என்னது… அஜீத் ஸ்டவ்வை பற்ற வைக்கிறாரா? -விருந்துக்கு பதறும் தொழிலாளர்கள்!
அன்பே உன் பெயர்தான் அஜீத்தா என்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் வீரம் யூனிட்டை சேர்ந்தவர்களுக்கு அவரது அன்பே வம்பாக வந்து சேர்ந்திருக்கிறது. ‘சாப்பிடாம கௌம்புனீங்க…? சட்னிதான்’ என்று சட்டையை பிடித்து அன்பு காட்டுவார்கள் சிலர். அஜீத் அந்த ரகத்தை சேர்ந்தவரில்லை என்றாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது தனது யூனிட்டை சேர்ந்தவருக்கு விருந்தளிக்கிற வழக்கம் கொண்டவர். இந்த விருந்தில் பட்டை லவங்கத்துடன் அவரது அன்பும் அதிக ருசியாக இணைந்திருக்கும்.
மட்டனோ, சிக்கனோ மாதத்திற்கு ஒரு முறை ‘மே மே…வும், கொக்கரக்கோ’வும் உண்டு அந்த விருந்தில். ஆனால் கொஞ்ச காலமாக எந்த மருத்துவர் கொழப்பியடித்தாரோ? வாசனைக்கு கூட மட்டன் சிக்கன் இல்லையாம் அதில். இதையாவது பொறுத்துக் கொள்ளலாம். இன்னொரு விஷயத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை அவர்களால். வேறொன்றுமில்லை, பச்சை காய்கறிகளையும், கீரை வகைகளையும் அரைகுறையாக வேக வைத்து அதில் உப்பு கூட போடாமல் சாப்பிட சொல்கிறாராம். இதுதான் உடம்புக்கு நல்லது என்று கூறி இவற்றையும் தன் கையாலேயே அவர் சமைத்துப் போட கிளம்பியிருப்பதுதான் அதிர்ச்சி.
முன்பெல்லாம் அஜீத் கியாஸ் ஸ்டவ்வை பற்ற வைத்தால், அதை திருவண்ணாமலை தீபம் போல எண்ணி கைகூப்பி வணங்கிய தொழிலாளர்கள் இப்போதெல்லாம் அதே ஸ்டவை அவர் பற்ற வைக்க நேர்ந்தால் ஃபயர் என்ஜினிக்கு போன் செய்கிற அளவுக்கு கவலைப்படுகிறார்கள்.
நல்லது சொன்னா யாருக்கு புடிக்குது?