ஏன் இந்த குதர்க்க பேட்டி? வைரமுத்துவுக்கு ஒரு திறந்த மடல்… தேனி கண்ணன்

மதிப்பிற்குரிய கவிப்போரரசு வைரமுத்து அவர்களுக்கு வணக்கம்.

இந்த கடிதத்தை நீண்ட தயக்கத்திற்குப்பிறகே எழுதுகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வார இதழில் நீங்கள் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதப்போவது குறித்த கட்டுரைப் பேட்டி வெளிவந்திருந்தது. அந்த செய்தி எல்லோரையும் போலவே எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அதற்குப்பின்னால் இருந்த அரசியல்தான் இந்த கடிதத்தை எழுதத் தூண்டியது. இதிலென்ன அரசியல் இருக்கிறதென்று மற்றவர்களுக்கு தோன்றலாம். ஒரு கவிஞர் எந்த இசையமைப்பாளரோடும் பாடல் எழுதலாம் ஆனால் நீங்கள் யுவனோடு சேருவதை மட்டும் பூதாகரமான செய்தியாக்கியிருப்பதில்தான் இருக்கிறது உங்களின் ’இடம் பொருள் ஏவல்.’

ஆதாயம் இல்லாமல் அரை நொடியைக்கூட நீங்கள் வீணடிக்கமாட்டீர்கள் என்பது உங்களை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இந்த சந்திப்பிற்காக எத்தனை மெனக்கெட்டிருக்கிறீர்கள் என்பதிலிருந்து இதற்குப்பிறகு தங்களுக்குக் கிடைக்கப்போகும் லாபம் மலைக்க வைக்கிறது. மந்திரிகளுக்கே தெரியாமல் மதிநுட்ப அரசியல் செய்வது போல், திரையுலகில் தங்களின் தொழில் நுட்ப அரசியல் வியக்க வைக்கிறது.

ஒரு இயக்குனர் ஒரு குறிப்பிட்ட பாடலை நீங்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று உங்களிடம் வந்தால் “இந்த ஒரு பாடலை மட்டும் நான் எழுத வேண்டுமா, அருமையான கதையாக இருக்கிறதே அதற்கு வலுவூட்ட வேண்டாமா” என்று இயக்குனரின் தலையில் தேன் தடவி எல்லா பாடல்களையும் நீங்களே எழுத நிர்பந்திப்பீர்கள். இதனால் உங்களின் சக கவிஞர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறதே என்கிற எந்தவித குற்றவுணர்வும் உங்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. நீங்கள் இருக்கும் இதே துறையில்தான் உங்களுக்கு முன்னோடியாக இருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி போன்றோர்களும் கோலோச்சியிருக்கிறார்கள். ஒருமுறை கண்ணதாசனிடம் வந்த ஒரு இயக்குனர் படத்தின் கதையைச்சொல்லி “நீங்கள் பாடல் எழுத வேண்டிய சூழல் இதுதான்” என்றிருக்கிறார். ஒரு நிமிடம் யோசித்த கவியரசு, “இந்த சூழலுக்கு பட்டுக்கோட்டை எழுதினால் சிறப்பாக இருக்கும்.” என்று அவரிடம் அனுப்பியிருக்கிறார்.

இதே போல பட்டுக்கோட்டையாரிடம் சென்ற வேறொரு இயக்குனர், ஒரு சூழலைச்சொல்லி பாடல் கேட்க, “இது தாலாட்டுப் பாடலாக இருக்கிறது நான் எழுதுவதை விட கவிஞர் எழுதினால் அழகாக வரும்.” என்று கண்ணதாசனிடம் அனுப்பி வைக்கிறார். பட்டுக்கோட்டை. இது காலம் அறிந்த வரலாறு. இப்படி மாண்புடன் வாழ்ந்தவர்கள் இருந்த துறையில்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை தங்களுக்கு ஞாபகப் படுத்த விரும்புகிறேன். ஏழாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதி சாதனை புரிந்திருக்கிறீர்கள். ஆனால் இத்தனை பாடல்களையும் இப்படி அரசியல் செய்துதான் எழுதியிருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் நினைக்கக்கூடுமே.

