உயிர் இசை… மெய் இசை… உயிர் மெய் இசை… – முருகன் மந்திரம் – 02 “குடகுமலைக் காற்றில் வரும்,,,”

“பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டாத”ன்னு ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீங்க. அன்றைய நம்பியார், வீரப்பால ஆரம்பிச்சு, இன்றைய பிரகாஷ்ராஜ் வரை இந்த பழமொழி வில்லன்களுக்கு அவ்ளோ பொருத்தமா இருக்கும்.

ஒரு வகையில ராகதேவன் இளையராசாவுக்கும் இந்த பழமொழி பொருந்தும்னா, உங்களால நம்ப முடியுமா? ஆனா, காதலிக்கிற பாக்கியம் கெடைச்ச புண்ணியவான்களையும் புண்ணியவதிகளையும் கேட்டா, மைக்ரோ சிப் அளவு கூட சந்தேகப்படாம மண்டையில அடிச்சி மடேர்னு சத்தியம் பண்ணுவாங்க… ஆமான்னு. இசைஞானிக்குள்ள ஒரு அந்நியனா?

ஆமா, அவருக்கே தெரியாத அந்நியன். தரிசு நிலம் மாதிரி கெடக்குற பிஞ்சு நெஞ்சுக்குள்ள, ராசாவோட பாட்டு வந்து பாய்ஞ்சதுன்னா… “காதல் தண்டபாணி”களின் கரட்டு முரட்டு மூளைக்குள்ளயே காதல் நுழைஞ்சி கண்ணாமூச்சி வெளையாட்டு காட்டுமே.

“தரிசனம் கிடைக்காதா, என் மேல் கரிசனம் கிடையாதா”ன்னு காதலை கன்வே பண்றதுக்குன்னே… கன கச்சிதமா ராஜா போட்டு வச்சிருக்கிற பாட்டுகள்ல ஏதாவது ஒண்ண, காதலிக்கிற பாவாடை தாவணி பைங்கிளிகளும், சுடிதார் சுந்தரிகளும், சேலை செவ்வந்திகளும் வரும்போதே சத்தமா போட்டு விட்டுட்டு… ஒரு ஓரமா நின்னு ரியாக்சனை ரிசீவ் பண்ணும் காளைகளையும் கன்னிகளையும் செம காதல் வசப்பட வச்சதில் ராசாவுக்கு “ராச” பங்கு உண்டு.

“சும்மா கெடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி”ங்கிற மாதிரி, சும்மாக்கிடக்கிற இதயத்துக்குள்ள பாட்டை ஊத்தி ஊத்தி காதல் வளர்க்கிறதும் இந்த பண்ணைபுரத்து பாட்டரசன் தான். அதே காதல் ஊத்திக்கிச்சின்னா கொஞ்சம் “ஊத்தி”க்கிட்டு அல்லது “ஊதி”க்கிட்டு மனசை தேத்துறப்போ கூட வந்து நண்பனா நிக்கிறதும் இதே பாட்டரசன் தான்.

காதல்ல சோக ஸ்பெஷலிஸ்ட்டா நேந்து விடப்பட்டது நம்ம கேரளத்து சேட்டன் ஏசுதாஸ் தான். “இத்தனை நாள் வாய்மொழிந்த சித்திரமே இப்பொழுது மௌனம் ஏன் தானோ?”ன்னு “அன்பே வா அருகிலே” பாட்டுல ஏசுதாஸை பாட வச்சிருப்பாரே, கோவிச்சுக்கிட்டு கோக்குமாக்கு பண்ற ஜோடிக்கிளியை பேச வைக்க, இதை விட வேற ஹை ரெக்கமண்டேஷன் ஏதும் தேவைப்படாது. ஏசுதாஸ் தெரிஞ்சிதான் தாடி வச்சாரா… இல்ல சோகப்பாட்டா பாடிப்பாடி அது பிடிச்சிப்போய் தாடி வச்சாரான்னா தெரியல… சிம்பாலிக் சிங்கர்.

