய் மறந்து ரசிப்போம். பாட்டு முடியிறதுக்கு முந்துன செகண்ட் வரை ஏதாச்சும் ஒரு பட்டனை திருக்கிக்கிட்டே இருப்பான்.

சில இசையமைப்பாளர்கள் போட்டிருக்கிற பாட்டு ரொம்ப நல்லாருக்கிற மாதிரி தோணும். ஆனா, கொஞ்சமா சவுண்ட் வச்சி கேட்டோம்னா, காக்கா வலிப்பு வந்த மாதிரி ஸ்பீக்கர் ஒதறும். ஆனா, ராசா பாட்டு மட்டும் எந்த ஸ்பீக்கர்லயும் இனிக்கும். “வருமானத்துக்கு ஏத்த தரமான சோப்” மாதிரி “எல்லா ஸ்பீக்கர்க்கும் ஏத்த தரமான இசை” ராசாவோடது மட்டுந்தான். “ஸ்பீக்கர்”ங்கிற பேரை ராசா பாட்டு கேக்கிறப்போல்லாம் “சிங்கர்”னு மாத்திரலாமான்னு தோணும்.

எங்க ஊர்ல இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துல தெற்கு வள்ளியூர், அங்க தான் அவனோட சவுண்ட் லைட் கோட்டை. ஒரு சின்ன கடை வாடகைக்கு எடுத்து சதா… அதோடயே குடித்தனம் நடத்திட்டிருப்பான்.

இப்ப எதுக்கு முத்துக்குமாருக்கு இவ்ளோ பெரிய இன்ட்ரோன்னு கேக்கிறீங்களா, ஏன்னா இந்த “எபிசோடு”க்கு அவன் தான் ஹீரோ.

அவனோட “ஒலி, ஒளி கோட்டை”யில தான், இன்னைக்கு எங்க “டேரா”ன்னு நேத்து ராத்திரி முடிவு பண்ணியிருந்தோம்.

ஒரு சைக்கிள்ல வந்தான் முத்துக்குமார், இதோ கௌம்பிட்டோம். நான் பாட்டு எழுதுன கதைக்கு முன்னாடி நான் பாடகரா(???) இருந்த கதை இது.

கடை திறந்தாச்சு. ஒண்ணுக்கு மேல ஒண்ணா ஆம்ப்ளிபயர் அடுக்கி வச்சிட்டு, மாமனுக்கு ஒரு மைக் குடுத்த முத்துக்குமார், என் கையில ஒரு மைக் தந்தான்.

மாமன் ஆறுமுகம் ரேஷன் கடையில வேலை செஞ்சாலும், சண்டேன்னா கச்சேரிக்கு வந்துருவார். என்னை விட குச்சியா, என்னை விட கருப்பா இருந்தாலும்… ஆறுமுகம் மாமன் தான், எங்க ஊரு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம்”. பின்னுவாருல்ல.

இன்னைக்கு நானும் அவரும் சேர்ந்து ஒரு பாட்டை பாடி ரெக்கார்ட் பண்ணப்போறோம். அந்தப்பாட்டுல ரெண்டு சிங்கர் பாடி இருந்தாங்க. ஒருத்தர் எஸ்.பி.பி. எஸ்.பி.பி.க்கு மாமன். இன்னொரு சிங்கருக்கு பதிலா நான் பாடுறது பிளான்.

மைக்க கையில பிடிச்ச உடனே ஒரு சைடா சரிஞ்சிக்கிட்டே வானத்தை பாத்து போஸ் கொடுக்கிறது, உலகமே ரசிக்கிற விசயமாச்சே. அதே ஸ்டைல்ல நான் ரெடி.

ரெக்கார்டிங்னா சும்மா குரல் மட்டும் ரெக்கார்டிங் கெடையாது. வித் மியூசிக். இருக்கிறது மூணே மூணே பேர் எப்டி மியூசிக். அதான் முத்துக்குமார். அவனுக்கு “அல்வா” முத்துக்குமார்னு ஒரு பட்டப்பேரு உண்டு. டேப் ரெக்கார்டருக்கும் கேசட்டுக்குமே அல்வா கொடுப்பான் அவன்.

