கரிகாலன் வழங்கும் முகவரி
90களின் ஆரம்பத்தில் தனது யதார்த்தமான நடிப்பால் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட நடிகர், கரிகாலன். தொடர்ந்து திரையுலகில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், நிலம் மற்றும் கட்டுமானத்துறையில் கால் பதிக்க ஆரம்பித்தவர், நான்கு ஆண்டுகளில் 1 லட்சம் வீட்டுமனைகளை விற்றுச் சாதனை படைத்ததுடன், இன்று நிலம் மற்றும் கட்டுமானத்துறையில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்.
இவரது கேகேகே எம்பயர் நிறுவனம் வழங்கும் சென்னை – புதுப்பாக்கத்தில் கிரீன் பீஸ் நிறுவனம் கட்டும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய 100 சொகுசு வீடுகளடங்கிய தி அட்ரஸ் என்னும் குடியிருப்பு வளாக அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. எழுத்துலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி உலகமுழுவதிலும் கணிசமான அளவில் தனக்கென்று ஒரு வாசகர் வட்டத்தை வைத்திருக்கும் பாலகுமாரான், தி அட்ரஸை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கேகேகே எம்பயர் குழுமத்தின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மத்தியில் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாகச் சிறப்புரையாற்றினார் பாலகுமாரன்.
தனது பேச்சில் சங்க கால கரிகாலச் சோழனுடன் நடிகர் கரிகாலனை ஒப்பிட்டுப் பேசிய பாலகுமாரன், “ கரிகாலன் என்று பெயர் வைத்தாலே சும்மா இருக்க முடியாது… எதையாவது கட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.. அதுவும் தனக்காக அல்லாமல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு… அந்த வகையில் அந்தக் கரிகாலன் போன்றே நமது கரிகாலனும் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக பொதுமக்களுக்கென்று வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்… கரிகால்பெருவளத்தானுக்கு எப்படி அவனது அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளும் தளபதிகளும் போர்வீரர்களும் உறுதுணையாக இருந்து அவனை வெற்றிப் பேரரசனாக ஆக்கினார்களோ அதுபோலவே நீங்களும் (கேகேகே எம்பயர் குழும ஊழியர்களும்) இந்தக் கரிகாலனின் முயற்சிகளில் தொடர்ந்து வெற்றிபெற உறுதுணையாக இருக்க வேண்டும்…
சிகரெட் பழக்கம் இருந்தால் விட்டுவிடுங்கள்… நான் அந்தப் பழக்கத்தை விடமுடியாதவனாக இருந்து தொடர்ச்சியாகப் புகைப்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் எனது உடல் நலம் பாதிக்கப்பட மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதனை விட்டுவிட்டேன்… கடந்த 20 வருடங்களாக நான் புகைப்பிடிப்பதில்லை எனினும் இன்னும் அதன் பாதிப்பு இருக்கிறது… சிகரெட் , மது ஆகியவற்றால் துளியளவேனும் நன்மை விளையப்போவதில்லை…
இன்று பலரும் கடின உழைப்பாளிகளாகத் தான் இருக்கிறார்கள்… ஆனால், ஜெயிப்பதற்கு கடின உழைப்பு மட்டும் பத்தாது… வெறிகொண்ட உழைப்பு வேண்டும்… அப்படி உழைப்பதற்கு உங்களது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்… குறைவான தூக்கம் சரியான உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உணவு மற்றும் தியானம் அவசியம்… இப்படி ஒரு வாழ்க்கை வாழவேண்டுமானால் மது போதை பழக்கத்தை நீங்கள் விட்டொழிக்க வேணடியது அவசியம்…
மேலும், காதல் – காதலால் நமது பொன்னான நேரங்கள் வீணாகிறது… அந்த நேரங்களில் ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்து வாழ்வில் முன்னேறினால் நாம் ஆசைப்பட்ட பெண்ணை அல்லது மாப்பிள்ளையை வீட்டிலேயே பார்த்துத் திருமணம் செய்துவைப்பார்கள்… அதன் பிறகு அவர்களைக் காதலித்துக் கொள்ளலாம்…
இலக்கை அடையவேண்டும் என்கிற குறிக்கோளுடன் இருக்கும் போது அர்ஜுனன் போன்று செயல்படவேண்டும்… துரோணரிடம் பயின்ற மாணாக்கர்களில் தர்மன், பீமன் , துரியோதனன் ஆகியோரை விட அர்ஜுனனே தலைசிறந்த வில்லாளனாக இருந்ததற்குத் தனது பணியில் அவன் காட்டிய கூர்மையும் ஈடுபாடுமே காரணம்…
பாராட்டுக் கிடைக்கவேண்டும் என்பதற்காகப் பணியாற்றக்கூடாது… நமது கடமையைச் செய்யவேண்டும்… இவனால் மட்டுமே இது சாத்தியம் என்று நமது சக நண்பர்கள் நினைக்க வேண்டும்… அந்த அளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் நமது வெற்றியின் அடையாளம்… அந்த நம்பிக்கை நம்மை எட்ட முடியாத இடங்களுக்கு இட்டுச் செல்லும்…
உங்களனைவருக்கும் வெற்றிகள் கிடைக்க எனது குரு ராம்சுரத்குமாரை பிராத்தனை செய்துகொள்கிறேன்…” என்று பேசினார்.
தனது பேச்சின் நடுவே கிறிஸ்துவ மதக் கீர்த்தனைகளை அச்சாரம் பிசகாமல் பாடிக்காட்டி அதிலுள்ள நல்ல விஷயங்களை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாலகுமாரன் பேசியது குறிப்பிடத்தக்கது.
தங்களது செயல்பாடுகள் குறித்து கரிகாலன் கூறிய போது, “ அனைவருக்கும் ஒரு வீடு அதுவே எங்களது இலக்கு… ஏழை, நடுத்தர மற்றும் பணக்காரர்கள் எல்லோருமே தங்களுக்கென்று ஒரு வீடு வேண்டும் என்று நினைப்பார்கள்… அவர்களது பொருளாதார நிலைக்கு ஏற்ப தரமான வீட்டுமனைகள் மற்றும் வீடுகளை வழங்க வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்..” என்றார்.
தி அட்ரஸ் அறிமுக நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஊழியர்களின் அறிவுத்திறன் மற்றும் தன்னம்பிக்கை வளர்க்கும் விதமான போட்டிகள் நடைபெற்றது.