வேற வேற ஊர்ல, வேற வேற அந்தஸ்து உள்ள பையன் பொண்ணுக்குள்ள, வேற வேற ஜாதிக்குள்ள… எங்க வேணாலும் எப்டி வேணாலும் காதல் இருக்கலாம். ஆனா எந்த ஊர்ல காதல் இருந்தாலும், அந்தக் காதல் எந்த டைப்பா இருந்தாலும் எல்லா டைப்புக்கும்… ராசா பாட்டு போட்டு வச்சிருப்பார்.

இளவட்டக் காதல்னா, “தரிசனம் கிடைக்காதா, என் மேல் கரிசனம் கிடையாதா”,
முத்தி மீசை நரைச்ச காதல்னா “பூங்காத்து திரும்புமா?, என் பாட்டை விரும்புமா”, ரெண்டுக்கும் நடுவுல உள்ள காதல்னா, ரெண்டுங்கெட்டான் காதல்னா, “என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம்”னு… ஏதோ ஒரு பாட்டு நரம்புக்குள்ள நசநசக்கும். மீசைக்குள்ள மின்னலடிக்கும். தாடிக்குள்ள தடதடக்கும். இளமைக்குள்ள இடி இடிக்கும். இமைகளெல்லாம் இசை படிக்கும்.

பத்தாங்கிளாஸ் முடிச்சி பதினொண்ணாங்கிளாஸ் போன புதுசு. டவுசர் போட்டுட்டு திரிஞ்ச காலத்துக்கு கல்தா குடுத்துட்டு, முதன்முதலா முழுக்கால் சட்டை போட்ட குறுகுறுப்பு.

கிளாஸ் ரூம்ல முதலிடம் பொண்ணுங்களுக்குத்தான். அவங்களைத் தாண்டித்தான் பையன்ங்க இருக்கிற இடம். முக்கா வாசி தாவணிப்போட்ட பச்சக்கிளிகளும், நாலைஞ்சு பேரு மட்டும் பச்சப்புள்ளைக மாதிரி ஆம்பளை சட்டையும் பாவாடையுமா இருப்பாங்க. பச்சைக்கிளிகள்னு பேச்சுக்கு சொல்லல. ஏன்னா எங்க ஸ்கூல் யூனிஃபார்ம் பச்சையும் வெள்ளையும் அதான்.

நானெல்லாம் பக்கா கிராமத்தான். அத்தைப்பொண்ணு, மாமன் பொண்ணுங்களெல்லாம், கலர்னா கிலோ என்ன விலைன்னு கேக்கிற ரேஞ்சு. அதனால, அப்போ அய்யர் ஆத்து மாமி மாதிரி மஞ்சக்கலர் பொண்ணுங்கன்னா, ஒரு மார்க்கமா மயங்கி கெறங்கி பாக்கிற மனநிலை தான்.

முதல் பெஞ்ல இருந்த அஞ்சு பேர்ல , மூணு பேர் பாவாடை சட்டைப் பச்சப்புள்ளைக தான். மிச்ச ரெண்டே ரெண்டு பேர் மட்டும் தாவணிக்கிளிகள். அதுல ஒருத்தி ராதா.
நல்ல “செவப்பா” இருப்பான்னு பொண்ணுங்களைப் பத்தி சொல்றதெல்லாம் பார்வைக்குள்ள பாசி படிஞ்சவங்க சொல்றது. செவப்புன்னு ஒரு கலர்ல எந்தப்பொண்ணும் கிடையாதுன்னு முதல் முதல்ல என் புத்திக்குள்ள புகார் பண்ணது அவளோட கலர் தான். அவ மஞ்சக்கலர். அதும் தங்க மஞ்சக்கலர். மொதல் நாளு அவளை பாக்கிறப்போ, பட்டிக்காட்டான் யானையைப் பாத்த மாதிரியே பாத்தேங்கிறது மறக்கவே முடியாத பெரிய வரலாற்றுப் பதிவு.