“கரோக்கே கரோக்கே”ன்னு ஒண்ணு இருக்கு. அதாவது ஒரிஜினல் பாட்டுல ஏதோ டெக்னிக் பயன்படுத்தி பாடகர், பாடகிகளோட குரல் கட் பண்ணிட்டு இசை மட்டும் கேக்கிற மாதிரி பண்ணிருப்பாங்க. அந்த கேசட் போட்டுவிட்டுட்டு கூட நம்ம பாடவேண்டியது தான். இசைமொழில சொல்லணும்னா, டூப்ளிகேட் “மைனஸ் டிராக்”.

மாமனும் முத்துக்குமாரும் இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருந்தாங்க. ஆனா, அதெல்லாம் தேடிக் கண்டுபிடிக்கிறது அவ்ளோ கஷ்டம். அப்டியே கெடைச்சாலும் நானும் மாமனும் பாடுறதுக்காக செலக்ட் பண்ணி வச்சிருந்த பாட்டெல்லாம் பண்ணைபுரத்துக்கு காவடி எடுத்தாலும் கெடைக்க வாய்ப்பிருக்கிற மாதிரி தெரியல.

ஆனா, நம்ம “டெஸ்டர் ஹீரோ” இருக்கானே. அது போதாதா? டேப் ரிக்கார்டர்ல கேசட் போட்டான். ப்ளே பண்ணிவிட்டான். பாட்டு ஸ்பீக்கர்ல கேக்குது.

“வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள், விலகிடு விலகிடு விலகிடு எனைத் தேடி வருகிறாள்..”

டேப் ரெக்கார்டலயோ, கேசட்லயோ ஏதோ ஒண்ணை டெஸ்டர் வச்சி அட்ஜஸ்ட் பண்றான்.

இப்போ, பாடகர்கள் குரல் மெல்ல மெல்ல குறைஞ்சி, லேசா பேருக்கு குரல் கேட்குது. பட், இசை அப்டியே கேக்குது. டெஸ்டரை வச்சே கரோக்கே பண்ணிப்புட்டான்ல. சந்திராயன் கவுண்ட் டவுன் மாதிரி ரெக்கார்டிங் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்

“பாட்டு பாடவா” படத்துல இடம் பெற்ற ராகதேவன் பாட்டு இது. இந்தப் பாட்டு பத்திய வெவரம் தெரிஞ்சவங்களுக்கு லேசா கொலைவெறி எட்டிப்பார்த்தா… மன்னிச்சுருங்க அய்யாமார்களே… அம்மாமார்களே….

ஏன்னா, இந்தப்பாட்டை எஸ்.பி.பி. கூட பாடி இருக்கிறது நம்ம ராசாவே தான். மாமன் எஸ்.பி.பி.ன்னா, நான் தான் இளையராசா… (அடக் கொடுமையே)

ராசமுருகன், பால ஆறுமுகம்…. செமத்தியான போட்டி. எப்டியாவது மாமனை விட பிரமாதமா பாடியே தீரணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு பாடுறேன். என்னவும் நடந்துட்டு போகுதுன்னு கண்ணை மூடிக்கிட்டு பிரமாதமா பாடுறதா நம்பிக்கையில பல்லவிய பாடுறேன் நான்.

முத்துக்குமார் முகத்துலயும் மாமன் முகத்துலயும் அப்டி ஒரு ரியாக்சன்.

“ஐ.சி.யூ.க்கு வெளியே வெயிட் பண்ற பொண்டாட்டிக்கிட்ட அவ புருஷன் செத்துப்போனான்”கிறதை மறைச்சி “ஒண்ணும் ஆகாது ஒண்ணும் ஆகாது”ன்னு, சொல்லி சமாளிக்கிற கேரக்டர்ஸ் மாதிரி ஒரு ரியாக்சன்…

ஆனாலும் பல்லவியோட விட முடியாதுல்ல, ராசா மாதிரி பாடுறதுக்கு உலகத்துலயே என்னை விட்டா, வேற பொருத்தமான ஆளே இல்லேங்கிற அபார நம்பிக்கையில தான், நான் பாடுறதுக்கு ராசா குரலை தேர்வு செஞ்சேன். லேசா மூக்கை அடைச்சிக்கிட்டு பாடுனா… அப்டியே ராசா மாதிரியே இருக்குதுல்லனு நானே என்னை பாராட்டிக்குவேன்.

ரெண்டு பேரும் பல்லவி பாடியாச்சு.

முதல் சரணம்… ராசா தான் பாடணும். நான் பாடுனேன்.

