உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை – 4 – முருகன் மந்திரம்

“அவள்” என்று அவளை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. “அக்கா” என்று சொல்வது பின் வரப்போகும் கதைக்கு பொருத்தமாக இல்லாமல் போகலாம். ஆகையால், “அவர்கள்” என்று சொல்லிக்கொள்கிறேன். அதில் ஒரு நெருக்கம் இல்லை. சரி இப்போதைக்கு “அவர்கள்” என்றே இருக்கட்டும்.

பின் நாட்களில் ராசாவின் அந்த ஒரே ஒரு ராகத்தை மட்டும் கேட்கும் போதெல்லாம், “அவர்கள்” நினைவில் வந்து செல்லப்போகிறார்கள் என்பது அப்போது எனக்கு தெரியாத விஷயம். தேவைப்படாத விஷயமும் கூட.
பொதுவாக உணவகங்களில் சைவம்/அசைவம் என்று இரண்டையும் ஒரு சேர எழுதி வைத்து, உள்ளே அழைக்கும் உணவகங்களை எனக்கு பிடிப்பதில்லை. இரண்டும் இருந்தால் இரண்டுமே நன்றாக இருக்காது, அல்லது ஏதாவது ஒன்று. அசைவ உணவகத்தில் கண்டிப்பாக சைவம் சுகப்படாது என்பது என் எண்ணம், அனுபவமும் கூட.

ஆனால் ராசா, சைவம் என்றாலும் அசைவம் என்றாலும் அசத்தி விடுகிறார். ஒரே படத்தில் சைவப்படையலும், அசைவப் படையலும் அடுத்தடுத்து வைத்து அமர்க்களப்படுத்தி விடுகிறார்.

மீசை முளைக்காத வயதிலேயே இந்த ராசா பாட்டு மீது ஆசை உண்டாகி அது பேராசையானது. “தென்றல் வந்து தீண்டும்போது என்ன இன்பமோ மனசுல…”, இதில் தென்றலை மட்டும் எடுத்துவிட்டு “ராசா மெட்டு வந்து தீண்டும்போது என்ன இன்பமோ மனசுல” என்று மாற்றிக்கொண்டால் அது இன்னும் இதமாகி விடுகிறது.

நம்மை ஒரு பொம்மையாக்கி, தானாகவே தலையாட்டிக் கொள்கிற… அல்லது தன்னையும் மீறி தலையாட்ட வைக்கிற ஒரு அதிசய மந்திரத்தை, ஒரு மாய வித்தையை இளையராஜா, தனது எல்லா பாட்டுகளுக்குள்ளும் வைத்திருக்கிறார்.
யாராலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றை, தன் ராகங்களால், தன் தாளங்களால், நியாயப்படுத்தி விடுகிறார் ராசா. தவறுதல்களையும் மீறல்களைவும் கூட தன் இசையால் ரசிக்க வைக்கிற, உணர்வு நிலையில் ஏற்றுக்கொள்ள வைக்கிற, தந்திரக்காரராக இருக்கிறார் ராகதேவன்.

“அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே” என்று தாலாட்டும் தாயன்பிற்கு தலைவணங்கும் ராசாவின் இசை, “இப்ப சாத்து நடை சாத்து” என்று ஆனந்தக் கும்மாளம் போட்டு தாறுமாறாய் கோலம் கலைந்து காமத்தை மண்டியிட வைக்கிறது. அல்லது காமத்தின் காலடியில் நம்மை மண்டியிட வைக்கிறது.

“நிக்கட்டுமா போகட்டுமா” என்று காதலுக்கு கொடி பிடித்து கூட்டம் சேர்த்து ஆர்ப்பாட்டமாக பேரணி நடத்திய ராசாவின் காதல் ராகங்கள் ஒரு பக்கம். எந்த ஆரவாரமும் இல்லாமல் காமப்பொழுதுகளுக்காக அஹிம்சை யுத்தம் செய்த “அந்தரங்க ராகங்கள்” இன்னொரு பக்கம்.

