ஓ… அதுவா? பிங் பாங்க்ல கிடைக்கும் போங்க…! -பாங்காக் பயண அனுபவங்கள் -4 -ஆர்.எஸ்.அந்தணன்

சதீஷின் விரல்கள் ஏன் நடுங்கின என்பதை அறிந்து கொள்ள நான் ஆர்வப்படவில்லை. ஏனென்றால் காலை டிபனுக்கே கரப்பான் பூச்சியை வறுத்துப்போட்ட பயலுகளாச்சே இவனுக! ஆல்பத்துக்குள்ளே என்ன வச்சுருப்பானுங்கன்னு தெரியாதா? ‘ஜி… ஆல்பத்தை அவன்கிட்ட கொடுத்துட்டு மூட் இல்லேன்னு சொல்லிருங்க’ என்றேன். ‘வேணும்னா இங்க நல்ல இட்லி தோசை கிடைக்கிற இடம் ஏதாவது இருக்கான்னு கேளுங்க. அதுபோதும்’ என்று நான் நாக்கு ருசி ஏரியாவுக்குள்ளேயே நிற்க, அதற்குள் முந்திக்கொண்டர் லண்டன் நண்பர். ‘இங்க எங்க பாஸ் கிடைக்குது இதெல்லாம்?’ என்றார்.

‘நீங்க ஏன் அலையணும்? நானே அழைச்சுட்டு போறேன்’ என்றார் ஆட்டோக்காரர். ‘அதெல்லாம் நாங்களே பார்த்துக்குறோம். எடத்தை மட்டும் சொல்லுங்க’ என்று நண்பர் தொணதொணக்க, ‘பிங் பாங்…’ என்று கூறிவிட்டு அசுவாரஸ்யமாக ஆட்டோவை நிறுத்தினார் டிரைவர். அதற்குள் நாங்கள் செல்லுமிடம் வந்திருந்தது.

நம்ம ஊர் ரங்கநாதன் தெருவே கொஞ்சம் நாகரீகமாக குப்பையில்லாமல் இருந்தால் அதுதான் இன்ட்ரா மார்க்கெட். நாங்கள் இறங்கிய இடமும் அதுதான். இரு புறமும் அழகான பிளாட்பார கடைகள். செருப்பில் துவங்கி, எலட்க்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரைக்கும் அழகாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். எங்கள் இந்திய முகத்தை பார்த்ததுமே எங்கிருந்துதான் வந்தானோ அந்த கிருஷ்ண பரமாத்மா? ‘யூ வாண்ட் இண்டியன் ஃபுட்? ப்ளீஸ் கம்’ என்றான். எங்களைப் போல பசி ஏப்பக்காரர்களை படக்கென அமுக்கவென்றே திரிகிறார்கள் ஏராளமான புரோக்கர்கள். சந்து பொந்தெல்லாம் எங்கெங்கோ அவன் எங்களை அழைத்துக் கொண்டுபோக, நம்ம ஊரு தேவர் மெஸ்சை மிஞ்சுற அளவுக்கு இங்க எவனோ இருக்கான் என்கிற நம்பிக்கையோடு ஓடினோம் அவன் பின்னால்.

… ந்தா. என்று அவன் கை காட்டிய இடம், ஒரு சிறிய ரெஸ்ட்ராரென்ட். பார்க்க அவ்வளவு சுத்தம். ஆனால் ஓட்டலுக்கு உரிய மசாலா வாசனையே அங்கு இல்லை. ஏன்ஜி… இங்கயும் நமக்கு கட்டைய குடுத்துருவானுக போலிருக்கே என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே மெனுவை வைத்தார் வெயிட்டர். சிக்கன் பிரியாணியை தவிர வேறொன்றுமில்லை சொல்வதற்கு தோதாக. சரி, அதையே கொடுங்க என்ற ஆர்டர் பண்ணிவிட்டு காத்திருந்தால், நமது நம்பிக்கையில் விழுந்தது சரியான கோடாலி வெட்டு.