எண்பதுகளில் நடந்த சம்பவம் இது. உங்களுக்கும் தெரிந்திருக்கும். ஒரு படத்திற்கு இசையமைக்கச் சொல்லி இசைஞானியிடம் வந்த ஒரு தயாரிப்பாளர் அவரிடம், “என் நண்பர் ஒருவர் கவிஞர். அவரை இந்தப் படத்தில் பாடல் எழுத வைக்க வேண்டும்.” என்று கோரிக்கை வைக்கிறார். உடனே இளையராஜா, ”இந்த படத்தில் வைரமுத்துதான் பாட்டு எழுதுவார். அப்படின்னா நாளைக்கே ரெக்கார்டிங் உங்களுக்கு வசதி எப்படி” என்று கேட்டு தயாரிப்பாளரை திகைக்க வைத்தார். அந்த படம் மலையூர் மம்பட்டியான்.

இப்படி லட்டு லட்டான ட்யூன்களை உங்களுக்கு கொடுத்ததோடு மட்டும் இல்லாமல், உங்களுக்கு காட்ஃபாதர் போலவே இருந்திருக்கிறார் இளையராஜா. அப்படி அவர் இருந்ததாலதான் உங்களால் திரைத்துறையில் பேரெடுத்து நிலைக்க முடிந்தது. அப்படியிருந்த அவருக்கு எதிராக நீங்கள் வேற்று மொழியிலிருந்து இறக்கிய இசையமைப்பாளர்கள் மட்டுமே நாற்பதுக்கும் மேல் இருப்பார்கள். ஆனால் கதிரவன் ஒளிக்கும் காக்கா பொன் மினுக்குவதற்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள்களா என்ன. ரசிகர்கள். இதோ இப்போதும் பாலா படத்திற்காக பிரமாண்ட இசை கோர்ப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் இசைஞானி.

கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பிரிந்து இருப்பது என்பது வேறு. ஆனால் அவருக்கு எதிராக அரசியல் காய் நகர்த்துதல் என்பது வேறு. இப்படி உங்களுக்கு வாழ்வளித்த இசைஞானிக்கு எதிராக பல ஆண்டுகளாக அரசியல் செய்து வருகிறீர்கள். இத்தனை வயதும், அனுபவமும் கடந்த பிறகும் அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் வேதனை தருகிறது. நீங்களும் யுவனும் சேர்ந்திருக்கும் நிழற்படத்திலேயே தெரிகிறதே உங்களின் கைவண்ணம். இதை என் போன்ற பத்திரிகையாளர்கள் சிலர் மட்டுமே அறிவர்.

நியாயமாக பார்த்தால் அந்த பேட்டியின் தலைப்பு “எனக்கு வாழ்வளித்தவர் ராஜா” என்றோ, “நான் ராஜாவோடு சேர விரும்புகிறேன்.” என்றோ தான் வந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு பேட்டி எப்படி வரவேண்டும் என்பதை அந்த இதழின் ஆசிரியர் குழுவிற்கே யோசனை சொல்லும் அதிகாரம் படைத்தவர் நீங்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். அந்த அதிகாரத்தில்தான் அந்த கட்டுரையின் கட்டமைப்பை ராஜாவிற்கு எதிராக நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள். காவியக் கவிஞர் வாலி அவர்கள் வாழ்ந்த வரைக்கும் சொல்லிக்கொண்டிருந்தாரே ”ராஜா இசையில் பாடல் எழுதிய பிறகுதான் நான் வருமான வரி கட்ட ஆரம்பித்தேன்.” என்று. ஒரு சம்பவம் சொல்கிறேன், சென்ற தமிழ்ப்புத்தாண்டு அன்று கவிஞர்களுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் விருந்தளித்தார் இசைஞானி. அங்கு வந்திருந்தார் வாலி, அப்போது அவர், “ராஜா நான் வீட்ல சாப்பிடும் சாப்பாடே நீ போட்டதுதான். இங்கே வேறு வந்து சாப்பிடணுமா.” என்று குழந்தையாய் சிரித்தபடி கேட்டார். அதற்கு நானே சாட்சி. இத்தனைக்கும் ராஜா சார் வாய்ப்புக்கொடுத்து அந்த வாய்ப்பில் உயர்ந்தவர் அல்ல வாலி. அந்த பெருந்தன்மையை உங்களிடம் எதிர்பார்ப்பது தவறா. நான் கேட்கிறேன். வாலியை விட அனுபவத்திலும், ஆளுமையிலும் எந்த வகையில் உயர்ந்தவர் நீங்கள்?