“நிலா காயுது நேரம் நல்ல நேரம்” என உசுப்பேத்தி விட்டு உச் கொட்ட வைப்பார். “ஏதுடா வம்பா போச்சி, ரவிக்கையும் கிடையாது” என்று உயிருக்குள் செல்லமாய் தீ மூட்டுவார்.

மின்னல் நெய்த சேலை
மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல்
மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சூடும்
ஆடை என்றும் நீ ஆகும்,
அங்கம் யாவும் நீ மூட
ஆசை தந்த நோய் போகும்

என்று “அ”னா “ஆ”வன்னா தெரியாதவனின் கண்ணுக்குள்ளும் காமத்துப்பாலின் காட்சிகளை அடுக்குவார்.
தவறுதல்களையும், மீறல்களையும்… தன் இசையால் ரசிக்க வைத்து விடுகிற, சரிதானோ என்று வக்காலத்து வாங்க வைத்துவிடுகிற வக்கீலாகி விடுகிறார் ராசா.

இந்தக்கதைக்கு எனக்கு நானே வக்காலத்து வாங்கிக்கொள்கிறேன். அதற்கு அந்த இளையராசா சாட்சி என்று வசதியாக வம்பிழுக்கிறேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறைக்காலம் என்று நினைக்கிறேன். வள்ளியூர் பேருந்து நிலையத்தில் களக்காடு செல்லும் 1ம் நம்பர் பேருந்தில் அமர்ந்திருந்தேன்.

என் பெரியக்கா வீடு களக்காடு மூங்கிலடியில் இருந்தது. மூங்கிலடி மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பச்சைக் கிராமம். முண்டந்துறை வனச்சரணாலயம் அங்கிருந்து சில கிலோமீட்டர்கள் மட்டுமே. “பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்” என்று ராசா பாட்டை பாடிக்கொண்டே, மூங்கிலடியின் ஆற்றங்கரை சாலையில் நடந்து செல்வது பேரானந்தம். பெயருக்குத்தான் அது ஆற்றங்கரைச் சாலை. ஆனால், உண்மையில் அது சோலை, பழமுதிர்ச்சோலை. இரண்டு பக்கமும் மாமரங்களும் பனை மரங்களும் நாவல் மரங்களும் இன்னும் எனக்குப் பெயர் அறிமுகமில்லாத பல காட்டு மரங்களும் பிரமாண்டமாய் வரிசை கட்டி நிற்கும் சாலைச்சோலை. எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அக்கா வீட்டுக்கு ஓடி விடுவேன். எனக்கு அது கோடை வாசஸ்தலம் மட்டுமல்ல. என் கண்களின் பசியாற்றிய இயற்கை தாயும் கூட.

விடுமுறை நாள் என்பதாலோ என்னவோ, கூட்டம் அவ்வளவாய் இல்லை. அந்தப்பக்கம் ரெண்டு, இந்தப்பக்கம் ரெண்டு என்று வரிசையாய் இருக்கைகள் கொண்ட டவுண் பஸ் அது.

எப்போதும் ஜன்னல் தாகத்தோடு அலையும் எனக்கு அன்று ஜன்னல் பாக்கியம் கிட்டவில்லை. அடுத்த இருக்கையே கிடைத்தது. ஜன்னலோம் ஒரு பெரிய மீசைக்காரர் கிட்டத்தட்ட பஸ் புறப்பட்டதும் மயங்கும்(உறங்கும்) மனநிலையில் இருந்தார். அடுத்த நாள் மாற்றுவதற்கு என்று ஒரு டவுசரும் சட்டையும் ஏதோ ஒரு சின்ன துணிக்கடை பையில் வைத்திருந்தேன்.

பேருந்து தன் பயணத்தை தொடங்கியது. என் கண்களுக்குள் நகர்ந்தது மூங்கிலடியின் இயற்கை எழில். அக்கா, வீட்டுக்கு போன உடனே ஆத்துக்கு கிளம்பிவிடுவது என் வழக்கம். மலைத்தாயின் மடியில் இருந்து புறப்பட்டு வரும் அந்த மருத்துவ நீரில் ஒரு ஆனந்தக்குளியல் போடுவது தான் என் தலையாய பணி, ஆசை.