பனிமலர் விழிவழி பாவை சொல்வாள் கேட்காத சேதிகள்..ஓ
தினசரி அவள் வர ஏங்கும் எந்தன் நாள் காட்டும் தேதிகள்..ஓ

என் மீதுதான் அன்பையே பொய்மாரியாய் தூவுவாள்
என் நெஞ்சையே பூவென தன் கூந்தலில் சூடுவாள்

நாள்தோறும் ஆராதனை செய்கின்ற தேவியே
என் மூச்சிலே வாழ்கிறாள் என் ஜீவன் மேவியே

நாளும் சிங்கார தேரை நான் கூட…

ரெண்டாவது சரணம் மாமன் பாட, வெற்றிகரமா பாட்டை ரெக்கார்ட் பண்ணி முடிச்சான், எங்க சவுண்ட் என்ஜீனியர் முத்துக்குமார்.

பாட்டைப்போட்டு கேட்டோம். ராசா குரல்லயே பாடியாச்சுன்னு அவ்ளோ பெரிய சந்தோசம். எனக்கு நல்லாருக்கிற மாதிரி தான் தோணிச்சி

சக பாடகர் ஆறுமுகம் மாமன், பெரிசா எதுவும் சொல்லலேன்னாலும்… சவுண்ட் என்ஜீனியர் முத்துக்குமார் சொன்னான்…

“அண்ணன் பாட்டை பாடணும், வாசிக்கக் கூடாது”ன்னான். அப்போ, என் முகம் போன போக்கை நீங்க பாத்துருக்கணுமே… (தண்ணியக் குடி, தண்ணியக் குடி)

“ஆனா, நீ நல்லா வாசிக்கிறண்ணே… சுத்தத் தமிழ் ஜொலிக்குது” தயவுசெய்து “தொகுப்பாளன்” “பேச்சாளன்” வேலையோட “மைக்”குக்கும் உனக்கும் உள்ள உறவை முடிச்சிக்கண்ணே’ன்னான்.

எனக்கு இப்பவும் “ஸ்ருதி, அக்சரா”வைத்தான் தெரியுது…. “சுருதி, சுதி” எல்லாம் சுத்தமா தெரியலேங்கிற உண்மை அப்ப எனக்கு தெரியல.

அதுக்கப்புறமும் “கரோக்கே” கச்சேரி நடந்தது. ஆனா நான் பார்வையாளன் கேரக்டர்ல மட்டுமே நடிச்சேன்.

ப்ளாஷ் பேக் ஓவர்…

என் மகனைப் பாத்தேன். “ஒனக்குக் கூடவாடா”ன்னு கேக்கணும்னு தோணிச்சி, ஆனா அவனுக்கு என் ஃபீலிங் புரியுமான்னு தெரியல. அதனால கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்.

அப்போ பாட்டு…. நான் பாடுறதா? அதை நிறுத்தி ரொம்ப நேரமாச்சு… இல்ல இல்ல ரொம்ப நாளாச்சு அய்யாக்களே… அம்மாக்களே!.

 (இசை வளரும்)

4 Comments
 1. Anantharaman says

  Murugan Anney…..Super!…I Went to my school/polytechnic days…we all friends did the same thing with my friend’s Recording Center in our native (Nagapattinam)…Great Days!!!….will never repeat.

  1. Murugan Manthiram says

   மிக்க நன்றி சகோதரா… இந்த தொடர் எழுதத் தொடங்கும் முன் நாடன நினைத்தது இதைத்தான். என் கதைகள்… நம் கதைகளாக மாற வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்திருப்பதில் ஆனந்தம். கண்டிப்பாக நீங்கள் சொன்னது போலவே அந்தக்காலம்… பொற்காலம்… நம் தலைமுறை கொடுத்து வைத்த தலைமுறை.

 2. prem says

  வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள், விலகிடு விலகிடு விலகிடு எனைத் தேடி வருகிறாள்..”

  முருகா… யாருப்பா அந்த தேவி … சொல்லவே இல்ல..

 3. சேக்காளி says

  //நான் பார்வையாளன் கேரக்டர்ல மட்டுமே நடிச்சேன்//
  என்னது நடிச்சியா?.அப்ப பாத்தது யாரு?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உதயநிதிக்கு மட்டும் ஸ்பெஷல் காட்சி

கமலின் விஸ்வரூபம் பார்ட் 2 எப்போது வரப்போகிறது என்பதை முடிவு செய்துவிட்டாரா கமல்? அந்த தேதி வரும்போது பரபரப்பும் நிச்சயம் என்கிறது கோடம்பாக்கம். இப்பவே முஸ்லீம் அமைப்புகள்...

Close