இந்த சந்திப்பைப் பற்றி உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், ‘காதலர்கள் முத்தமிட்டால் தோன்றும் மின்னளவு, இந்த பூமி கொண்டிருக்கும் நீரின் கொள்ளளவு, ட்யூனுக்கு எழுதும் கவிதையின் சொல்லளவு இப்படி எல்லாம் தெரிந்த உங்களுக்கு யுவனோடு இணையும் இந்த தருணத்தில் அமைதி காக்க வேண்டும் என்பது மட்டும் எள்ளளவும் தெரியாமல் போனது ஏன். யுவன் இசையில் எழுதிதான் நீங்கள் புகழ் பெற வேண்டுமா அல்லது உங்கள் பாட்டை வைத்துதான் இனிமேல் யுவன் புகழ் பெற்வேண்டுமா இல்லையே. அப்புறம் ஏன் இந்த குதர்க்க பேட்டி.

அதுவும் கபிலன் வைரமுத்துவையும், மதன் கார்க்கியையும் இசைஞானி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறீர்கள். இசைஞானி யாரை வைத்து பாட்டு எழுதவேண்டும் என்பதைச் சொல்ல நீங்கள் யார்?. ஏன் கோடம்பாக்கத்தில் வேறு கவிஞர்களே இல்லையா. அண்ணன் அறிவுமதி, இப்போதும் இளமை மாறாமல் எழுதும் பழநிபாரதி, தாமரை, பரபரப்பாக இருக்கும் நா.முத்துக்குமார், ஹிட் அடிக்கும் யுகபாரதி,, கபிலன், விவேகா, சிநேகன், இவர்கள் எல்லாம் கவிஞர்கள் இல்லையா எல்லோரும் அரிசி மண்டியிலா வேலை பார்க்கிறார்கள்?. நான் குறிப்பிட்டவர்களில் யாரும் சொகுசு பங்களாவில் அமர்ந்த பின்னும் பாடல் எழுதுவதற்காக மல்லுகட்டிக்கொண்டிருக்கவில்லை.

கவிப்பேரரசரே… உங்களுக்கு ஒரு கேள்வி நீங்கள் பாடல் எழுத வந்து இத்தனை ஆண்டுகளில் பாடல் வெளியீட்டு விழாவிலோ, அல்லது உங்கள் பதிவுகளிலோ எங்காவது சக கவிஞர்களை பற்றி பாராட்டி பேசியதுண்டா, எழுதியதுண்டா?

வாகை சூடவா என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நீங்கள் எழுதிய பாடலான ‘முடக்கத்தான் கீரையை கொடுத்து மடக்கத்தான் பார்க்குற’ என்பதை மட்டும்தானே சொன்னீர்கள். அதே படத்தில் அருமையான பாடலான ‘தஞ்சாவூரு மாடத்தி..’ என்ற பாடலை எழுதிய வெ.ராமசாமியைப் பற்றி பாராட்டி பேசீனீர்களா? இல்லையே..