பத்து நிமிடங்கள் கடந்திருக்கலாம், அடுத்து வந்த ஏதோ ஒரு நிறுத்தத்தில் சிலர் பேருந்து விட்டு பிரிந்தார்கள், சிலர் பேருந்துக்குள் இணைந்தார்கள்.

பேருந்துக்குள் இணைந்தவர்களில் மார்போடு மகனை அணைத்தபடி ஏறிய, “அவர்கள்” இருந்தார்கள், இருக்கை தேடியது அவர்களின் கண்கள். அப்போது தான் சுற்றிப்பார்த்தேன், இருக்கைகள் எதுவும் மிச்சமில்லை. அவர்களைத் தவிர இன்னும் நான்கைந்து பேர் நின்றபடி பயணிக்க தயாரானார்கள்.

நான் அவர்களின் அணைப்பில் இருந்த மகனைப் பார்த்து புன்னகைத்தேன். பதிலுக்கு அவனும் புன்னகைத்தான். 5 அல்லது 6 வயதிருக்கலாம். இரு கை நீட்டினேன், ஏதோ பலமாக யோசித்தான். அதற்குள் அவர்கள் அவனை என் கைகளில் நிறைத்தார்கள், நான் அப்படியே வாங்கி மடியில் பரப்பினேன். வசதியாக உட்கார்ந்து கொண்டதும், ஜன்னல் வழி பின்னோடிய மரங்களும் அவனுக்கு பிடித்துப்போக… அடம் பிடிக்காமல் என்னிடம் அமர்ந்துகொண்டான். அவர்கள் எதிர்த்திசை பெண் வரிசையில் உள்ள இருக்கை ஓரமாக ஒட்டி நின்றார்கள்.

நிறைய இல்லை என்றாலும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு பட்டம் படித்திருப்பார்கள் போலும். டீச்சராகக் கூட இருக்கலாம். லேசான மஞ்சள் பூச்சு. நேர்த்தியான புடவைக்கட்டு. கண்களை உறுத்தாத அலங்காரம். சாந்தமான நீல வண்ணப் பூக்கள் சிதறிய புடவை டிசைன். சின்னதாய் நெற்றிபொட்டு. பின்னப்படாமல் காற்றில் பறந்த கூந்தல். பின் தலையில் ஒரே ஒரு முடிச்சு மட்டுமே கூந்தலுக்கு பிடிப்பாய்.

வெளிக்காட்சிகள் அவனை குதூகலப்படுத்தியது என்றாலும், அடிக்கடி அம்மாவைத் தேடியது கண்கள். அவன் அம்மாவைத் தேடி திரும்பும்போதெல்லாம் அவர்களும் திரும்பினார்கள். ஒரு மெல்லிய புன்னகையோடு மகனின் கண்களோடு பேசியது அவர்களின் கண்கள். அந்தக் கண்களும் புன்னகையும் மகனை சாந்தப்படுத்தி விட்டு, அதற்கு சாட்சி நான் என்பதுபோல், என்னோடும் பேசியது, நொடிக்கும் குறைவான பொழுதில் நிகழ்ந்தது அந்தக் கண்களின் சந்திப்பு. எனக்குள் பேசிக்கொண்டேன். “ப்ச், என்னா அழகா இருக்காங்க”.

ஒரு மணிநேரம் கூட நீடிக்க முடியாத, பின்னால் நீட்டிக்க முடியாத பயண உறவென்றாலும்… உறவென்று எப்படி சொல்ல முடியும்… அறிமுகம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அழகான அவர்களின் அறிமுகம் எனக்குள் ஒரு ஆனந்த “ஹாய்” சொன்னது.

பேருந்துகளில் இப்படி குழந்தைகளை வாங்கி வைத்துக்கொள்வது இயல்பே என்றாலும், அப்படி வாங்கி வைத்துக்கொள்ளும் போதெல்லாம் அன்னை தெரசா போல ஏதோ சாதித்து விட்டதாய் ஒரு நினைப்பு ஓடும் மனதிற்குள்.
அவன் அடிக்கடி அம்மாவைத் தேடி திரும்பினான், அவன், திரும்பும்போதெல்லாம், அவனைத் தழுவிய புன்னகையின் ஒரு துண்டுத்தழுவல் எனக்கும் கிடைத்தது. அவன் கண்களோடு பேருரையாற்றிய அவர்களது கண்கள், என் கண்களோடு நன்றியுரை பகிர்ந்துகொண்டது. சில பேருரைகள், சில நன்றியுரைகள் என்ற கணக்கில் பயணம் பாதி தூரத்தை முடித்திருந்தது.