எப்படியோ முழுங்கி தொலைத்துவிட்டு மறுபடியும் ஒரு ஆட்டோவில் ஏறி ரூமுக்கு திரும்பலாம் என்றால், ‘ஹாய் இண்டியன்ஸ்… யூ வாண்ட் பூம் பூம்’ என்றபடி ஆல்பத்தை தாரை வார்த்தான் அந்த இன்னொரு ஆட்டோக்காரனும். நான் அங்கிருந்த ஐந்து நாட்களில் எந்த ஆட்டோவில் ஏறினாலும், எந்த டாக்சியில் ஏறினாலும் தயாராக ஒரு ஆல்பத்தை நீட்டுகிறார்கள் ஒவ்வொரு டிரைவரும். சொர்க்கத்தில் இவர்களுக்கு சாவியே இல்லாத பூட்டுகளும், பூட்டுகளே இல்லாத கதவுகளும் நிச்சயம்.

மீண்டும் ஓட்டலுக்கு வந்திறங்கினோம். லிஃப்ட்டை திறந்து உள்ளேயிருந்து வெளியேறிய இந்திக்காரர்கள் மூவர், ஒருவித மந்தகாச சிரிப்போடு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இன்றைய இரவின் உறக்கம் இந்த நாய்களால் கெடப் போகிறது என்பதை அறியாத சிறு குழந்தைகளாக நாங்கள் அவர்களை கடந்து அறைக்குள் நுழைந்தோம். ஒரு மணி நேரம் ஸ்லிப்பை கொடுக்கிறோம்… அப்புறம் கௌம்பி புத்தர் டெம்பிள் போறோம் என்றேன் நான். வாட்சை பார்த்த லண்டன் நண்பர், கோவிலுக்கு நீங்க போங்க. எனக்கு இன்னொரு வேலை இருக்கு என்றார் முகமெல்லாம் பிரகாசிக்க.

நான் புத்தர் கோவிலுக்கு போக இரண்டு காரணம் இருந்தது. ‘ஆதிபகவன்’ படத்தில் ஒரு புத்தர் கோவிலை காட்டியிருந்தார் டைரக்டர் அமீர். திரையில் பார்க்கும்போதே வாழ்க்கையில ஒரு முறையாவது அங்கே போகணும் என்கிற எண்ணம் தோன்றியிருந்தது. அது நிறைவேறுமல்லவா? அது முதலாவது. இன்னொன்று, இரண்டு லட்ச ரூபாயை கோயமுத்துர்காரன் ஒருவனிடம் ஏமாந்து மூன்று வருஷம் ஆகிவிட்டது. அதை பெற்றுத் தருகிற வேலையை முருகன், பிள்ளையார், காமாட்சி, மீனாட்சி என்று சுமார் ஒரு டஜன் உள்ளூர் சாமிகளுக்கு வழங்கியிருந்தேன். ஒருத்தருக்கும் துப்பில்லை. வெளியூர் புத்தரை வேண்டினாலாவது வேலைக்கு ஆகுமா என்பது. அதனால் எண்ணத்தை திசை திருப்பாமல் நான் அதிலேயே குறியாக இருக்க, என் குறிப்புணர்ந்து விலகிக் கொண்டார் லண்டன் நண்பர்.

சும்மா அந்த ஏரியாவில் நடந்து போய் வேடிக்கை பார்க்கலாம். அதுக்காகவாவது வாங்களேன் என்கிற அவரது அழைப்பை நான் நிராகரித்தேன். அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை இரண்டு நாட்கள் கழித்துக் கூட வைத்துக் கொள்ளலாமே? என்னுடன் புத்தர் கோவிலுக்கு வர சதீஷும் சம்மதித்தார். நாங்கள் நாலு மணி சுமாருக்கு ஒரு டாக்சியை பிடிக்க தீர்மானித்தோம். ஆறு மணி சுமாருக்கு நான் வேறொரு ஆட்டோவை பிடிச்சுக்குறேன் என்றார் லண்டன் பார்ட்டி.

நாங்கள் தங்கியிருந்த ஒட்டலில் இருந்து சுமார் பதினைந்து கி.மீ தொலைவில் இருந்தது அந்த புத்தர் கோவில். நல்லவேளையாக எங்களை அழைத்துப் போக வந்திருந்தவர் ராம் அனுப்பிய ஆள். அதனால் நாங்கள் இன்னொரு ஆல்பத்தை பார்க்க நேரவில்லை என்பதே முதல் ஆறுதல். சார்… இங்கே 95 சதவீதத்தினர் புத்த மதத்தை சேர்ந்தவர்கள்தான் என்று ஆரம்பித்து காரில் போகும்போதே நிறைய விஷயங்களை கூறிக் கொண்டே வந்தார் அவர்.