ஆனால் தன் காலம் முழுதும் யாராலும் தோற்கடிக்க முடியாத கவிஞர் வாலி, அவர்கள் ஒரு பதிப்பில், ”பழநிபாரதியும் நானும் அபூர்வம்” என்று பதிவு செய்திருக்கிறார். அதோடு அத்தனை இளைய கவிஞர்களோடும் பொது மேடையில் தோன்றி அவர்களை வானளாவ புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இப்படி தலைமுறை தாண்டிய தமிழ்கவிஞர்களை தன் தோளில் தூக்கி தண்டுவடம் வலிக்க வலிக்க கொண்டாடி மகிழ்ந்தார் அந்த தாடி வைத்த தமிழ்ச் சிங்கம்.
அந்தப் பேட்டியில் யுவன் ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்திற்கே சாரை பாடல் எழுதவைக்க முயன்றோம் முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். உங்களை அணுகிய பிறகும் அது நடக்கவில்லை. நீங்கள் எழுத சம்மதிக்கமாட்டீர்கள் காரணம் யுவன் அப்போதுதான் வளர்ந்து வந்தார். உங்கள் தங்கத்தமிழை வைத்து அவர் மேலும் தழைத்து விடக்கூடாது என்ற அக்கறைதான் காரணமாக இருக்கும். . ஆனால் நீங்கள் இல்லாத அந்த படத்திற்கு பழநிபாரதி எழுதிய பாடல்கள் இன்றளவும் ஹி.ட். இதற்காகவே பழநிபாரதிக்கு நீங்க தனியாக பாரட்டு தெரிவித்திருக்கேண்டும். கற்பகம் படத்தில் கண்ணதாசனுக்குப் பதில் வாலி எழுதி அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதன் வெற்றி விழாவில் கலந்து கொண்ட கண்ணதாசன் அவர்கள் “கற்பகம் படத்தின் அத்தனை பாடல்களையும் ”வாலி எழுதி அத்தனை படல்களும் பிரபலமாகியிருக்கிறது. இதற்காகவே வாலிக்கு நான் தனியாக ஒரு பாராட்டு விழா எடுக்கவேண்டும்.” என்று மனம் திறந்து பாராட்டினார். அந்த மனப்பாங்கு உங்களுக்கு இல்லையே ஏன்?

மேலும் அந்த பேட்டியில் ”சகோதரி ஜீவா கையால் நான் பலமுறை உணவருந்தியிருக்கிறேன்” என்று சொல்லியிருந்தீர்கள். வைரமுத்து அவர்களே ஜீவா அம்மா போட்டதும் ராஜா வீட்டு சோறுதானே?. நியாயமாக பார்த்தால் நீங்கள் “ராஜா எனக்கு சோறு போட்டார் என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்.

ஏதோ யுவன் மீது திடீர் பாசம் வந்துவிட்டதைப் போல வாஞ்சையோடு வார்த்தைகளை அடுக்குகிறீர்கள். இதைப்படிக்கும் அப்பாவி வாசகர்கள், உங்களின் பாசத்தைப் பார்த்து சிலிர்த்துப் போவார்கள். ஆனால் உங்கள் சுயரூபத்தை சுருட்டி வீட்டிற்குள் வைத்திருக்கிறீர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் எந்த ஒரு அறிமுகக் கவிஞனுக்கும் கிடைக்காத பொன்னான வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் இளையராஜா.என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்.. அதையும் நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டீர்கள். என்பது வேறு விஷயம். இப்படி உங்களுக்கு வாழ்க்கை கொடுப்பதற்கு அன்று இளையராஜா காரணமாக இருந்தார். இப்போது உங்கள் மார்க்கெட் சரிந்த நிலையில் உங்களை தூக்கி நிறுத்துவதற்கும் இளையராஜாவின் மகன் யுவன்தான் தேவையாக இருக்கிறார். ஆக மொத்தம் உங்கள் வாழ்க்கை நலத்திற்காக இளையராஜாவின் குடும்பமே ரத்ததானம் செய்திருக்கிறது. இதுதான் உண்மை.

கடைசியாக ஒரு வார்த்தை நானும், உலகம் முழுதும் பரவி இருக்கும் இசைஞானியின் ரசிகர்களும் எதிர்பார்ப்பதெல்லாம் உங்களின் அடுத்தப் பேட்டியில் இசைஞானிக்காக நீங்கள் செலுத்தும் நன்றியைதானே தவிர, இசைஞானிக்கு எதிராக நீங்கள் செய்யும் அரசியலை அல்ல.

அன்புடன்
பாசத்திற்குரிய பத்திரிகையாளன்,

தேனி கண்ணன்

Read previous post:
பி.சி.ஸ்ரீராம் சார் பாராட்டினார்… ‘ஹலோ’ கந்தசாமி நெகிழ்ச்சி

வீரம் படத்தில் ஒரு கூலித் தொழிலாளியை சுருக்கு கயிற்றில் மாட்டி தொங்க விடுவார்களே, அந்த தொழிலாளியை நினைவிருக்கிறதா? அவர்தான் ‘ஹலோ’ கந்தசாமி. இதுவரை சுமார் பதினெட்டு படங்களில்...

Close