அடிக்கடி திரும்பிய மகனின் திசை மாற்றம், தாங்கமுடியாத அவர்கள் என் அருகே வந்தார்கள்… தவறு, மகன் அருகே வந்தார்கள். என் இருக்கை ஓரமாயிருந்த கம்பியைப்பிடித்த படி நிற்க இடம் தேடினார்கள். இப்போது நேராக உச்சி நோக்கி திரும்பினால் அருகில் கிடைத்தது அம்மாவின் புன்னகை. கூடவே லேசாக தலைமுடி கோதி, “அங்க பாருங்க தென்னமரம்…. அதோ ஆட்டுக்குட்டி, ஏ…. கோழி கோழி… “ மகனுக்கான பாச வர்ணனைகள் செல்லமாய் நீண்டது.
இடைச்செருகல்ககளாய்… என்ன பெயர், எந்த ஊர், எங்கே போகீறீர்கள் என்று நான் மடியில் இருந்தவனிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார்கள் அவர்கள்,

எனக்கு மிக அருகில், நெருக்கமாய் அவர்கள் நின்றிருந்தார்கள் என்பது அவர்களின் பதிலுக்கு “ம்” சொல்ல திரும்பியபோது எனக்கு புரிந்தது. இன்னதென்று சொல்லமுடியாத ஏதோ ஒன்று சட்டென்று எனக்குள் முளைத்தது. பூத்துக்குலுங்கியது.
சலவைப்புடவையின் வாசம், புடவையின் சலவை வாசம்… நிற்க வசதியாய், சௌகர்யமாய் என் இருக்கையின் பின்னால் கை வைத்துக்கொண்டார்கள்.

எனக்கு இடது புறம் தவிர நான் எந்தத்திசையில் திரும்பினாலும் அவர்களை உரசி விடும் அபாயம். மகனோடு ஏதோ பேசியபடி வந்தவர்களுக்கு, சம்பிரதமாய் ஏதோ பதில் மேல் நோக்கி நிமிர்ந்தேன். அவர்கள் ஒரு சாய்வாக நின்றிருப்பார்கள் போலும். கீழ்நோக்கி மகனோடு பேசிக்கொண்டிருந்த அவர்களின் முகமும்… மேல்நோக்கி திரும்பிய என் முகமும்… சொற்ப தொலைவில். பதிலேதும் சொல்லாமல் சட்டென்று குனிந்தேன்.

கிட்டத்தட்ட தாய்க்கோழியின் ரெக்கைகளுக்குள் குஞ்சுகள் இருப்பதைப்போல, என்னை நான் உணர்ந்தேன். இந்திய தீபகற்பத்தை சுற்றி மூன்று பக்கங்களும் கடல் சூழ்ந்திருப்பதைப்போல் என்னைச்சுற்றி அவர்கள்…
அந்த நெருக்கம், எனக்குள் பரபரப்பையும் பதைபதைப்பையும் ஒரு சேர அள்ளிக்கொட்டியது. அவர்கள் மிக இயல்பாய் மகனோடு பேசியபடி பயணித்தார்கள். இயல்பாய் நடிக்கவும், “ம்” கொட்டவும், அசையாமல் இருக்கவும் பெரும் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தேன் நான்.

சட்டென்று மகனை என்னிடம் இருந்து வாங்கிக்கொண்டார்கள். “அண்ணனுக்கு பை” சொல்லுங்க, என்றார்கள். “ஸ்டாப் வந்திருச்சி, தேங்க்ஸ்”, கடைசியாய் கண்கள் பேசியபோது உதடுகளும் பேசியது. புன்னகையின் அளவு சற்றே பெரிதாய் நன்றியுரை சொன்னது.

