‘என்னை ஹீரோவாக்குங்கண்ணே….’ -பெரிய இயக்குனர்களிடம் ஜி.வி.பிரகாஷ் கெஞ்சல்
மோதிரக் கையால் குட்டுவாங்காத எந்த அறிமுக ஹீரோவும், கோடம்பாக்கத்தின் உச்சி வெயிலையும் அதனால் ஏற்படும் உஷ்ணத்தையும் அனுபவித்தே ஆக வேண்டும். இதனால் அறிமுகமாகிற நிலையிலேயே, ‘நல்ல டைரக்டர் கிடைக்கணும். நல்ல கம்பெனி கிடைக்கணும்’ என்றெல்லாம் பிள்ளையாரையும் முருகனையும் பிராண்ட ஆரம்பிக்கிறார்கள் அவர்கள். சாதாரண ஆட்களுக்குதான் இப்படி. ஏற்கனவே ஆட்டோகிராப் போடுகிற அளவுக்கு மார்க்கெட்டில் வளர்ந்து வீங்கி கிடப்பவர்களும் கூட, பெரிய இயக்குனர் கையால் அறிமுகமாகணும் என்று ஆசைப்பட்டால் எப்படி?
அப்படிதான் ஆசைப்படுகிறார் ஜி.வி.பிரகாஷ். பத்து கோடி சம்பளம் கேட்கிறாராம் என்று ராதாரவியே காமென்ட் அடிக்கிற அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் இவர். ராஜாராணி இவர் இசையமைத்த 36 வது படம். அதற்குள் தனது 44 வது படத்திற்கும் அட்வான்ஸ் வாங்கி வைத்திருக்கிறாராம். அந்தளவுக்கு இசைத்துறையில் பிசியாக இருந்தாலும், ஹீரோவாக நடிக்காம விடாதே என்று உள் மனசு உந்திக் கொண்டேயிருக்கிறதாம் ஜி.வி.பிரகாஷை.
அவரது ஆசையை அறிந்து கொண்ட அறிமுக இயக்குனர்கள், ‘சார்… உங்களுக்கு ஒரு கதை இருக்கு. கேட்கிறீங்களா?’ என்று இவரை சுற்றி சுற்றி வந்தாலும், லெஃப்ட் கையால் அவர்களை விரட்டியடிக்கவே விரும்புகிறார் ஜி.வி. இவர்களை விரட்டினாலும் முன்னணி இயக்குனர்கள் சிலரை சந்தித்து ‘என்னைய வச்சு ஒரு படம் இயக்குங்க. முன்ன பின்ன ஆனா பார்த்துக்கலாம்’ என்று கேட்டிருக்கிறாராம். (இந்த முன்ன பின்ன ஆனா பார்த்துக்கலாம் டெக்னிக்கை பயன்படுத்திதான் கோடம்பாக்கத்தில் ஒரு முக்கிய நடிகராகவும் ஃபார்ம் ஆகிவிட்டார் இசையமைப்பாளர் விஜய் ஆட்டனி) அந்த முன்னணி இயக்குனர்களில் இருவர் மட்டும், ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று கூறியிருக்கிறார்களாம். இவர்களின் வாக்குறுதியை தொடர்ந்து குத்து பாட்டறையில் இருந்து கொண்டே அந்த கூத்துப்பட்டறை பக்கமாகவும் போய் நிறைய கற்றுக் கொள்ள நினைத்திருக்கிறாராம் ஜி.வி.
யாருப்பா அங்க… ரசிகர் மன்ற போர்டு ரெடியா?