கொஞ்சம் நீளமான மாமரத்து கொழுந்து இலை ஒண்ணு நடந்து வர மாதிரி வருவா. மென்மையான மேன்மை அழகி. பச்சக்கலர் பாவாடை, பச்சக்கலர் தாவணி, வெள்ளை சட்டை, வட்டமா சந்தணக்கலர் முகம். உதட்டுக்கு மேல, நாசியோட வலக்கை பக்கத்துல ஒரு சின்ன கல்லு வச்ச மூக்குத்தி. ஒரே ஒரு வெள்ள கல்லு மட்டுந்தான். அவ திரும்பும்போதெல்லாம் பளீச் பளீச்னு மின்னும். மூக்குத்தி மினுக்கம்லாம் அவ சிரிக்காம இருந்தா தான். அவ சிரிச்சிட்டான்னா, அந்தப்பல் வரிசை, மல்லிகை மொட்டுக்களை மேலயும் கீழயும் அடுக்கி வச்ச மாதிரி… மூக்குத்தி எல்லாம் முக்காடு போட்டுட்டு மூலையில உட்கார்ந்துர வேண்டியதுதான். அப்டி ஒரு வெண்மைப்புரட்சி அவ ஒவ்வொரு தடவை சிரிக்கும்போதும் நடக்கும். ஒரு நல்ல புத்தகத்தை ஒவ்வொரு முறை திறக்கும்போதும் வெடிக்கும்னு சொ
ல்வாங்க. அவ ஒரு தடவை வாய்திறந்து சிரிச்சா, நான் பத்துப் பதினைஞ்சி தடவை வெடிச்சேன்.

ஸ்கூல் விட்டு சாயங்காலம் ஊருக்குள்ள நுழையும்போதே, ஏதாவது ஒரு முக்குல இருந்து ராசா பாட்டு வரவேற்கும். அப்பல்லாம் வாரத்துல ரெண்டு நாள் தான் ஊர்ல ரேடியோ கட்டாம இருப்பாங்க.(மைக் செட்டை எங்க ஊர்ல ரேடியோன்னு சொல்லி தான் பழக்கம். இந்த மைக் செட்டு, வாரம் முழுக்க பங்ஷன் பத்தி தனிக்கதை பின்னாடி சொல்றேன்.)

“அடி ஆத்தாடி இளமனசொன்னு ரெக்க கட்டி பறக்குது சரிதானான்னு” ஒரு பாட்டு காத்துல தவழ்ந்து வரும். அந்த மஞ்சக்கிளி நெனைப்போடயே வர எனக்கு, அந்த “பாட்டு மாலை” இன்னும் காதலைக் கூட்டும். காதலிக்கிற டைம்ல எங்கயோ இருந்து காதுல வந்து குடையுற நெறையுற பாட்டுக்கள், ஏதோ நம்ம சிச்சுவேஷனுக்கு பொருத்தமா “காதல்கடவுள்” ப்ளே பண்ற மாதிரியே இருக்கும்.

அடி ஆத்தாடி பாட்டுல தற்காலிகமா ஆள் மாறாட்டம் நடக்கும். யூனிட், யூனியன், மேக் அப், கேமரா… இல்லாம ஸீரோ பட்ஜெட்ல நானும் என்னோட ஹீரோயினும் நடிச்ச காட்சி…. கண்ணுக்குள்ள ஓடும்.

சரி, பாட்டு பட்ஜெட்லாம் ஓகே தான். ஆனா, அவ கிட்ட காதலைச் சொல்றது எப்டி? அவ இதயத்துக்குள்ள ஷாமியானா பந்தல் போடுற அளவுக்கு இடம் பிடிக்க முடியலேன்னாலும் ஒரு ஸ்டூல் மட்டும் போட்டு உட்கார்ந்துக்கிற அளவு இடம் பிடிக்கிறது எப்டி?

