எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் பெற புதிய வசதி: பிரவீன்குமார்

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் ஏப்ரல் 24-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 682 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் இரண்டு கோடியே 68 லட்சத்து 93 ஆயிரத்து 9 பேர் ஆண்கள்; இரண்டு கோடியே 68 லட்சத்து 56 ஆயிரத்து 677 பேர் பெண்கள்; 2 ஆயிரத்து 996 பேர் திருநங்கைகள்.

இந்த தேர்தலில் வாக்காளர்களை சேர்ப்பதற்காக 9-ந் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு முகாமை நடத்த உள்ளோம். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை முகாம் நடக்கும். பெயர் திருத்தம், நீக்கம் ஆகிய நடவடிக்கைகள் இந்த முகாமில் செய்யப்படாது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பெயர் இல்லை என்றால் அங்கேயே 6-ம் எண் பாரத்தை வாங்கி நிரப்பிக்கொடுக்க வேண்டும். இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் சேர்க்கப்படும். மற்றபடி, பெயர் சேர்ப்பது, பெயர் திருத்தங்கள், இடமாற்றம் தொடர்பாக மார்ச் 25-ந் தேதி வரை (வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு) சம்பந்தப்பட்ட அலுவலகத்திலும் வழக்கம்போல் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்தலில் வாக்காளர் பெயர் சேர்க்கப்படாமல் போய்விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எஸ்.எம்..எஸ். மூலம் வாக்காளர் அடையாள அட்டை நம்பரை கொடுத்தால், வாக்காளர் பெயர் பட்டியலில் அந்த அடையாள அட்டைதாரரின் பெயர் இடம்பெற்று உள்ளதா? அவர் எந்த வாக்குச்சாவடியில் ஓட்டுபோட வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை, பதில் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பும் முறை பற்றி பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் ஆலோசித்து வருகிறோம்.

மனதில் எளிதில் பதியக்கூடிய நம்பரை தேர்வு செய்வோம். தமிழகம் முழுவதும் இந்த நவீன முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் 52 ஆயிரத்து 145 வாக்குச்சாவடிகளை அமைத்திருந்தோம். தற்போதைய தேர்தலில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 418 ஆக உயர்ந்துள்ளது.

அதாவது 8 ஆயிரத்து 273 வாக்குச்சாவடிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்தால், மேலும் கூடுதலாக வாக்குச்சாவடிகளை நியமிப்பது குறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவு செய்வார். தற்போது தமிழகத்திலேயே பெரிய தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உள்ளது.

அதில் 18 லட்சத்து 55 ஆயிரத்து 504 வாக்காளர்கள் உள்ளனர். சிறிய தொகுதியாக நாகப்பட்டினம் தொகுதி உள்ளது. அங்கு 11 லட்சத்து 88 ஆயிரத்து 738 வாக்காளர்கள் உள்ளனர். பொருட்காட்சியில் உள்ள அரசு கடைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. சில பஸ்கள், சமாதியில் இரட்டை இலை சின்னம் போன்ற அமைப்பு இருப்பதாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அது கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுரையை கேட்டிருக்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில் அதுகுறித்த ஆலோசனை பெறப்படும். மேலும், அம்மா குடிநீர் பாட்டில், அம்மா உணவகம் போன்றவற்றில் முதல்-அமைச்சரின் படம் இருக்கக்கூடாது.

அம்மா என்ற வார்த்தை பொதுவானது என்றும், அதை இடம்பெற செய்ய வேண்டும் என்றும் அ.தி.மு.க. கோரியுள்ளது. இதுவும் இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுரைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மிக்சி, கிரைண்டர் போன்ற இலவசங்களை கொடுப்பதை நிறுத்த வேண்டுமென்று மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. டி.ஜி.பி. ராமானுஜத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கை குறித்து தேர்தல் தலைமை கமிஷனர் ஏற்கனவே பதிலளித்துள்ளார். திடீரென்று அதிகமாக மது விற்பனையாகும் கடைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுபோல் மாநில எல்லைகளில் உள்ள கிராம சாலைகளில் சோதனைச் சாவடிகள், ரகசிய கண்காணிப்பு கேமராக்களோடு நிறுவப்படும். மது கொண்டு செல்வதை உன்னிப்பாக கண்காணிப்போம். பதற்றத்துக்குரிய வாக்குச்சாவடிகளை கணக்கிடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மற்றொரு சமூகத்தினர் ஓட்டு போடுவதை தடுத்த சம்பவம் நிகழ்ந்திருந்தாலோ, ஒரு வேட்பாளர் மட்டும் 70 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளை பெற்றிருந்தாலோ, சமீபத்தில் ஏதாவது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை நடந்திருந்தாலோ, அந்த வாக்குச்சாவடிகளை பதற்றத்துக்குரிய வாக்குச்சாவடிகளாக கணக்கில் எடுத்துக்கொள்வோம்.

பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதை கண்காணித்து வருகிறோம். தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு ஒருவர், ‘இவருக்கு ஓட்டு போடுங்கள்’ என்று தகவல் அனுப்புவதில் தவறு இல்லை. ஆனால் மொத்தமாக ‘அவுட் சோர்சிங்’ மூலம் அனுப்பினால், அது தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.

இதற்காக வேட்புமனுவில் அந்தந்த வேட்பாளர்களின் சமூக வலைத்தள முகவரிகளைப் பெற இருக்கிறோம். அதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும்.

இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சிவஞானம், துணை இயக்குனர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உடனடியாக அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிமுறைகள்

பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. அதன் விவரம் வருமாறு:–...

Close