நம்ம ஊர் கோவில் வாசலில் விற்பதை போல பூ விற்கிறார்கள். பத்தி விற்கிறார்கள். சூடம்தான் இல்லை. கோவிலின் ஓரத்தில் பசு மடம் இருக்கிறது. பிரார்த்தனைக்காக பசுவை வாங்கி கட்டிவிட்டு போய்விடுவார்களாம். எல்லாம் நமது ஊரைப் போலவே இருக்கிறது, நடக்கிறது அங்கே. இதையெல்லாம் விட பெரிய ஆச்சர்யம், விஷ்ணு, சிவன், பார்வதி சிலைகளும் அந்த கோவிலில் இருக்கிறது. திரும்புகிற இடமெல்லாம் நீக்கமற இருக்கிறார் பிள்ளையார். மறக்காமல் உண்டியலும் வைத்திருக்கிறார்கள். ஒரு நிமிடம் எங்காவது கந்தர்சஷ்டி கவசம் கூட ஒலித்துவிடுமோ என்கிற சந்தேகத்தில் காதுகளை மேயவிட வேண்டியிருக்கிறது.

இறந்தவங்களை இங்க கொண்டு வந்து வச்சு பிரார்த்தனை பண்ணுவாங்க. பத்தாம் நாள் காரியமெல்லாம் இங்கேதான் நடக்கும் என்று ஒரு விஸ்தாரமான இடத்தையும் காட்டினார். அது கோவிலின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. ஆச்சர்யம் விலகாமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே வந்த நான் போன காரியத்தை மறக்க முடியாதே? புத்தரிடம் வேண்டிக் கொண்டேன். ‘அண்ணே… வெளியூரெல்லாம் செலவு பண்ணிட்டு வந்திருக்கேன். அந்த இரண்டு லட்சத்தை மீட்டுக் கொடுத்துரு…’ (வேண்டி மாசம் ரெண்டு இருக்குமா? ம்ஹூம்… அந்த விஷயத்தில் புத்தரையே காலி பண்ணிவிடுவான் போலிருக்கிறது அந்த ஃபிராடு)

சுமார் எட்டு மணிக்கு ரூமிற்கு திரும்பினோம். எங்கள் கார் ரிசப்ஷன் ஓரமாக நிற்க, காருக்குள்ளிருந்து நாங்கள் இறங்கி கடக்கும்போது எங்களை கடந்தது காலையில் நாங்கள் பார்த்த அதே இந்திக்காரர்கள். இந்த முறை இந்த நால்வரும் அவர்களுடன் மேலும் இரு ‘பெண்டிர்’ களும் இருந்தனர். ‘ஆல்பத்துக்கு பதிலா ஆளையே அனுப்பி வைச்சுட்டானுங்க போலிருக்கே’ என்றபடி நானும் சதீஷும் அர்த்தபூஷ்டியோடும், கொஞ்சம் இஷ்டபூர்த்தியோடும் அந்த அழகிகளை பார்த்துக் கொண்டே மற்றொரு லிப்ஃட்டில் ஏறினோம். இன்னும் லண்டன் நண்பர் அறைக்கு வந்து சேர்ந்திருக்கவில்லை.

‘நாற்பது ஐம்பது வருஷத்துக்கு முன்னாடியே இந்தியை எதுத்தவனுங்கடா நாங்க, எங்ககிட்டேவா’ என்று கூக்குரல் கொடுக்க வேண்டிய நேரம் இன்னும் சற்று நேரத்தில் வந்து கொண்டிருந்தது எங்களை நோக்கி…

(சுற்றுலா தொடரும்)

2 Comments
  1. sathish says

    where is 3rd part ?? very difficult to search…

  2. Ghazali says

    அந்த ஃப்ராடு இந்த பாகத்தை வாசிக்க நேர்ந்தால்.. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு தூக்கு (அ) ஒரு பாட்டில் விஷம் குடித்து செத்துச் செத்து சாக வேண்டியிருக்கும்.
    -கஸாலி

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
செல்வராகவனுக்கு அமெரிக்காவிலிருந்து வந்த சிக்கல்! -ஆரம்பிச்சுருப்பா ‘இரண்டாம் கலகம்!’

ஆரம்பிச்சுருப்பா இரண்டாம் கலகம்! பெரிய டைரக்டர்கள் பலரும் செய்கிற முதல் தவறு இதுதான். ஒரு தலைப்பை கவுன்சிலில் பதிவு செய்வதற்கு முன்பாகவே படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுவது. இவர்கள் ஒரு...

Close