நம்ம ஒண்ணும் அம்பூட்டுப் பெரிய அழகன் கெடையாதுங்கிறது, அதுக்கு ரொம்ப நாள் முன்னாடியே நமக்கே தெரிஞ்ச உண்மைங்கிறதுனால நம்ம அழகை(??!!) வச்சி அவளை அட்டாக் பண்ண முடியாதுங்கிறது அக்மார்க் தெளிவு. ஆனா, படிப்புல நம்ம பட்டைய கௌப்புவோம்ல. எனக்குப்போட்டி அவ தான். அவளுக்கு போட்டி நான் தான். படிப்புல சாமீ.

நல்ல படிச்சதுனால என் “நட்பு அழைப்பை”(ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்) அவ உடனே ஏத்துக்கிட்டா. அப்டியே அந்த நட்பு படகுல ஏறி ஒரு நாள் அக்கரைக்கு போனேன். அக்கவுண்டன்சி நோட்டுக்குள்ள என் மனசை மடிச்சி வச்ச கடுதாசி. திக்கி தெணறி ஒரு தைரியத்துல குடுத்துட்டேன். பிரிச்சி பாத்தவ அழுதுக்கிட்டே போயிட்டான்னு அவ தோழி அரசி சொல்ல, மறுநாள் விடியும்போது ஊசிக்காட்டு சொடலைய விட கருப்பா இருக்கிற, எங்க ஹெட்மாஸ்டர் முன்னாடி அன்னைக்கு பலிகடா நான் தான்னு நெனைச்சாலே நாக்குல தண்ணி வத்திருச்சி.

ஆனா, அவ சொல்லவே இல்ல. செத்துப் பொழைச்சேன். ஆனா, ஒரு வாரத்துக்கு வகுப்புல நிமிந்து பாக்கல, அவ சிரிப்பைத் தொலைச்சி வெண்மைப்புரட்சிக்கு லீவு விட்டதுல, என் உயிருக்கே லீவு விட்ட மாதிரி ஆகிப்போச்சி. மௌனங்கள், பார்வை தவிர்த்தல்கள்னு… அடுத்து வந்த சில நாட்கள்… “உள்ளதும் போச்சேடா நொள்ளக்கண்ணா”ன்னு திரும்ப திரும்ப ஏசுதாசை மட்டுமே பாட வச்சி தேம்பி தேம்பி அழுதுட்டிருந்தேன் சத்தமே வராம.

அந்த வருசத்தின் இலையுதிர்காலம் எட்டிப்பார்க்க ஆரம்பிச்சது, பள்ளியின் முன் பக்கம் முழுசும் நின்னுட்டிருக்கிற மரங்கள்… உதிர்த்த இலைகள்… மனிதக்கால்ளுக்கு மத்தியில் நடமாடிக்கிட்டிருக்கும். மரங்கள் இலைகளை உதிர்த்தது போல அவள் சோகம் உதிர்த்து மெல்ல சிரிக்க ஆரம்பிச்சா. எங்கள் காதலின் வசந்தகாலம் தொடங்கியது.

புத்தகங்களும் நோட்டுகளும் எங்கள் பாசப்பரிவர்த்தனைக்கு தூதுவர்களாக மாறின. ஒரு வாத்தியாருக்கோ ஒரே ஒரு டீச்சருக்கோ கூட எங்க காதல் தெரியாது. ஆனா எல்லா பாடங்களுக்கும் எங்க காதல் தெரியும். எல்லா பாடப்புத்தகங்களின் எல்லா பக்கங்களுக்கும் எங்கள் காதல் கடிதங்களோடு பரிச்சயம் தாண்டிய பழக்கம் இருந்தது. தொடர்ந்தது.

எங்க போஸ்ட் ஆபிஸ்ல சாயங்காலந்தான் வேலை நேரம். ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போற நேரத்துல, இடம் மாறும் நோட்டுக்குள்ள மடிச்சி வைக்கப்பட்ட இதயங்கள்.