தீபகற்பம், கலைந்தது. தாய்க்கோழியின் அரவணைப்பு நகர்ந்தது. முன் அறிவிப்பில்லாத விடுதலை, எதிர்பார்க்காத நிமிடத்தில் வழங்கப்பட்ட சுதந்திரம்…

இப்போது யார் கேட்டது இந்த விடுதலையை, யாருக்குத் தேவை இந்த சுதந்திரம்… எனக்குள் போர் வெடித்தது. என் கொண்டுவந்தேன், என்ன இழந்தேன் என்று தெரியவில்லை. ஆனாலும் இழந்ததாய் உணர்ந்தேன்.
நின்ற பேருந்தின் முன் வாசல் வழியாக இறங்கிய அவர்களை பார்த்துக்கொண்டே நகர்ந்த பேருந்தில் நகராமல் இருந்தேன்.
விபரம் தெரிந்த பின், ராசாவின் ரகசிய ராகமான “என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்”, கேட்கிற பொழுதுகளிலும் பார்க்கிற பொழுதுகளிலும் அந்த பேருந்தும் அவர்களும் இமைகளின் திரையரங்கில் ஒரு காட்சி நடத்துவார்கள்.

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது

நான் என்னை உன்னில் இழந்துகொண்டிருக்கிறேன், எந்த நொடியிலும் எனது, உனதாகலாம் என்ற நிலையை ஒரு மெட்டில், அதன் இசையில், அதன் வரிகளில் சொல்லிவிட முடியுமா?.. ராசா சொன்னது மட்டுமில்லாமல் புரியவே வைத்திருப்பார். கதையோடு பயணித்தால் தவறாகிப்போகும் ஒன்றை கதாபாத்திரத்தின் பின்னால் பயணிக்க வைத்து, நம்மை சோதித்து பார்க்கிறது ராசாவின் பாட்டு. அந்த கதாபாத்திர உணர்வின் நிலையை அப்படியே… அப்படியே வெளிக்கொணர்ந்து… நம்மில் இடம் மாற்றும்… அதிசயத்தை மிகச்சாதாரணமாய் செய்கிறது ராசாவின் ராகம்.
“என் உள்ளில் எங்கோ எங்கும் கீதம்” பாட்டுக்கும் அந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் ஏதும் இருக்கிறதா என்பது இப்போது வரை எனக்குப் புரியாத புதிர் தான்.

காலத்தின் நீட்சியில் நினைவுச்சுவரின் வரையப்பட்டிருந்த அவர்களின் முகம் மங்கலாகி சுவருக்குள் ஒளிந்துகொண்டது என்றாலும், ராஜா தன் ராகத்தால் கடந்த காலங்களின் ஜன்னல்களை திறந்து வைக்கிறார் அவ்வப்போது.

3 Comments
 1. S.Sudhakar says

  மிக மிக அருமையான பதிவு. ஒட்டு மொத்த தமிழர்களின், இந்த இரண்டு நூற்றாண்டுகளின் சர்வாதிகாரி ராஜாதான். இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவரின் ஆட்சி நிலைத்திருக்கும்

  நன்றி

  S.சுதாகர்

  1. Murugan Manthiram says

   மிக்க நன்றி சுதாகர் சார். நீங்கள் சொன்னது மாதிரியே ராசா ஒரு இசை சர்வாதிகாரி தான்.

 2. nakkeeran says

  மிக மிக அருமையான இசைக் க[தை]விதை உயிர், மெய் இசை எனவே இது தமிழ் ராஜா இசை மட்டுமல்ல ராஜாதி ராஜ இசை. நட்புடன் நக்கீரன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சீரியலை மிஞ்சும் பழிவாங்கல்? அடடா… இது ஆர்யாடா!

வரவர கல்யாண பத்திரிகையை புரட்டினால் கூட அதிலும் ஆர்யா-நயன்தாரா காதல் செய்தி இடம் பெற்றிருக்குமோ என்று அதிர்கிற அளவுக்கு மலர்ச்சியான நயன்தாராவை அலர்ஜியாக்கிக் கொண்டிருக்கிறது மீடியா. நேற்று...

Close