‘கட்டழகி நானப்பா… கொட்டி வச்ச தேனப்பா…’
‘இந்த புறா ஆட வேண்டும் என்றால் இளவரசர் பாட வேண்டும்’ என்றெல்லாம் அந்த காலத்தில் நறுக் சுருக்கென்று வசனங்களை வைத்து அதற்கப்புறம் ஆட்டத்தை ஆரம்பிப்பார்கள். ‘இந்த படம் ஓட வேண்டும் என்றால் நல்ல புறாவாக பார்த்து ஆட வைக்க வேண்டும்’ என்கிறார்கள் இந்த காலத்து ரசிகர்களும் தியேட்டர்காரர்களும். அதற்கேற்ப இயக்குனர்களும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை என்று நாலு பக்கமும் தேடித் திரிந்து புறாக்களை கூட்டி வருகிறார்கள். ஆட்டமும் அழகு. ஆளும் அழகு என்று ரசிகர்கள் சந்தோஷப்பட்டால் போதும், படம் ஆஹா ஓஹோ…
அண்மையில் ‘அழகிய பாண்டிபுரம்’ என்ற படத்திற்காக இந்தி நடிகை ஆக்னஸ் என்ற அழகிய புறாவை கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தின் ஹீரோவான புதுமுகம் இளங்கோவுடன் அவர் ஆடிப்பாடும் காட்சி படமானது. ‘கட்டழகி நானப்பா… கொட்டி வச்ச தேனப்பா…’ என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஆக்னஸ் போட்ட ஆட்டத்திற்கு, இன்னும் கொஞ்ச காலம் தமிழ்சினிமாவே பித்து பிடித்து திரியும் போலிருக்கிறது.
அண்டை வீட்டுக்காரர்களுடன் அடிதடி சண்டை வேண்டாம். நட்பா இருங்க என்பதை வலியுறுத்துகிற படம்தான் இந்த அழகிய பாண்டிபுரம். புதுமுகம் இளங்கோவுக்கு ஜோடியாக நடிக்கிறார் அஞ்சனா கீர்த்தி. முதலில் பாட்டு காதில் நுழைந்தால், படம் தானாக கருத்தில் நுழையும் என்று நினைத்தாராம் படத்தின் இயக்குனர் ந.ராயன். இதற்காக திருக்குறளுக்கு இசையமைக்க கிளம்பியிருக்கும் பரத்வாஜை வற்புறுத்தி இசையமைப்பாளராக்கியிருக்கிறார்கள். அவரும் தமிழ்சினிமாவுக்காக ட்யூன் போட்டு சில வருஷங்கள் ஆகிவிட்டதல்லவா?
புத்தம் புது ட்யூன்களை அள்ளி கொடுத்திருக்கிறாராம். நம்ம படம் முதல்ல மியூசிக்கல் ஹிட். அந்த மூட்லேயே தியேட்டருக்கு வர்றவங்களுக்கு இருக்கு அற்புதமான மெசேஜுடன் கூடிய அழகான படம் என்கிறார் ராயன்.