வீட்டுக்கு போய், புக்கை வச்சிட்டு, அந்த லெட்டரை எடுத்துக்கிட்டு தனியா கௌம்பிருவேன். வயக்காட்டு பக்கம் போனா, எதுவாட்டுல முதல்ல இருக்கிறது சர்க்கிள் நாயக்கர் பம்பு பெட். மோட்டார் ரூம் மாடில போய் வானம் பாத்து படுத்துக்கிட்டே லெட்டரை பிரிச்சி படிப்பேன். எத்தனை தடவை படிப்பேன்னு எந்தக்கணக்கும் கெடையாது. இனிமேல் படிக்க முடியாதுங்கிற அளவு இருட்டுற வரைக்கும் விடாது படிப்பு.

ஆலப்போல் வேலப்போல்
ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலப்போல் ரெண்டப்போல்
நாளும் பொழுதும்போல்
நானும் அங்கு நின்றிருப்பேனே

எல்லா கடிதமும் இப்டி பாட்டுல தான் தொடங்கும். அந்த கடிதத்தை பாக்கெட்ல வச்சிக்கிட்டு அதே பாட்டக் கேப்பேன். அப்பவே செத்துப்போயிரலாம்னு நெனைக்கிற அளவுக்கு மனசு நெறைஞ்சி வழியும். பட்டிக்காட்டான் யானையைப் பாத்த மாதிரி நான் பாத்த மஞ்சத்துண்டு ரதி… எனக்காக இப்டி உருகி கடிதம் எழுதுனான்னு நெனைக்க நெனைக்க இனிக்கும். இனிக்க இனிக்க படிப்பேன். அடுத்த கடிதம் கைமாறுகிற வரை இந்தக்கடிதம் அதோ கதிதான். பிரிச்சு பிரிச்சு படிச்சு படிச்சு மடிச்சு மடிச்சு… மறுபடியும் பிரிச்சு பிரிச்சு…

கூடவே உட்கார்ந்து அந்தப்பாட்டை ஏதேச்சையா கேட்டு ரசிக்கிற நண்பன் ஜெபா சொல்வான், “மொட்டை மொட்டை தான். அவரை அடிச்சுக்க எவனும் இன்னும் பொறக்கல, பொறக்கவும் முடியாது”ன்னு பொங்குவான். (ராசாவுக்கு நாங்க வச்சிருக்கிற செல்லப்பேர்கள்ல “மொட்டை” ரொம்ப முக்கியமான ஒண்ணு.)

பதில் கடிதத்துல என் காதலை அதே மாதிரி பாட்டுல நானும் சொல்லணும்ல. அதே எஜமான் படத்துல ராஜா இன்னொரு மெலடி போட்ருப்பாரே. என் ஆளு பல்லவியா நின்னான்னா நான் பல்லவியை தாண்டி சரணம்.

“ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே”

பல்லவியை எழுதிட்டு அதுல உள்ள காதல் போதாதுன்னு சரணத்தையும் லேசா சப்போர்ட்டுக்கு கூப்பிடுவேன்.

“சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன் அடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்”ன்னு
எக்ஸ்ட்ரா காதலிப்பேன்.

ராசா பாட்டு மாதிரியே ராதா நெனைப்பு எப்பவுமே அலுக்காது. சலிக்காது.

கூடலும் கூடல் நிமித்தமாவே இருந்தா அதுக்கு பேர் காதலே கிடையாது. அப்பப்போ ஊடலும் வந்து உம்முன்னு மூஞ்சியை தூக்கி வச்சிக்கிட்டு திரியணும்.

திடீர்னு ஒருநாள் நான் ஏதோ தெரியாம வாய்விட்டதில, “ஓங்கூட இனிமே பேசவே மாட்டேன்”னு சொல்லிட்டா. கடிதப்போக்குவரத்துக்கு “தடை” போட்டுட்டா. பார்வை பரிவர்த்தனைக்கு “தடா” போட்டுட்டா. எங்களுக்குள்ள ஏதாவது இப்டி முட்டிக்கிச்சின்னா, நாட்டாமை ஸ்தானத்துல அரசி தான் இருப்பா. எங்க ரெண்டு பேர் சார்பாக வாதாடுற வக்கீலாவும் அவ தான் இருப்பா.எங்க ரெண்டு பேருக்கும் தீர்ப்பு சொல்ற நீதிபதியாவும் அவ தான் இருப்பா. அந்த நேரம் பாத்து அரசி நாலு நாளா ஆப்செண்ட். இந்த பட்டிக்காட்டான் எந்த யானைய பாத்தானோ அதே யானை நாலு கால்லயும் மிதிச்சி நசுக்குன மாதிரி ஆயிட்டேன் நான்.

அவளோட அந்த தனி நபர் ஒத்துழையாமை இயக்கம் ஒரு வாரத்துக்கு நீண்டது. அந்த வாரத்து சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அந்த காதல் வரலாற்றின் கருப்பு பக்கங்கள் ஆனது.

இனிமே அவ்ளோ தான்னு நெனைச்சி… நடு வீட்டுக்குள்ள கெடந்த நார்க்கட்டில்ல குப்புறப்படுத்து கண்ணீரை கட்டில் ஓட்டைகள் வழியா சிந்துன கதை, அப்பா அம்மாவுக்கும் அக்காக்களுக்கும் தெரியாது. ஏன்னா, அவங்களைப் பொறுத்தவரை நான் தூங்கிக்கிட்டிருந்தேன். ஆனா எனக்கு துக்கம். துக்கத்தைக் கூட அவ்ளோ மென்மையா அனுபவிச்சேன். அனுஷ்டிச்சேன்.

திங்கள்கிழமை, என் “காதல் போர்வாள்” அரசி வந்துட்டா, “எல்லாத்தையும் மறந்துட்டா” அரசின்னு அவ கிட்ட புலம்பினேன். நாட்டாமை தீர்ப்பை மாத்தி எழுத வச்சிருவான்னு ஒரு நம்பிக்கை இருந்தது. அவ அனுபவம் அப்படி, இதுக்கு முன்னாடியும் பல தடவை தீர்ப்பை மாத்தி எழுதி இருக்காளே.

அன்னைக்கு சாயங்காலமே அரசி ஒரு நோட்டை குடுத்தா. அது ராதாவோட அக்கவுண்டன்சி நோட்டு. ஒரு வார போஸ்ட் ஆபிஸ் விடுமுறைக்கு பின் வரும் முதல் கடிதம். ஆனா, என்ன எழுதிருக்காளோன்னு ஒரு படபடப்பு.

வீட்டுக்கு போய் படிக்கிற பொறுமை துளியும் இல்ல. போற வழியலயே சர்க்கிள் நாயக்கர் கெணத்துக்கு போயிட்டேன். படபடன்னு கடிதத்தை எடுத்தேன். கடிதத்தின் முதல் வரியின் முதல் வார்த்தையிலயே… ராசா தான் இருந்தார்.

மறந்தால் தானே நினைக்கனும் மாமா
நினைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைஞ்சது மாமா
நெனைச்சு தவிச்சேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெக்கு காத்தோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னா என்ன
ஒண்ணாக நின்னா என்ன
ஓம் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்னை எண்ணி
துடிச்சாளே இந்த கன்னி
வா மாமா…

கோடு போட்ட அந்த பேப்பர், அதுல இருந்த அவளோட கையெழுத்தும், காதலும்… அது தந்த உணர்வும்… சத்தியமா சான்சே இல்ல. இந்த பிறப்பிற்கான காரணங்களில் அவளோட காதலுக்கு முதல் வரிசையில இடம் உண்டு. அதே வரிசையில என் ராசாவுக்கும் இடம் உண்டு.

அப்டி ராசா பாட்டுல ஆரம்பிச்ச அவளோட காதல் கடிதங்களை ரொம்ப நாள் எங்க வீட்டுல எனக்குன்னு இருந்த ஒரு சின்ன ரெங்கு பெட்டிக்குள்ள (தகர பெட்டி) யாருக்கும் தெரியாம பத்திரப்படுத்தி வச்சிருந்தேன்.

பன்னிரெண்டாங்கிளாஸ் பரிட்சை முடிஞ்ச அஞ்சாவது நாளே அவளுக்கு அவசர கல்யாணம். போயிட்டா.
அதுக்கப்புறம் அந்தக்கடிதங்களை அப்பப்போ எடுத்து வாசிப்பேன். அவளோட இழப்பு ரொம்ப பெரிய வலியா அழுத்தும். அப்டியே பெட்டிக்குள்ள பூட்டி வச்சிருவேன். ஒரு நாள் வீட்டுல எல்லாரும் வெளிய போயிருந்தாங்க. எல்லா கடிதத்தையும் எடுத்து ஒரு வரி விடாம பொறுமையா வாசிச்சேன். ஓட்டு வீடு. மல்லாக்க படுத்திருந்தேன். கடிதங்களை அள்ளி மார் மேல போட்டுக்கிட்டேன். மனசு முழுக்க அவ வந்து நின்னா. சுவாசம் போற வழியவே அவ முகமும் நெனைப்பும் அடைக்கிற மாதிரி ஒரு அவஸ்தை. வழிஞ்ச கண்ணீரை துடைக்க தோணல. ரொம்ப நேரம் அப்டியே படுத்திருந்தேன்.

பட்னு எந்திரிச்சேன். அடுக்களையில போய் தீப்பெட்டி எடுத்தேன். சிமெண்ட் தார்சாவுல எல்லா கடிதத்தையும் குவிச்சு வச்சி தீ வச்சிட்டேன். இனிமே இந்த அவஸ்தை வேண்டாம்னு அன்னைக்கு தீ வச்சேன்.

ஆனா, ராசா போட்ட “குடகு மலைக் காத்தை” இப்ப வரைக்கும் என்னால எரிக்க முடியல. அதைக் கேட்கும் போதெல்லாம் மனசு எரியிறதையும் என்னால அணைக்கவும் முடியல.

(இசை வளரும்)

முருகன் மந்திரம் – தொலைபேசி எண் – 09841869379

4 Comments
 1. Muruganandam says

  அருமையான அனுபவப் பதிவு. நிறைய எழுதுங்கள். நன்றி.

 2. prem says

  நல்ல “செவப்பா” இருப்பான்னு பொண்ணுங்களைப் பத்தி சொல்றதெல்லாம் பார்வைக்குள்ள பாசி படிஞ்சவங்க சொல்றது. செவப்புன்னு ஒரு கலர்ல எந்தப்பொண்ணும் கிடையாதுன்னு முதல் முதல்ல என் புத்திக்குள்ள புகார் பண்ணது அவளோட கலர் தான். அவ மஞ்சக்கலர். அதும் தங்க மஞ்சக்கலர். மொதல் நாளு அவளை பாக்கிறப்போ, பட்டிக்காட்டான் யானையைப் பாத்த மாதிரியே பாத்தேங்கிறது மறக்கவே முடியாத பெரிய வரலாற்றுப் பதிவு.

 3. prem says

  கன்கார்டியா ஸ்கூல் ல தான் படிச்சியா முருகா…

 4. சேக்காளி says

  //ஆனா, ராசா போட்ட “குடகு மலைக் காத்தை” இப்ப வரைக்கும் என்னால எரிக்க முடியல//
  காற்றில் வரும் பாட்டு. வருடி செல்லுவதை அனுபவித்துக்கொள்ளுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எரிச்சல் பாலா… கிசுகிசு பார்த்திபன்…. உற்சாக கமல்… ‘என்றென்றும் புன்னகை’யுடன் ஒரு விழா

பொதுமேடைகளுக்கு வந்தால் என்றென்றும் எரிச்சலோடு இருக்க வேண்டும் என யார் சொல்லிக் கொடுத்தார்களோ, ‘என்றென்றும் புன்னகை’ பட விழாவிலும் சம்பிரதாயத்துக்கு கூட புன்னகை புரியாமல் அதே எரிச்சலோடு...

Close